பத்திரிகையாளர், நடிகர், அரசியல் விமர்சகர் சோ காலமானார்!
துக்ளக் இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியரான சோ, கடந்த சில மாதங்களாகவே நோய் வாய் பட்டிருந்தார். இருந்தாலும் தனது பத்திரிகை பணியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவர், டிசம்பர் 7 ந் தேதி அதிகாலை 4.05 க்கு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82.
அமரர் எம்.ஜி.ஆர், பிரதமர் நரேந்திரமோடி, தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு உற்ற நண்பராக விளங்கியவர் சோ. வருடந்தோறும் நடந்து வரும் துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்து கொள்ளாத அரசியல் தலைவர்களே இல்லை என்கிற அளவுக்கு பலருக்கும் அரசியல் ஆலோசராக விளங்கியவர் சோ. முக்கியமாக ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் சோவின் அட்வைஸ் நிறையவே உண்டு. அவரால் பல முறை அரசியல் கூட்டணிகள் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன.
அதுமட்டுமல்ல, பெரும் பெரும் ஆணவக்காரர்களையே கூட தன் காலில் விழ வைத்த ஜெயலலிதா, சோவின் காலில் விழுந்து ஆசி பெற்றதெல்லாம் வரலாறு.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் பக்கத்து அறையிலேயே அனுமதிக்கப்பட்ட சோ, ஜெ.வின் மறைவை அறியாமலே இறந்ததுதான் சோகம்!
அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் மற்றும் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பின்குறிப்பு- இவருக்குப் பின் இவரது துக்ளக் இதழ், குமுதம் நிறுவனத்தால் தொடர்ந்து நடத்தப்பட இருக்கிறது!