கத்திக்குத்து, கலவரம், உயிர்பலி! அஜீத் அஞ்சியது இதற்காகதான்!

எந்த நடிகரும் செய்யத் துணியாத வேலையை அஜீத் செய்ய நினைத்தது இதற்காகதான் போல… என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டன ‘விஸ்வாசம்’ கொண்டாட்டங்கள். தனது ரசிகர் மன்றத்தை துணிச்சலாக கலைத்து விட்டு, அதற்கப்புறமும் அது குறித்த முடிவை மாற்றிக் கொள்ளாமலிருக்கிறார் அஜீத். ஏனிப்படி செய்கிறார் என்று முணுமுணுத்த அத்தனை பேருக்கும் இப்போதுதான் ரிசல்ட் தெரிய வந்தது. யெஸ்… கட்டுக்கடங்காத உற்சாகத்தில் திளைத்த ரசிகர்கள் சிலரால் அஜீத்தின் புகழில் ஆங்காங்கே கிழிசல். இதற்கு அவர் என்ன செய்வார்? என்று கேட்டாலும், தடுக்க வேண்டிய பெரும் கடமை அவருக்கும் இருக்கிறது.

விழுப்புரம் அருகே திருக்கோவிலூரில் பிரமாண்டமான அஜீத்தின் திருவுருவ(!) கட் அவுட் மீது ஏறிய ஆறு பேர், அங்கு நின்று கொண்டு பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். சில நிமிஷங்களில் கட் அவுட் அப்படியே தலைகுப்புற சரிய… ஒரு சிறுவன் ஸ்பாட்டிலேயே அவுட். சாவை தேடிப்போய் பற்றிக் கொள்கிற இந்த வினோதத்தை என்னவென்று கடிந்து கொள்வது? கொண்டாட்டமாக போன மகன், பிணமாக திரும்பும்போது பெற்றோரின் மனநிலை என்னவாக இருக்கும்?

இன்னொரு சம்பவம். இந்த கொடூரத்தை செய்தவனின் பெயரே அஜீத் குமார்தான். விஸ்வாசம் படத்தை பார்க்க அப்பா பணம் தர மறுத்ததால் அவரது முகத்தில் தீ வைத்திருக்கிறான். 40 சதவீத தீக் காயங்களோடு தப்பியிருக்கிறார் அப்பா. வேடிக்கை என்னவென்றால், விஸ்வாசம் கதையின் மையம் என்ன தெரியுமா? குடும்ப உறவுகள் எப்படியிருக்க வேண்டும் என்பதுதான்!

வேலூரில் தியேட்டருக்குள் சீட் பிடிக்கும் தகராறில் இருவருக்கு கத்திக் குத்து. ஒருவர் கவலைக்கிடமாம். இன்னும் நிறைய இடங்களில் அஜீத் ரஜினி ரசிகர்களுக்கு இடையே கலவரம். மோதல்.

இந்த விவகாரங்கள் எதையும் அஜீத் என்ற தனி மனிதனால் கட்டுப்படுத்த முடியாதுதான். குறைந்தபட்சம் தம்பிகளா… இப்படியெல்லாம் மோதிக் கொள்ளாதீங்க. அமைதி வழியில் இந்த வெற்றியை சுவைங்க என்று ஒரு அறிக்கையாவது தரலாம்.

வழக்கம் போல எனக்கென்ன என்று இருப்பது, அஜீத்தின் புகழுக்கும் குணத்திற்கும் அழகல்ல! நியாயமும் அல்ல!

Read previous post:
வீட்டை அடியோடு துடைத்து(?) எஸ்கேப்! ஹீரோவுக்கு நடிகை கொடுத்த அதிர்ச்சி!

Close