அஞ்சான்- விமர்சனம்

‘அண்டர் வேல்டு’ கதைகளில் எல்லாம் ஒரு அண்டர் ‘ஓல்டு’ தத்துவம் இருக்கும்! அது…? ‘துரோகிக்கு மருந்து, தொண்டைக்குழியில துப்பாக்கிதான்’ இந்த படத்திலும் அப்படி சில துரோகிகளை பந்தாட கிளம்புகிறார் சூர்யா. சமயத்தில் தியேட்டருக்குள்ளேயும் சுட்ருவாரோ என்கிற அச்சத்தோடு நகர்கிறது அந்த ‘டுமீல் டுமீல்’ நிமிடங்கள்! வேலு நாயக்கரை வியந்து, பாட்ஷா பாய்க்காக கைதட்டி, ‘தலைவா’வில் தடுக்கி விழுந்து எப்படியோ விடாமல் டிராவல் பண்ணி தமிழனுக்கு ஜுரத்தையும் மாத்திரையையும் மாறி மாறி கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் மும்பை தாதாக்கள். ‘பெரிசாக ராஜு பாய் மட்டும் என்னத்தை கிழித்திருக்க போகிறார்?’ என்று தியேட்டருக்குள் போனால், மற்றதையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள்… அந்த டூத் பிக் சூர்யாவை ரசித்துக் கொண்டேயிருக்கலாம். அவரை வடிமைத்தது இயக்குனரோ, காஸ்ட்யூமரோ, மேக்கப் மேனோ, ஆர்ட் டைரக்டரோ… யாராகவும் இருக்கட்டும். சூர்யாவின் கெட்டப்புகளில் ‘அஞ்சான்’ மாஸ்டர் பீஸ்!

அமிதாப்பச்சன் ஹைட், தாஜ்மஹால் ஒயிட் என்கிற மாறாத தத்துவம் போலவேதான் டாண் பட கதைகளின் கதியும், விதியும்! ஃபார்முலா மாறாமல் நகர்கிறது அஞ்சானும். ஆனால் சில காட்சிகளில் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டுகளை வசமாக வைத்து, மாஸ் ஹீரோவிடம் கால்ஷீட் வாங்கிய கடமையை செவ்வனே முடிக்கிறார் டைரக்டர் லிங்குசாமி.

கதை? தனது அண்ணன் ராஜுபாயை தேடி மும்பைக்கு வருகிறார் தம்பி சூர்யா. ராஜுபாயின் கூட்டாளிகள் ஒவ்வொருவராக அவர் தேடிச் சென்று விசாரிக்க விசாரிக்க, அண்ணனை பற்றிய தகவல்களை கொட்டுகிறார்கள் அவர்கள். ஒருகட்டத்தில் அந்த ராஜுபாயே அவர்தான் என்று தெரியவருகிறது எதிரிகளுக்கு. (ஆனால் ரசிகர்களுக்கு அவர் நொண்டி நொண்டி டாக்ஸியில் ஏறும்போதே தெரிந்துவிடுகிறது. ஹ்ம்ம்ம்… அந்தளவுக்கு டாண் படங்களை பார்த்து பார்த்து வளர்ந்த மூக்காச்சே, மோப்ப சக்தி குறையுமா?) அவர்கள் தப்பிக்க நினைத்தாலும், சகட்டுமேனிக்கு பொளந்து போடுகிறார் சூர்யா. கடைசியாக தன் நண்பனை கொன்ற அந்த இண்டர்நேஷனல் தாதாவை அதே துரோகத்தை கொண்டே வேரறுக்க, சுமார் இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடங்களுக்கு பிறகு ‘அஞ்சான்’ இனிதே நிறைவு!

‘புல்லாங்குழலின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்… ’ என்று ‘ஆனந்தம்’ படத்தில் ஆரம்பித்த லிங்குசாமியின் ஒரு ரூபாய் சென்ட்டிமென்ட், அஞ்சான் வரைக்கும் தொடர்கிறது. (ரிசர்வ் பேங்க் திடீர்னு ஒத்த ரூவா காயினை ஒழிக்காமலிருக்கணும், பகவானே! ) கதையில் எதிர்பாரா திருப்பம் நிகழ, லிங்குசாமி தன் எல்லா படங்களிலும் ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டு உதைக்க விடுவாரே, அப்படியொரு பரபரப்பு இந்த படத்திலும் இருக்கிறது. அந்த மாபெரும் டாக்ஸி ஸ்டேன்டுக்குள், வந்து சிக்கும் வில்லனை வெளிகேட்டை இழுத்து பூட்டிவிட்டு சூர்யா பொளக்கிற காட்சிகளில் நரம்பெல்லாம் ஜிவ்…! இன்னும் 100 முறை ரிப்பீட் அடித்தாலும், சில காட்சிகளுக்கென இருக்கிற சூடு ஆறுவதேயில்லை!

அப்புறம் சமந்தா. இன்னொரு அஞ்சு வருஷத்துக்காவது கோடம்பாக்கத்தை லீசுக்கு எடுக்காமல் விடுவதில்லை என்கிற ஏராள தாராள லட்சியம் இருக்குமோ என்னவோ? அரை மீட்டர் துணி பிட்டும், ஆளுயர பனி பிட்டுமாக நடமாடி பிழிந்தெடுக்கிறார் இளசுகளை. கமிஷனர் பொண்ணுக்கு டாண் மீது காதல் வருவதுதானே சினிமா லாஜிக்? மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது சூர்யா சமந்தா லவ் போர்ஷன். கடத்திய சமந்தாவை திரும்ப ஒப்படைக்க கிளம்பினால், ‘என்னை ரெண்டு மணி நேரம் கழிச்சு கொண்டு போய் விடுங்க’ என்று சூர்யாவுடன் சினிமாவுக்கு கிளம்பிச் செல்வதும், ‘நீதான் அவன்’ என்று சூர்யா மீது காதலாகி திரிவதுமாக க்யூட் க்யூட்!

ஓ… அது நீங்கதானா? என்று மலர்ச்சியாக பேச ஆரம்பித்து, ‘இந்த இடத்திலேயே நிக்கணும். அதுக்கு மேல ஒரு ஸ்டெப் வச்சு மேல வந்தாலும் பன்னிய சுடுற மாதிரி சுட்ருவேன்’ என்று பதறாமல் சிதறிவிட்டு போகும் அந்த பலே வில்லன் மனோஜ் பாஜ்பாய், கடைசி வரை அலட்டிக் கொள்ளவேயில்லை. ஆனால் பொறி பறக்கிறது. குறிப்பாக, தன் மீது பாய்ந்த குண்டுக்காக லேசாக பதற்றம் காட்டி, ‘தம்பி… இது லைவ் ஷோ. நீ பார்த்தது நிஜம் இல்ல’ என்று சிரித்துவிட்டு கிளம்புகிற காட்சி, சான்ஸே இல்லை. யூகிக்க முடியாத திருப்பம்தான்!

சூர்யாவின் நண்பராக வித்யூத் ஜம்வால்! ‘அவன் எனக்காக என்னென்ன பண்ணியிருக்கான் தெரியுமா?’ என்று சூர்யா சமந்தாவிடம் விவரிப்பதை விஷுவலாகவே காட்டியிருந்தால், இவ்ளோ பெரிய நடிகரிடம் கால்ஷீட் வாங்கியதன் முழு பலனும் கிடைத்திருக்குமோ? சூரியை இன்னும் கூட கொஞ்ச நேரம் கொடுத்து வண்டி ஓட்ட விட்டிருக்கலாம். அவனா நீயி… என்று அவர் கடைசியாக அதிர்ச்சியடைவதையும் ரசிக்க முடிகிறது. ஆமா… பொண்ண காணோம்னு தேடுன அந்த போலீஸ் கமிஷனர் என்னாவானார்ங்க? அவ்ளோதானா மும்பை போலீசோட ‘டக்கு?’

சற்றே இடைவெளி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறார் யுவன். திரும்பிய இடமெல்லாம் இமான், விஜய் ஆன்டனி, அனிருத், தமன் என்று குரோட்டன்ஸ்கள் வளர்ந்து கிடக்க, வெறியோடு பூத்த சன் ஃபிளவராக படம் முழுக்க யுவனின் ராஜாங்கம்! பின்னணியும் சரி, பாடல்களும் சரி, யுவன்… இடைவேளை விட்டாலும் ‘எவர் க்ரீன் யுவன்தான்! ’

சந்தோஷ்சிவன் கேமிரா, சில்வாவின் ஸ்டன்ட் இரண்டுமே அமர்க்களம். எடிட்டரைதான் எழுப்ப மறந்துட்டாங்க போல! படத்தின் நீளம் கூட கூட, பார்க்கிற ரசிகர்களின் நாக்கின் நீளமும் கூடும் என்பதுதான் சமீபகால சங்கடம்!

தாவூத்தே பாகிஸ்தான் போயிட்டாரு! மும்பையில் டாண்கள் ஒழிஞ்சு ரெடரிஸ்டுகள் வந்தாச்சு… இன்னுமா வேலு நாயக்கர் ஆவி சாந்தியாகல? எமர்ஜென்ஸி கேட் வாசலில் காதல் ப்ளஸ் கமர்ஷியல் கதைகள் நிறைய கொட்டிக்கிடக்கு. கவனிங்க சூர்யா பாய்!

-ஆர்.எஸ்.அந்தணன்

3 Comments
 1. seelan says

  தாவூத்தே பாகிஸ்தான் போயிட்டாரு! மும்பையில் டாண்கள் ஒழிஞ்சு ரெடரிஸ்டுகள் வந்தாச்சு… இன்னுமா வேலு நாயக்கர் ஆவி சாந்தியாகல? எமர்ஜென்ஸி கேட் வாசலில் காதல் ப்ளஸ் கமர்ஷியல் கதைகள் நிறைய கொட்டிக்கிடக்கு. கவனிங்க சூர்யா பாய்!

  super…..

 2. ஜெஸ்ஸி says

  அண்ணன் விமர்சனத்தில் அடக்கி வாசிச்ச மாதிரி தெரியுது. ஊரே தலை தெறிக்க ஓடிட்டு இருக்கு படத்தை பார்த்திட்டு. உங்களுக்கு மட்டும் எப்படி சார் நல்லா இருக்கு…?

  ஒரு வேலை உங்களையும் கவனிச்சிட்டாங்களா…????

 3. iyer says

  adaengappa enne oru +ve vimarsanam…..

  lingusamy padichi mudichittara 🙂

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மக்களே… தெருவில் இறங்கி போராடுங்க! இசைஞானி இளையராஜாவின் பேச்சால் குலுங்கிய ஆன்மீக நகரம்!

அருணகிரி நாதர் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக இலக்கிய திருவிழா திருவண்ணாமலையில் நடந்தது. ஆறுபதாண்டுகளுக்கு முன் மழையில்லாமல் திருவண்ணாமலை வாடியதாகவும், அப்போது அருணகிரிநாதர் எழுதிய பாடல் இசைக்கப்பட்டு அதற்கப்புறம்...

Close