விஜய் சேதுபதி படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்? -வலை வீசும் இயக்குனர்
‘கழுகு’ என்ற முதல் படத்திலேயே யாருய்யா இந்த டைரக்டர் என்று அவர் பக்கம் திரும்ப வைத்தவர் சத்ய சிவா. அதற்கப்புறம் அவர் இயக்கிய ‘சிவப்பு’, அவ்வளவு கருப்பாக முடிந்துவிட்டது. வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் வந்துவிட்டுப் போன அந்தப்படத்தில், இலங்கை தமிழர்களை தமிழகம் எப்படி பார்க்கிறது என்பதற்கான அழுத்தமான விவாதம் ஒன்றும் இருந்தது. தோல்வி தத்தளிப்பில் அந்த கருத்துக்கு ஒரு மரியாதையும் இல்லாமல் போனது.
சினிமாவில் மட்டும்தான் தோல்வியை பிடித்துக் கொண்டே தொங்காமல், மற்றொரு முறை வாய்ப்பு தருகிற நல்ல விஷயமும் நடக்கும். அந்த வகையில் இவருக்கு விஜய் சேதுபதி மீண்டும் ஒரு நாற்காலி செய்து கொடுத்திருக்கிறார். அதை சிம்மாசனம் ஆக்கிவிடுவது என்று அடுத்த கட்ட அலங்காரத்திற்கு தயாராகி வருகிறாராம் சத்ய சிவா.
அதன் முதல் ஸ்டெப்தான் இது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைத்துவிடுவதென கடும் முயற்சியில் இறங்கிவிட்டார். சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுத்திடலாம். அவர்ட்ட சம்மதம் மட்டும் வாங்குங்க என்று கூறியிருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. ஒருவேளை ரஹ்மான் மறுத்தால், ஹாரிஸ் வீட்டுப்பக்கமும் ஒரு கர்சீப்பை போட்டு வைப்போமே என்று சிவா முடிவெடுத்திருப்பதுதான் இன்னொரு நல்ல விஷயம்.
எது எப்படியோ? விஜய் சேதுபதியின் வில்லேஜ் டைப் பாடல்களுக்கு ஒரு சுத்தியல் அடி சுட சுட உருவாகிக் கொண்டிருக்கிறது.