நிழலானார் ஐஸ்வர்யா தனுஷ்! தெம்பானார் ரஜினி!
ரஜினியை பொருத்தவரை எந்திரன் பார்ட்2 சாதாரண விஷயமில்லை. எவ்வளவு பெரிய கொம்பாதி கொம்பன் கேரக்டராக இருந்தாலும் அசால்ட்டாக ஊதித் தள்ளுகிற அளவுக்கு உடல் வாகும் மன வலிமையும் கொண்டிருந்தவர்தான் அவர். ஆனால் இப்போதும் அதே நிலைமை தொடர்கிறதா அவரிடத்தில்?
சமீபத்தில் வெளிவந்த பிரபல புலனாய்வு இதழொன்றில் கூட, அவரது உடல் நிலை பற்றி குறிப்பிட்டிருந்ததுடன், அப்படத்திற்காக அவர் கொடுத்திருந்த கால்ஷீட் தேதிகளை குறைக்க சொல்லி கேட்பதாகவும் செய்திகள் வந்தன. க்ரீன் மேட் பின்னணியில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு ஹெவி லைட்ஸ் போடப்படுவதாகவும், அதற்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்றும் மேலதிக தகவல்களை கொட்டியிருந்தது அந்த இதழ்.
இந்த செய்தியில் உண்மை இருக்கிறதா, இல்லையா? என்றெல்லாம் திரையுலகம் சைலண்ட்டாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும், அதை நிரூபிப்பது போலவே இருக்கிறது ரஜினியின் செயல்பாடுகள். இப்போது 2ஓ படப்பிடிப்புக்கு ரஜினியுடன் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷும் துணைக்கு வருகிறார். “இப்போது மட்டுமல்ல, இந்த படம் முடிகிற வரைக்கும் நான் அப்பாவின் அருகில்தான் இருப்பேன்” என்றும் கூறிவிட்டாராம். “வேளா வேளைக்கு மருந்துகள் எடுத்துத் தருவது… ஓய்வு நேரத்தில் அவரை கண்டிப்பாக ஓய்வெடுக்க வைப்பது என்று தான் அருகில் இருந்தால்தான் சரியாக இருக்கும்” என்பது அவரது தீர்க்கமான முடிவு.
ஐஸ்வர்யாவின் கிட்னிதான் ரஜினிக்கு பொருத்தப்பட்டுள்ளது என்று உலா வரும் இன்னொரு தகவலையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். இந்த நிலையில் மகளாகவும் தாயாகவும் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு மனதார பாராட்டுகள் குவியும். அதிலென்ன சந்தேகம்?