சூர்யாவின் நல்ல மனசுக்கு ஒரு லைக்!

படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோவாகியிருக்கிறார் சூர்யா. அவரது மனிதாபிமான மிக்க இந்த செயலுக்கு மனமிருக்கும் அத்தனை பேரும் ஒரு லைக் போட்டே ஆக வேண்டும்.

சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ்-3’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் மதனப்பள்ளியில் நடந்து வருகிறது. சித்தூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்புக்கு போய் நடித்து வந்தார். வழக்கம் போல் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு மாலையில் ஓட்டலுக்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன்- மனைவி இருவரும் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்துள்ளனர்.

இதனை பார்த்ததும் தனது காரை நிறுத்திய சூர்யா, தனது உதவியாளர் மற்றும் டிரைவர் உதவியுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவன், மனைவியை தூக்கி தனது காரில் ஏற்றி சித்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். டாக்டர்கள் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விட்டு பெண்ணுக்கு பலத்த அடிபட்டு இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் சூர்யாவிடம் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சை வசதி திருப்பதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்தான் இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். உடனடியாக நகரியில் வசிக்கும் நடிகை ரோஜாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சூர்யா, திருப்பதி மருத்துவமனையில் உள்ள குறிப்பிட்ட நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளார்.

ரோஜாவும் டாக்டரிடம் பேசி அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். பின்னர் சூர்யா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வேன் ஏற்பாடு செய்து கணவன்- மனைவியை திருப்பதி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளார். விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்காக ஒரு மணி நேரத்துக்கு மேல் அவர் மருத்துவமனையிலேயே இருந்து விட்டு பின்னர் அங்கிருந்து ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சூர்யாவை மனதார பாராட்டுவோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இயற்கை விவசாயத்தின் அவசியத்தை சொல்லும் ஹீரோ! இது குகன் பட விசேஷம்!

கிரேட் டாக்கீஸ் தயாரிக்கும் "குகன்" என்ற திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் அழகப்பன்.சி. இவர் தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற "வண்ணத்துப்பூச்சி"...

Close