அழகிய பாண்டிபுரம்- விமர்சனம்

‘மோர் பானையை திறந்தோமா, மூச்சு முட்ட குடிச்சோமா ?’ என்பது மாதிரியான குடும்ப வில்லங்க குழப்பாதிக்க கதைகள் வந்து அநேக நாளாச்சு. வீ.சேகர், விசு பாணியிலான கதையை கையாள்கிற துணிச்சல் ஒருவருக்கும் இல்லாமல் போனதுதான் காரணமா? அல்லது அதுபோன்ற கதைக்கெல்லாம் சமாதி கட்டி, கட்டுன இடத்துல சூடம் கொளுத்தக் கூட ஆளில்லேன்னு விட்டுட்டாங்களா தெரியவில்லை. இந்த படம் கிட்டதட்ட அந்த இலக்கை தொட்டு நிற்பதாக உணர முடிகிறது.

தேனிக்கு அருகிலிருக்கிற கிராமத்தில் நடக்கிறது கதை. எதிரெதிர் வீட்டுக்காரர்களான மனேபாலா, எம்.எஸ்.பாஸ்கர் குடும்பத்திற்கு நடுவில் பகையோ பகை! நிஜமாகவே ஒருவருக்கு கீரிப்புள்ள என்றும், மற்றொருவருக்கும் பாம்புக்குட்டி என்றும் பெயர் வைத்திருக்கிறார் இயக்குனர் ராயன். குடுகுடுப்பைக்காரன் வந்தால் கூட, குய்யோ அய்யோவென அலறி ஓடுகிற அளவுக்கு பகை வந்து ஆட்டுகிறது ரெண்டு பேமிலியும். ஒரு வீட்டில் ஏ.சி பொருத்தப்பட்டால், வீம்புக்கு நாள் முழுக்க ஏ.சி யை ஓடவிட்டு வெறுப்பேற்றுகிறது இன்னொரு பேமிலி. இப்படி சண்டை வந்தால், இந்த வீட்டில் ஒரு சிட்டுக்குருவியும், அந்த வீட்டில் ஒரு பட்டுக்குருவியும் இருக்கும்தானே? அதுதான் ஹீரோவும் ஹீரோயினும்.

எதிர்வீட்டுக்காரனுக்கு என் பொண்ணு முகம் கூட தெரியக்கூடாது என்று திட்டமிட்டு அவளை மூடி மூடி வைக்கிறது குடும்பம். அப்படியிருந்தும் ஒரு நாள் முகம் பார்த்துவிடும் ஹீரோ, எடுத்த எடுப்பிலேயே எடுப்பு சோறுக்கு ஆசைப்படாமல், நிதானமாக நின்று கேம் ஆடுகிறார். இறுதியில் அந்த காதல் ரெண்டு பேர் மனசையும் தட்டித் தொலைக்க, குடும்பங்களின் ரீயாக்ஷன் என்ன? அந்த கால கால பகைக்கு காரணமாக இருந்த அந்த சம்பவம் எது? இதுதான் க்ளைமாக்ஸ்.

மூக்கும் முழியும் முழுசா இருந்தா யாரு வேணா ஹீரோவா நடிக்கலாம் என்று ஆன பின்பு, இந்த படத்தின் அறிமுக ஹீரோ இளங்கோவை விமர்சிப்பானேன்? முடிந்தளவுக்கு நடிக்க போராடுகிறார். எதிர்வீட்டுக்குருவியின் முழு முகம் பார்த்தவுடனே காதல் வந்து பேக்ரவுண்ட் மியூசிக்குடன் தையதக்கா போடாமல், படம் நெடுக இந்த கேரக்டர் நிதானமாக நடைபோடுவதை ரசிக்க முடிகிறது. ஒரு ஹீரோவுக்கு என்னென்ன குவாலிடிஸ் இருக்க வேண்டுமோ, அவ்வளவும் இருக்கிறது இளங்கோவுக்கு. ஆட்டம், பைட் என்று உயிரை கொடுத்து உழைத்திருக்கிறார். பட்… நமக்குதான் பொறுமை என்கிற பேட்டரி இறங்கிக் கொண்டேயிருக்கிறது.

ஹீரோயின் அஞ்சனாவை கிராமத்து கட்டையாக்கினால் அவர்தான் என்ன செய்வார்? திருவிழாவில் பொங்கப்பானை வைக்கிறார். திருட்டு மாங்கா ருசிக்கிறார். வயக்காட்டில் வாக்கிங் போகிறார். தோழிக்கு திருட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறார். ஆள் எப்படி? வொர்த்தா ஒரு படம் கிடைச்சா கெத்தா சம்பளம் வாங்குகிற அளவுக்கு முன்னேறலாம்.

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஸ்ரீமன், பஞ்சு சுப்பு, தேவதர்ஷினி, யுவரானி, பாத்திமா பாபு, மீரா கிருஷ்ணன், முத்துக்காளை என்று படம் நெடுகிலும் பார்த்த முகங்கள். மனேபாலாவும் எம்.எஸ்.பாஸ்கரும் மட்டும் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள். ஹீரோ என்றால் அவருக்கு நாலைந்து நண்பர்கள் இருப்பார்கள். அவர்களும் புடைசூழ வருவார்கள் அல்லவா? இந்த படத்திலும் இருக்கிறார்கள். நம்பிக்கையான முகம் அதில் ஒன்று கூட இல்லை.

பாவம் பரத்வாஜ்! சேரன் போன்ற படைப்பாளிகளின் படங்களுக்கு மியூசிக் போட்டவர், இப்போது கதையே கேட்காமல் கமிட் ஆகிற அளவுக்கு என்ன பிரச்சனையோ? பாடல்களிலும் அக்கறை காட்டியதாக தெரியவில்லை. எல்லாம் இவங்களுக்கு இதுபோதும் மனப்பான்மையே எட்டிப்பார்க்கிறது. அகிலனின் ஒளிப்பதிவு மட்டும் அல்வா துண்டாட்டம் தனியாக நிற்கிறது.

தமிழ்சினிமாவில் நிலவி வரும் ஆவி பேய் ட்ரென்ட்டை மாற்ற உடனடி தேவை ஒரு கிராமத்து காதல் படம்தான்! பாண்டிபுரத்தை நிறைய பட்டி பார்த்து பெயின்ட் அடித்திருந்தால் எட்டிப்பார்த்த நேரத்தில் இன்புற்றிருக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ர- விமர்சனம்

இன்னும் எத்தனையெத்தனை செம்மறியாடுகளை காண நேருமோ என்கிற அச்சத்தோடுதான் உள்ளே செல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், பீட்சாவுக்கு பின் வந்த ஆவிப்படங்களின் லிஸ்ட் இன்னும் முடிந்தபாடில்லை. இந்த ‘ர’...

Close