பாலா அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு!? எதிரிகளின் சூழ்ச்சியா?
சட்டி உடைசல், சாம்பாரில் உப்பு என்பது போலவே சமீபகாலமாக படம் எடுத்து வரும் பாலாவுக்கு, இதுவல்லவோ விருந்து என்று கண்ணை மூடி ரசிக்கும் பெரும் கூட்டம் இருப்பதுதான் ஆச்சர்யம். அவரது அடுத்த படம் என்ன? யார் யார் நடிக்கிறார்கள்? என்பதை பற்றியெல்லாம் பெரிய அக்கறையுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில்தான் அவரது அடுத்த படமான குற்றப்பரம்பரையை நோக்கி காத்திருக்கிறது அவர்களின் கண்கள். ஆனால் அவரை படமெடுக்க விட்டால்தானே? அடுக்கடுக்கான மன உளைச்சல் அரங்கேறுகிறதாம்.
தாரை தப்பட்டை ரிலீஸ் நேரத்தில் அவரது ஆபிசில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது மக்களுக்கு நினைவிருக்கலாம். அந்த கணக்கு வழக்கிலிருந்து மெல்ல மீண்டு வெளியே வந்துவிட்டார் அவர். இருந்தாலும் பிரச்சனை விடாது போலிருக்கிறது. போன வாரம் அவரது அலுவலகத்தில் வேறொரு ரெய்டு. இதை நடத்தியவர்கள் வேறொரு துறையை சார்ந்த அதிகாரிகளாம். இது என்ன? அது என்ன? என்று குடைந்து எடுத்தவர்கள், இறுதியாக பெரும் தொகை ஒன்றை செலுத்தும்படி கூறிவிட்டு கிளம்பிவிட்டார்களாம்.
அவர்கள் போன கையோடு பணம் புரட்டும் வேலைகளில் இறங்கிவிட்டார் பாலா என்கிறது கோடம்பாக்கத்து தகவல்கள். இது ஒருபுறமிருக்க, குற்றப்பரம்பரை கதையை அவர் படமாக்கிவிடக் கூடாது. மனதளவிலும் பொருளாதார அளவிலும் அவரை சித்திரவதைக்கு ஆளாக்கிவிட வேண்டும் என்று செயல்படும் சிலர்தான் அதிகாரிகளுக்கு போட்டுக் கொடுத்திருப்பார்கள் என்ற கோணத்திலும் இதை கவனிக்கிறது படவுலகம்.
மஞ்சுவிரட்டுன்னு இறங்கியாச்சு. வேட்டி அவுருதேன்னு விட்ற முடியுமா?