அவங்க ஐஸ் பக்கெட்னா நாங்க ரைஸ் பக்கெட்! நடிகைகளை கேலி செய்த ஆடியோ விழா
ஊரெல்லாம் ஐஸ் பக்கெட் பற்றிய பேச்சுதான். குளிர குளிர ஐஸ் தண்ணீரை பக்கெட்டில் பிடித்து தலையில் கொட்டுவதுதான் இந்த விளையாட்டு. இப்படி ஜில் ஜிலீர் நடிகைகளின் தலையில் கொட்டி, தமிழ்நாட்டு இளைஞர்களின் மனசை கொல் கொலீர் ஆக்கிவருகிறார்கள் சிலர். நிஜத்தில் தசை சுருக்கம் சம்பந்தப்பட்ட ஒரு வியாதிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுதான் இது. போகட்டும்… நாம் இன்று கவனித்தது வேறொரு விஷயத்தை. ‘பர்மா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த ஐஸ் பக்கெட் விழிப்புணர்வு பற்றி பேசிய அப்படத்தின் டைரக்டர் தரணீதரன், ‘எதுக்கு இந்த தண்ணீர் கஷ்டத்திலும் கரண்ட் கஷ்டத்திலும் ஐஸ் தயாரித்து தலையில் கொட்ட வேண்டும்? அதனால நாங்க ஐஸ் பக்கெட்டுக்கு பதிலா ‘ரைஸ் பக்கெட்’ தரப்போறோம்’ என்றார்.
நிஜமாகவே ஒரு வாளியில் ஒரு கிலோ அரிசியை கொட்டி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவரிடம் நீட்டினார்கள். இந்த பக்கெட் இப்படியே கை மாறிக் கொண்டேயிருக்குமாம். (அப்ப யார்தான்ப்பா அதை வேக வெச்சு வயிற்றை கழுவறது?) படத்திற்கு சம்பந்தமில்லாத விஷயமாக இது இருந்தாலும், படத்தின் கதை கவனிக்கக்கூடியதுதான். வட சென்னையில் பர்மா என்றொருவர் வாழ்ந்தாராம். லோன் வாங்கி கார் வாங்கும் ஆசாமிகள், நாலைந்து தவணைகளை ஒழுங்காக செலுத்திவிட்டு அதற்கப்புறம் அம்பேல் ஆகிவிடுவார்கள். அவர்களையும் காரையும் தேடிக்கண்டு பிடித்து, சம்பந்தப்பட்ட காரை சாவி இல்லாமலேயே லபக்கி வருவதில் கை தேர்ந்தவராம் இவர். அப்படி ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறார் படத்தின் ஹீரோ அதுல் குல்கர்னி. கதையும் கார் லபக்கிங் சம்பந்தப்பட்டதுதானாம். ‘தேநீர் விடுதி’ படத்தின் ஹீரோயின் ரேஷ்மி மேனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
படத்தில் இன்னொரு கணீர் கண்ணழகியும் நடித்திருக்கிறார். பெயர் கனி. இவர்தான் வில்லி. மேட் இன் கேரளா! நயன்தாரா, அசின் டைப்பான அழகுக்குள் அடங்கவில்லை என்றாலும், என்னவோ கவர்ச்சி இருந்தது அவரிடம். அது மட்டுமல்ல, சேலை கட்டிக் கொண்டு வந்திருந்தாலும், சற்று ‘காத்தாட’ தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார். பர்மா வெளிவந்த பின், சுமார் ஒரு டசன் படங்களாவது இவரை வில்லியாக நடிக்க வைத்து வரும் என்பதை இப்போதே யூகிக்க முடிந்தது.
காலையிலேயே ஒரு தனியார் வானொலி நிலையத்தில் இசை வெளியீட்டு விழா நடந்தாலும், பிரஸ் முன்பும் ஒருமுறை பாடல்கள் வெளியிடப்பட்டது. குறும்பட இயக்குனர்களின் குலதெய்வமாக கருதப்படும் சி.வி.குமார்தான் அதை வெளியிட்டார். அப்படியே படத்தையும் வாங்கி வெளியிட்ருங்க சார்…!