காதலி என்னை நல்லா பார்த்துப்பான்னு நினைச்சேன். அவளும் போயிட்டா! ஆடியோ விழாவில் புலம்பிய சிம்பு
தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் தானே தயாரித்து ஹீரோவாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக சிம்புவை அழைத்திருந்தார் சந்தானம்! கடந்த சில வருடங்களாகவே எந்த பட விழாக்களிலும் கலந்து கொள்ளாத சிம்பு இந்த விழாவுக்கு வந்ததால், சந்தானத்தின் ரசிகர்கள் சிம்புவுக்கும் சேர்த்து கை தட்டினார்கள். உற்சாக கூச்சலுக்கு இடையே சிம்பு பேசியதெல்லாம் ஹை லெவல் ஸ்பிரிச்சுவல் மூட்! ‘எல்லாத்தையும் மேலேயிருக்கிறவன் பார்த்துப்பான்’ என்று சிம்பு பேசி முடிக்கும் போது, அட… நீங்களுமா? என்றுதான் நினைக்கத் தோன்றியது!
என்னை பற்றி சொல்றவங்க எல்லாரும் பார்ன் வித் சில்வர் ஸ்பூனுன்னு சொல்வாங்க. நான் பிறந்ததிலிருந்து வசதியாதான் இருக்கேன். ஆனால் எனக்கு எல்லாத்தையும் கொடுத்த ஆண்டவன், எல்லாத்தையும் எடுத்துக்கவும் ஆரம்பிச்சான். எல்லாத்தையும்னா? எல்லாத்தையும்தான்… என்று ஓப்பனிங்லேயே வேதாந்தியாக பேச ஆரம்பித்தார் சிம்பு. நான் படங்களில் நடிக்கறதில்ல. என் படம் திரைக்கு வந்து இரண்டரை வருஷமாகிருச்சு. என்னை வச்சு யாராவது படம் எடுக்க வந்தாலும், சிம்புவை வச்சா படம் பண்றீங்க? அவர் ஷுட்டிங்குக்கே வர மாட்டாரேன்னு பேச ஆரம்பிச்சாங்க. நான் ஷுட்டிங்குக்கு வராமலா இத்தனை படங்கள் திரைக்கு வந்திருக்கு?
அதற்கப்புறம் எனக்கு படங்களும் வரல. சரி… படங்களைதான் ஆண்டவன் பறிச்சிக்கிட்டான்னு நினைச்சேன். நான் சம்பாதிச்சதெல்லாம் எங்க அம்மா கையிலதான் கொடுப்பேன். ஆனால் செலவுக்கு பணம் கேட்கணும்னா கூட அம்மாகிட்ட கேட்கிற நிலைமை. வெட்கப்பட்டுகிட்டு கேட்காமலே இருந்திருக்கேன். படங்கள் போனா போவட்டும். காதல் இருக்கு. காதலி என்னை நல்லா பார்த்துப்பான்னு நினைச்சேன். அவளும் போயிட்டா. காதலும் போயிருச்சு. நான் நடிச்ச வாலு படத்திற்கு இதுவரை பலமுறை ரிலீஸ் தேதி போட்டுட்டாங்க. ஆனால் என்ன காரணத்தினாலோ அதெல்லாம் தள்ளி தள்ளி போயிட்டு இருந்திச்சு. எனக்காக எங்க அப்பாவே பணத்தை கொடுத்து வாலு படத்தை வாங்கிட்டார். யாரு போனாலும் எனக்காக எங்க அப்பா இருக்கார். அவரு பார்த்துப்பாரு என்னை.
சந்தானத்துக்கு நான்தான் வாய்ப்பு கொடுத்தேன்னு பேசுனாங்க. சந்தானத்துகிட்ட இருக்கிற திறமையைதான் நான் கண்டு பிடிச்சேனே தவிர, கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறி வந்ததெல்லாம் அவரோட தனிப்பட்ட திறமை. கிட்டதட்ட இரண்டரை வருஷமா என் படங்கள் வரலேன்னாலும் நான் இந்தளவுக்கு நம்பிக்கையோட இருக்கேன்னா அதுக்கு காரணம் என்னோட ரசிகர்கள்தான். எது என்னை விட்டு போனாலும் என் உசுரு இருக்கு. அந்த உசுருதான் என்னோட ரசிகர்கள். தொடர்ந்து என்னை பற்றி எழுதி, ஜனங்ககிட்ட மறக்காமல் வச்சுருந்ததுதான் இந்த மீடியாதான்.
இனிமே சிம்பு என்ன பண்ணப் போறாரு? என்று கேட்பவர்களுக்கு என்னோட ஒரே பதில், ‘எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பார்த்துப்பான்ங்கறதுதான்’.
ஆக மொத்தம் சிம்பு அப்படியேதான் இருக்கார். மாறல….! எஸ்கேப் ஆக நினைக்கிற எல்லாரும் சொல்கிற அதே வார்த்தையைதானே அவரும் சொல்றாரு?