எழுத்தாளர்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் சினிமாக்காரர்கள்!

எழுத்துலகின் பொக்கிஷங்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் முக்கியமானவர்கள். சுஜாதா ஆத்மாவாகிவிட்டார். பாலகுமாரன் சாமியாராகிவிட்டார். இவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டால், சாபம் எப்படி பலிக்கும் என்பதற்கு ஏற்கனவே சினிமாவில் சில உதாரணங்கள் இருக்க, கொஞ்சம் கூட அச்சமேயில்லாமல் இவர்களின் கதையையும், தலைப்பையும் திருடுகிற கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

‘இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா’ தலைப்பு பாலகுமாரனுடையது. ஆனால் அதற்காக துளி பைசா கொடுக்காமல், அதே தலைப்பில் படம் எடுத்தார் லியோவிஷன் ராஜ்குமார். “நாசமா போவாங்க. வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல…” என்று அமைதியாகிவிட்டார் பாலகுமாரன். ‘இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா’ படம் வெளிவந்து ஹிட்டும் அடித்தது. ஆனால் மூன்று வருஷங்கள் ஆன பின்பும் அடுத்த படத்தை வெளியிட முடியாமல் அவஸ்தை படுகிறார் லியோவிஷன் ராஜ்குமார். இதுதான் சாபம் போலிருக்கிறது.

அவ்வளவு ஏன்? மெர்க்குரிப்பூக்கள், இரும்புக்குதிரை, என்ற பாலகுமாரன் எழுதிய நாவல்களின் தலைப்பு வைக்கப்பட்ட படங்களின் கதி என்னவானது? ஓசி தலைப்புக்கு இதுதான் பரிசு. அட… ‘தாயுமானவன்’ என்ற டி.வி சீரியல் கூட சரியாக போகாமல் பாதியில் நிறுத்தப்பட்டது. பாலகுமாரனின் சாபம் இப்படியிருக்க, சுஜாதாவின் சாபம் என்ன செய்யுமோ? அதுதான் பெருங்கவலை…

இப்போது பிரச்சனை ‘சைத்தான்’ வடிவில் தொடர்கிறது. யெஸ்… விஜய் ஆன்ட்டனி நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘சைத்தான்’ திரைப்படம், சுஜாதாவின் ‘ஆ’ என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாம். எழுத்தாளர் சுஜாதா மறைந்தாலும், அவரது மனைவி உயிரோடுதான் இருக்கிறார். கொஞ்சமாவது பணம் கொடுத்திருக்கலாம் அல்லவா? இது வரைக்கும் பத்து பைசா போகவில்லையாம் அந்தப்பக்கம்.

பின்குறிப்பு- சினிமா தயாரிப்பாளர்களில் நல்ல மனுஷன் சி.வி.குமார்தான். அவர்தான் சுஜாதாவின் நாவல் ஒன்றை படமாக்குவதற்கு முன், வீடு தேடிப் போய் பத்து லட்சம் கொடுத்துவிட்டு வந்தார். மனிதம் இன்னும் மிச்சமிருக்கிறது சினிமாவில். இவரை பார்த்தாவது திருந்துங்கப்பா…

குறிப்பு 2- நமது செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் நம்மை தொடர்பு கொண்ட சைத்தான் குழு, எழுத்தாளர் சுஜாதாவின் மனைவிக்கு உரிய தொகையை வழங்கி விட்டதாக குறிப்பிட்டது. தவறுக்கு பெரிய எழுத்தில் ஒரு ஸாரி…!

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கவுன்சிலருக்கு கட்டிங் கொடு! விதார்த் படப்பிடிப்பு நிறுத்தம்!

‘இந்த தொழிலதிபருங்க தொந்தரவு தாங்க முடியலைப்பா...’ என்று கவுண்டமணி கதறிய மாதிரியே கதற வேண்டியிருக்கிறது! கண்ட தொழிலிலும் கால் வைத்து கட்டிங் கேட்கும் வழக்கம், கரை வேட்டிகளுக்கு...

Close