அரசியலை தொடர்ந்து சினிமாவிலும் தலை விரித்தாடும் சாதி! நல்லா வௌங்குச்சு போ!
கடந்த சில தினங்களுக்கு முன் கோடம்பாக்கத்தில் உலவிய வாட்ஸ் ஆப் தகவல் ஒன்று, “உலகம் எங்கய்யா போயிட்டு இருக்கு?” என்ற கவலையை ஏற்படுத்த தவறவில்லை. ஏன்? சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் ஒரு படத்தின் இயக்குனர் தன் சாதியினருக்கு உள்ளம் உருக வைத்த விண்ணப்பத்தின் லட்சணம் அப்படி.
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது ‘சேதுபூமி’ என்ற திரைப்படம். கேந்திரன் முனியசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். ‘தேவர் மகன்’ படத்தின் எளிய படைப்பு என்று வேண்டுமானால் இப்படத்தை ஒரே வரியில் விமர்சித்துவிட முடியும். ஆனால் அப்படத்தில் இல்லாத ஒன்று இப்படத்தில் இருந்தது. சீனுக்கு சீன் பழம்பெரும் தேசத்தலைவர் முத்துராமலிங்க தேவர் சிலையையும் அவர் தம் பொன் மொழிகளையும் பயன்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அதுவும் படத்தின் ஹீரோ தமன், அவ்வப்போது தேவரை வணங்கிவிட்டுதான் மோட்டார் சைக்கிளையே ஸ்டார்ட் பண்ணுவார். கதையே இரு ஜாதி பெரிய மனுஷன்களுக்கு இடையே நடக்கும் சண்டை வம்புதான். இப்படி படம் முழுக்க நீக்கமற நிறைந்திருந்தது ஜாதீயின் அடையாளம். நல்லவேளையாக இவர் சாதி பெண்ணை அவர் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொள்வதாக கதை முடிய எல்லாருக்கும் நிம்மதி.
இருந்தாலும் இயக்குனரின் வாட்ஸ் ஆப் தகவல்தான் தமிழ்சினிமா ஆபத்தை நோக்கி போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
“நம்ம ஜாதியின் பெருமையை சொல்லணும்னுதான் இந்த படத்தையே நான் இயக்கியிருக்கேன். ஆனால் நம்ம சாதி சனமே இந்த படத்துக்கு அவ்வளவு பெரிய ஆதரவுகொடுக்கலே என்று நினைத்தால் கவலையாக இருக்கிறது’+ என்று கூறியிருக்கிறார் கேந்திரன் முனியசாமி. இந்த வாட்ஸ் அப் தகவல் ஷேர் ஷேர் என்று நூறு ஆயிரம் பரவிக் கொண்டிருக்கிறது.
நமது கேள்வியெல்லாம் இதுதான். சாதியை உயர்த்தி பிடிக்கும் நோக்கத்துடன் படம் எடுக்கிற எவரும் அதே சாதியை சேர்ந்தவர்களை மட்டுமே வைத்து அந்த படத்தை உருவாக்கிவிட முடியுமா? நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் என்று அனைவருமே சம்பந்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்களாக இருக்க முடியுமா? உள்ளங் கைக்குள் இப்படி ஒரு நீதி ஒளிந்திருக்கும் போது, இன்னும் கெட்டுப் போகாமலிருக்கும் சினிமாவுக்குள் சாதியை திணிப்பது சரியா?
பின்குறிப்பு-
தமிழ்சினிமாவின் ஐகான் என்று போற்றப்படும் அந்த பழம்பெரும் நடிகரின் பேரன், தற்போது மார்க்கெட்டில் முக்கியமான ஹீரோ. அவரே தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை தேர்வு செய்யும்போது, “சாதிக்காரனுக்கு வாழ்வு கொடுப்போம். நம்ம சாதி ஆளா அனுப்புங்க” என்கிறாராம் மேனேஜரிடம். அட… நீங்க நல்லாயிருக்கணும்னு நினைக்கிற உங்க மேனேஜரே உங்க சாதி இல்லேயே பிரதர்!
Sathi enpathu bakthi mathiri avngaloda urimai/patru. Ithil mathavanga en mookkai/vaalai nulaikkaringa appuram mookku poche, vaalu pochennu alukuringa?