நீங்க நினைச்சா விஜய்சேதுபதியே கால்ஷீட் கொடுப்பாரே? பக்குவமாக பதில் சொன்ன இயக்குனர்
அட்டக்கத்தி ரஞ்சித்துக்கு அட்ரஸ் கொடுத்தவர்… சந்தோஷ் நாராயணனுக்கு சப்போர்ட் கொடுத்தவர்… விஜய்சேதுபதிக்கே வெளிச்சம் தந்தவர்… கார்த்திக் சுப்புராஜை கண்டு பிடித்தவர். இப்படி தயாரிப்பாளர் சி.வி.குமார் பற்றி சொல்லிக் கொண்டே போக நிறைய இருந்தாலும், டைரக்டர் சி.வி.குமாரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கதான் வேண்டும். ஏன்? அவரே இப்போது டைரக்டர் ஆகிவிட்டார். படத்தின் பெயர் மாயவன். இறுதிக்கட்டத்தில் இருக்கிறது படப்பிடிப்பு.
சந்தீப் கிஷன் மற்றும் லாவன்யா திரிபாதி நடிப்பில் உருவாகி வருகிறது இவரது முதல் படம். கதையை கேட்ட நலன் குமாரசாமி, பிரமாதம் என்று பாராட்டிவிட்டு, நீங்களே டைரக்ட் பண்ணுங்களேன் என்று இவரை உசுப்பேற்றிவிட்டும் போய்விட்டார். இத்தனை படங்கள் தயாரித்திருக்கிறார். எல்லா படத்திலும் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே கவனித்து வருகிறார். அந்த ஒரு அனுபவம் போதாதா? துணிச்சலாக இறங்கிவிட்டார் சி.வி.குமார்.
நீங்க நினைச்சா பல ஹீரோக்கள், குறிப்பா விஜய் சேதுபதியே கூட கால்ஷீட் கொடுப்பாரே… ஏன் சந்தீப் கிஷன்? என்றால், பளிச்சென்று பதில் சொல்கிறார் சி.வி.குமார். சார்… நான் அவங்களுக்கு வெற்றியை கொடுத்திருக்கலாம். அதுக்காக எனக்கு நீங்க கால்ஷீட் கொடுக்கணும் என்று கேட்பது முறையில்லையே? இந்த கதையை நான் நம்புறேன். இந்த சந்தீப் கிஷனும் நாளைக்கு சொல்லும்படியா ஒரு பெரிய ஹீரோவா வருவார். அந்த நம்பிக்கை இருக்கு என்றார்.
இறைவி என்ற மாபெரும் படத்தை தயாரித்து, பல விழுப்புண்களை வாங்கியிருந்தாலும் முகத்தில் சிரிப்பு மாறாமல் பேசும் சி.வி.குமாரை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. “இறைவி அனுபவம் எப்படி சார்?” என்றால், “ஆளை விடுறீங்களா?” என்று எழுந்தோடுகிறார்.
இப்படி அடுத்தவங்க பண்ற அட்டகாசம் பொறுக்க முடியாமல்தான், இவரே இயக்குனர் ஆகிவிட்டாரோ என்னவோ?