மாமனார் தெறி!மருமகன் டபுள் தெறி!
இதை அனுபவம்னு சொல்றதா? தொழில் பக்தின்னு சொல்றதா? திறமைன்னு சொல்றதா? இப்படியொரு முக்கூட்டு குழப்பத்தை ரசிகர்களுக்கு அளித்து அவர்களை திடுக்கிட வைத்திருக்கிறார்கள் ரஜினியும் தனுஷும். அப்படியென்ன நடந்துவிட்டது?
கபாலி படத்திற்கு டப்பிங் பேச வந்த ரஜினி, மளமளவென இரண்டே நாளில் பேசி முடித்துவிட்டு நடையை கட்டினார். இந்த வேகம் வேறு எந்த ஹீரோக்களுக்கும் இல்லை என்றது இன்டஸ்ட்ரி. எல்லா டயலாக்குமே சிங்கிள் டேக்கில் பேசி முடித்துவிட்டு கிளம்பிவிட்டார் ரஜினி. பொதுவாக டப்பிங் பேசுவதற்கு சிலர் ஒரு வாரம் வரை இழுப்பது வழக்கம். இன்னும் சிலர் அங்கு வந்துதான் ஆ னா ஆ வன்னாவையே கற்றுக் கொள்வார்கள். ரஜினியின் இத்தனை ஆண்டு கால அனுபவம் அங்கு வெள்ளமென பிரவாகம் எடுத்து ஓடியதாக சிலிர்த்துக் கொள்கிறது கபாலியில் பணியாற்றிய உதவி இயக்குனர் வட்டாரம்.
இப்போது மாமனார் ரஜினியையே ஒரு ஸ்டெப் முந்தியிருக்கிறார் தனுஷ். அவரது ‘தொடரி’ படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்திருக்கிறார் அவர். இத்தனைக்கும் நடுநடுவே தொண்டைக்கு வசதியாக ஏதோ சில வஸ்துகளை மென்று கொள்ளும் வழக்கமும் தனுஷுக்கு இல்லையாம்.
இப்படி தெறிக்க விட்றீங்களே கனவான்ஸ்?