க்ளைமாக்சை சொல்லிட்டா மொட்டை அடிச்சுக்குறேன்! சவால் விடும் இயக்குனர்
பல வருடங்களாக ஒரே பார்முலாவை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா கதை. அடுத்த சீன் இதுதான் என்று சின்ன குழந்தை கூட சொல்லிவிடுகிற அளவுக்கு பெரிய இயக்குனர்களின் கதைகளும், திரைக்கதைகளும், பெரிய நடிகர்களின் டேஸ்டும், இருப்பது தமிழ்சினிமாவுக்கு பிடித்த கெட்ட காலம். தப்பித் தவறி புதுசாக யோசித்து வெற்றி பெரும் இயக்குனர்களை கூட, பெரிய நடிகர்கள் வம்படியாக அழைத்து கமர்ஷியல் ஜெராக்ஸ் எடுக்க வைத்துவிடுகிறார்கள்.
பல நேரங்களில் சின்னப் படங்கள்தான் இத்தகைய அவமானங்களில் இருந்து தமிழ்சினிமாவை மீட்டெடுத்து வருகிறது. அந்த வகையில் சொல்லப்படும் படமாக இது இருக்குமா, இருக்காதா என்ற நம்பிக்கையையும் சந்தேகத்தையும் ஒரு சேர உருவாக்கியிருக்கிறது ஒன்பதிலிருந்து பத்து வரை என்ற படம்.
கதிர், ஸ்வப்னா மேனன் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தை விஜய் ஷண்முகவேல் ஐயனார் இயக்கியிருக்கிறார். இவர்தான் இப்படியொரு சவால் விட்டிருக்கிறார். பொதுவாக ஒரு படத்தின் என்ட்லதான் அதுவரை சொல்லப்பட்ட ட்விஸ்ட்டின் முடிச்சை அவிழ்ப்பாங்க. நான் இந்த படத்தில் ஒவ்வொரு சீன் முடியும்போதும் ஒரு ட்விஸ்ட் வச்சுருக்கேன். அப்படியே விறுவிறுவென நகரும் படம், க்ளைமாக்சில் பெரிய திருப்பத்தை சொல்லி முடியும். இன்டர்வெல் பிளாக்ல மட்டுமில்ல, க்ளைமாக்ஸ் காட்சிக்கு முதல் காட்சி வரைக்கும் கூட உங்களால் முடிவு என்ன என்று கண்டுபிடிக்க முடியாது. அப்படி யாராவது சொல்லிட்டா நான் மொட்டையடிச்சுக்குறேன் என்றார் தீர்மானமாக.
இவர் ஏற்கனவே விஜய்யிடம் கதை சொல்லி, அந்த படத்தை துவங்குகிற நேரத்தில் ஏதோ காரணத்தால் அந்த வாய்ப்பை இழந்தவராம். ரஜினி படத்திற்கு டயலாக் எழுதுகிற வாய்ப்பும் அப்படிதான் கடைசி நேரத்தில் பறிபோனது என்கிறார். கே.பாக்யராஜுடன் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கும் விஜய் சண்முகவேல் ஐயனார் இப்போது வாய்ப்பளித்த கதிரையே ரஜினியாகவும் விஜய்யாகவும் பார்க்கிறேன் என்று நெகிழ்ச்சியோடு பேசியது, சும்மா பேச்சுக்காகதான் என்று சொல்லிவிட முடியாது.
வாய்ப்பு கொடுத்தவரை வள்ளல் என்று பாராட்டுவது வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்க முடியாதல்லவா?