மெட்ரோ – விமர்சனம்

தீப்பெட்டி போல அடுக்கப்பட்டிருக்கும் சென்னையில், தீக்குச்சி போல திரியும் சில இளைஞர்களும், அவர்களின் குற்றப்பின்னணியும்தான் மெட்ரோ! இந்த தீக்குச்சிகள் ஏதோ ‘புரட்சி புயல்’கள் என்று நினைத்தால் தப்பு. மாறாக எல்லாரும் திருட்டுப் பயல்கள்! இவர்களிடன் படாடோபத்திற்கு பலியாகும் நடுத்தர குடும்பத்து இளைஞனால் நடக்கும் விபரீதங்கள்தான் முழு படம். கழுத்திலிருப்பதை அறுப்பவர்கள் பற்றிய இந்தப்படத்தின் சில காட்சிகள் நமது கழுத்தையும் சேர்த்து அறுப்பதுதான் காலக் கொடுமை சரவணா!

வீட்டிலேயே சரக்கடித்து, வீட்டிலேயே தம் பற்ற வைத்து, வீட்டிலேயே ஊதித்தள்ளும் ஒரு அப்பா. அவரிடம் திருட்டு தம் வாங்கி அடிக்கும் மகன்! இவருக்கு ஒரு தம்பி. இந்த ‘குடும்பம் ஒரு கோவிலுக்கு’ள்(?) நல்ல பாம்பும் சாரை பாம்பும் சேர்ந்து கலந்து செய்ததை போல அந்த தம்பி வளர்கிறான். காதலி கேட்கும் காஸ்ட்லி செல்போனுக்காகவும், காஸ்ட்லி பைக்குக்காகவும் சேராத இடம் சேர்ந்து செயின் பறிப்பு திருட்டுகளில் ஈடுபடுகிறான். ஒரு நாள் உண்மை தெரிய வருகிறது அவனது அம்மாவுக்கு. ஐயோ சாமீய்… என்று பதறும் அந்தம்மாவை அவனே கொலை பண்ணிவிட்டு ஃபீல் பண்ண, அம்மாவை கொன்றது யார்? என்று தேட ஆரம்பிக்கிறார் மூத்த மகன். இறுதியில் கொலையாளி யாரென்று தெரியவருகிறது. சொந்த தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தண்டனையோடு படம் முடிய… கழுத்து வரை இழுத்து போர்த்திக் கொண்டு வெளியேறுகிறார்கள் பெண்கள். (அந்த ஒரு எச்சரிக்கை உணர்வை கொடுத்த வகையில் டைரக்டருக்கு அப்ளாஸ்)

குடும்பத்தின் மூத்த மகனாக நடித்திருக்கிறார் புதுமுகம் சிரிஷ். வாயை திறந்து பேசாத வரைக்கும், ‘வெடிகுண்டு முருகேசனா இருப்பாரோ?’ என்கிற அச்சத்தை விதைக்கிறது அவரது மிடுக்கு! கொஞ்ச நேரத்திலேயே அந்த மிடுக்கு சட்டையில் மழை பொழிய… ஒரே சொத சொத! காதல் காட்சிகளில் இன்னும் சுத்தம். கடந்து போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கு நண்பா. முக்கியமாக இன்னும் ஒரு வருஷத்துக்கு கூத்து பட்டறை வகுப்பை நீட்ட முடியுமா பாருங்க!

அவரது நண்பராக நடித்திருக்கிறார் சென்ட்ராயன். திருட்டுக்கும் அநீதிக்கும் எதிராக விரல் சொடுக்குகிறார் ஹீரோ. ஆனால் இவரது நண்பராக வரும் சென்ட்ராயனுக்கு கழுவித் துடைத்து வைத்த மாதிரியான திருட்டு முகம். (காஸ்ட்டிங்கில் படு பயங்கரமாக சறுக்கியிருக்கிறார் டைரக்டர் என்பதற்கு இந்த சென்ட்ராயனே முழு உதாரணம்) படத்தில் இவர் காமெடி பண்ணுவதாக நினைத்துக் கொண்டு செய்யும் அத்தனை சேட்டைகளையும் பொறுத்துக் கொள்ளவே மூன்று வேளையும் யோகா வகுப்புக்கு போக வேண்டும் போல!

அக்மார்க் வில்லனாகவே வருகிறார் பாபிசிம்ஹா. இவர்தான் திருட்டுச் செயின் அறுக்க ரூட் போட்டுக் கொடுப்பவர். வீட்டை விட்டு ஒரு காட்சியில் கூட அவர் வெளியில் வரவில்லை. ஆனால் “இந்த தெருவுல இந்த பொம்பளை எட்டு சவரன் தாலிக் கொடி போட்ருக்கா… அந்த தெருவுல அந்த ஆயா காதுல அஞ்சு பவுன் தொங்குது” என்றெல்லாம் பாடம் எடுக்கிறார். (எப்படிய்யா? எப்படி?) பெற்ற அம்மாவையே கொலை பண்ணுகிற ஒருவன், இந்த பாபி சிம்ஹாவை போட்டுத்தள்ள எவ்வளவு நேரம் ஆகும்? கடைசி வரைக்கும் நடக்க மாட்டேங்குதே?

படத்தின் ஹீரோ இவர்தான் போலிருக்கு என்று சந்தேகப்படுகிற அளவுக்கு இரண்டரை மணி நேர படத்தில் ஒண்ணே முக்கால் மணி நேரத்தை தனதாக்கிக் கொண்டிருக்கிறார் அந்த திருட்டுத் தம்பி சத்யா! ஒரு அப்பாவி தம்பியாக தோன்றி, மெல்ல மெல்ல குரூர முகம் காட்டுகிறார். நடிப்பு… சிறப்பு!

படத்தின் ஹீரோயின் மாயா. இவருக்கும் சிரிஷுக்குமான காதல் காட்சிகளில் கலகலப்பையும் கவனத்தையும் செலுத்தியிருந்தால், ஆடியன்சுக்கு ஒரு ரிலீஃப் கிடைத்திருக்கும். ஆனால் இலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஊறுகாய் போல பயன்படுத்தியிருக்கிறார்கள் மாயா என்ற அல்வா துண்டை!

மெட்ரோவை வியக்க ஒன்றுமேயில்லையா? ஏன் இல்லை? உதயகுமாரின் ஒளிப்பதிவில் அப்படியே மெட்ரோ சிட்டிக்குள் கரைந்து போகிறோம் நாம். அதுவும் குழந்தையுடன் பைக்கில் வரும் ஒரு தம்பதியிடம் திருடர்கள் கைவரிசையை காட்டுகிற காட்சி…. பயங்கரம்! அந்தக் குழந்தை அப்படியே அந்தரத்தில் பறந்து வரும்போது நமது உயிர் தவிக்க ஆரம்பித்துவிடுகிறது. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, படம் முழுக்க இருட்டு உலகத்தின் திருட்டு பயங்கரத்தை தன் ஒளிப்பதிவால் நிஜமாக்கியிருக்கிறார் உதயகுமார்.

ஜோகனின் பின்னணி இசையும் மிரட்டுகிறது.

ஏன்யா… காதலிக்காகதான் சங்கிலி பறிக்க ஆரம்பிச்சான். அப்புறம் அவன் காதல் என்னாச்சு? காட்ட வேண்டாமா? இப்படி அரையும் குறையுமாக படத்தை இயக்கியிருந்தாலும் ஆனந்த கிருஷ்ணனை பாராட்டதான் வேண்டும். ஏனென்றால், செயின் பறிப்பு திருடர்களின் பின்னணியையும், அந்த நெட்வொர்கின் நெடுந் தொலைவையும் ஆராய்ச்சி கண்ணோடு அணுகியிருக்கிறாரே… அதற்கு!

மெட்ரோ- கொள்ளையடிக்கவில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Anbu Saran says

    பிரபல ஊடகங்கள் உட்பட அனைத்ஊது டகங்களும் பாராட்ட, உங்களின் விமர்சனம் மட்டம் வித்தியாசமாய் இருக்கிறது. ஆயிரத்தில் ஒரு சினிமா வெப்சைட் என்பதற்கு வாழ்த்துகள்..

  2. கிரி says

    அந்தணன் உங்க விமர்சனத்தை நம்பி இப்படத்தை திரையரங்கில் பார்க்காமல் விட்டதற்காக என்னை நானே நொந்து கொண்டேன் 🙁

    சமீபமாக பார்த்த படங்களில் நான் ரொம்ப ரசித்த படங்களில் இதுவும் ஒன்று.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Onbathilirundhu Pathuvarai Movie Stills

Close