மீண்டும் C2H? மத்திய அமைச்சரை சந்தித்தார் சேரன்!
‘பிழைத்தோமடா சாமீ’ என்று சிறுபட தயாரிப்பாளர்களும், நல்ல படத்தை மட்டுமே தருவது என்கிற கொள்கையிலிருந்த தயாரிப்பாளர்களும், லேசாக மூச்சுவிட ஆரம்பித்த நேரம்தான் சேரனின் C2H அறிவிப்பு நேரம். வில்லங்க விநியோகஸ்தர்கள், கள்ளக்கணக்கு தியேட்டர்காரர்கள், இவர்களை தாண்டி நேரடியாக மக்களுக்கும் தயாரிப்பாளர்களுக்குமான உறவை பலப்படுத்துகிற திட்டம்தான் சேரனின் C2H.
“100 கேள்விகள் வேண்டுமானால் கூட கேளுங்க… எல்லாத்துக்கும் முறையான பதில் இருக்கு” என்ற சேரன், நிருபர்கள் மத்தியில் அத்தனை கேள்விகளுக்கும் விளக்கமான பதில் கூறி, “ஆஹா… இதுவல்லவோ திட்டம்” என்று அவர்கள் வாயாலேயே பாராட்டு வாங்கினார். ஆனால், சேரனின் கைக்கு எட்டிய அந்த இனிப்பு நாக்குக்கு எட்டாமல் போனது விதி வசத்தால் அல்ல. வில்லங்கமானவர்கள் சூழ்ச்சியால்!
‘மாயக்கண்ணாடி’ பட வெளியீட்டின் போது தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் குடும்பத்தினர் வாங்கிய மூன்றரை கோடி கடனுக்காக இவர் தன் செக்கை கொடுக்க, அவ்வளவு கடனும் இவர் தலையில். அதுதான் வட்டியும் குட்டியுமாக வந்து நின்று C2H திட்டத்தை காவு வாங்கியது. கை கொடுத்து திட்டத்தை காப்பாற்ற வேண்டிய அமைப்புகள் சைலண்ட் ஆகிவிட்டபடியால், திட்டமே அவுட்!
இப்போது மீண்டும் சுதாரித்துக் கொண்ட சேரன், சினிமாவையும், சிறுபட தயாரிப்பாளர்களையும் காப்பாற்றும் நோக்கத்துடன் அத்திட்டத்தை மீண்டும் கொண்டு வர ஆசைப்படுகிறார். முதல் முயற்சியாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து விரிவாக பேசியிருக்கிறார்.
நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக!
To Listen Audio click below:-
https://youtu.be/RnRpRFKruH0