கொம்பனுக்கு எதிரான மனு தள்ளுபடி! கிருஷ்ணசாமி மீது வழக்கு தொடர்கிறார் ஞானவேல்ராஜா?
இன்று பிற்பகல் அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிவிட்டது மதுரை நீதிமன்றம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். தட்டுல மசாலா வித்தவனெல்லாம் சுண்டல்காரன் என்கிற போக்கு வயிற்றுப் போக்கை விடவும் பெரிய வியாதியாக இருக்கிறது திரையுலகத்தில். எந்த படம் பூஜை போட்டாலும், அது என்னோட கதை என்று சிலர் கிளம்பி வருவதும், அந்த கதை எங்க சமூகத்திற்கு எதிரானது. எப்படி ஷுட்டிங் பண்ணுற பார்ப்போம் என்று பொங்குவதுமாக சினிமாவுலகத்திற்கு பிடித்தது சனி. (நாங்களே கதையிருந்தா எடுத்துர மாட்டோமா என்று கும்பல் மண்டையை பிய்த்துக் கொண்டு அலைகிறது. அது தனி கதை)
இதையெல்லாம் ஒற்றுமையா நின்னு எதிர்க்கலேன்னா எதிர்காலத்துல அவங்கவங்க புகைப்படத்தை எடுத்துக்கறதுக்கு கூட சாதி சங்க தலைவர்களிடம் பர்மிஷன் கேட்கணுமே என்கிற அளவுக்கு திகிலில் ஆழ்ந்து கிடக்கிறது திரையுலகம். இந்த நிலையில்தான் கொம்பன் கதையில் வேறு சாதிக்காரர்களை அவமானப்படுத்துவது மாதிரி காட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தை நாடினார் புதிய தமிழகம் கட்சி தலைவர் எம்.கிருஷ்ணசாமி. நீதிமன்றமும், படத்தை ஓய்வுபெற்ற இரு நீதிபதிகளையும் மனுதாரரையும் படத்தயாரிப்பாளரையும் மீண்டும் படம் பார்க்க உத்தரவிட்டது. அந்த காட்சியின் ரிப்போர்ட் போவதற்குள், படத்தையே பார்க்கவிடாமல் ஒரே அமளி துமளி. அதையும் அப்படியே ரிப்போர்ட்டாக அனுப்பினார்கள் நீதிபதிகள்.
இன்று மதுரை நீதிமன்றத்தில் அது தொடர்பான தீர்ப்பு. படத்திற்கு இடைக்கால தடை என்று நீதிமன்றம் உத்தரவு தராவிட்டாலும், தார்மீக ரீதியாக படத்தை இந்த தீர்ப்புக்கு பிறகே ரிலீஸ் செய்யலாம் என்று காத்திருந்தார் கொம்பன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. பிற்பகல் மூன்று மணிக்கு கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி. இதையடுத்து இன்று மாலை உலகம் முழுவதும் கொம்பன் வெளியாகிறது.
அதுமட்டுமல்ல, இந்த இழப்புக்கும் மன உளைச்சலுக்கும் நீதி கேட்டு, கிருஷ்ணசாமி மீது வழக்கு தொடர முடிவெடுத்திருக்கிறாராம் ஞானவேல்ராஜா. நல்ல செய்தி.