கஷ்டத்தை புரிந்து கொண்டவர் ஸ்ருதிஹாசன்! விஜய் பட தயாரிப்பாளர் பெருமிதம்

PVP நிறுவனம் தயாரிப்பில் நாகார்ஜுனா – கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்காததால், ஸ்ருதிக்கு எதிராக பல நடவடிக்கைகளை அந்நிறுவனம் எடுத்து வருகிறது. குறிப்பாக அந்தப் படத்தில் நடிக்காமல் வேறொரு முன்னணி ஹீரோவின் புதிய படத்திற்கு சென்றுவிட்டார் என்று வதந்தியை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறானது.

எங்களது தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்து வரும் ‘புலி’ படத்தில்தான் ஸ்ருதிஹாசன் ஏப்ரல்-1 முதல் ஏப்ரல்-15ம் தேதி வரை நடிக்கவுள்ளார்.

தற்போது ஸ்ருதிஹாசன் தமிழில் விஜய்யுடன் ‘புலி’ படத்திலும், இந்தியில் அக்ஷய்குமாருடன் ‘கப்பர்’ படத்திலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ‘ஸ்ரீமந்துரு’ படத்திலும் என மூன்று மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் அவர் ‘புலி’ படத்தை பொருத்தமட்டில் சொன்ன தேதியில் கரெக்டாக படப்பிடிப்புக்கு வருவதும், அர்ப்பணிப்போடு அவர் நடிப்பதையும் ஒட்டுமொத்த யூனிட்டே பாராட்டி வருகிறது. உலகநாயகன் கமலஹாசன் வாரிசு என்ற துளி பந்தா கூட இல்லாமல் அவர் எளிமையோடு நடந்து கொள்வது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

‘புலி’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் தலைமையில் 150 பேருக்கும் மேலானோர் இரண்டு மாதம் பணிபுரிந்து காடும் – ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் யாரும் பார்த்திராத வகையில் கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டியது வரும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும் என்று எங்கள் கஷ்டத்தை தெரிவித்தோம். அதை புரிந்துகொண்டு இறுதிகட்டத்தில் ஒரு படம் நின்றுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ‘புலி’ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும் தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு தந்த ஸ்ருதிஹாசனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு ‘புலி’ பட தயாரிப்பாளர்கள் சிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கொம்பனுக்கு எதிரான மனு தள்ளுபடி! கிருஷ்ணசாமி மீது வழக்கு தொடர்கிறார் ஞானவேல்ராஜா?

  இன்று பிற்பகல் அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிவிட்டது மதுரை நீதிமன்றம். தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். தட்டுல மசாலா வித்தவனெல்லாம் சுண்டல்காரன் என்கிற போக்கு...

Close