காந்த குரலோனுக்கு பாராட்டு விழா !

ஏசுதாஸ் குரலில் இருக்கிற வசீகரத்தை தாண்டுகிறவர் எவரும் இல்லை. ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக பாடி வரும் ஏசுதாஸ் இப்பவும் இளம் இசையமைப்பாளர்களோடு இணைந்து பாடிக் கொண்டிருப்பதுதான் ஆச்சர்யம். அனிருத், யுவன்சங்கர்ராஜா, டி.இமான் என்று ஐந்தாவது தலைமுறையும் அவரது குரலை தேடுகிறது. அதுதான் ஏசுதாசின் பெருமை.

அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில் ஏசுதாஸ் பாடல்களுக்காக மட்டும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த முன் வந்துள்ளது லட்சுமண் ஸ்ருதி இசைக்குழு. ஜனவரி 25 ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களும், பாடகர்களும் கலந்து கொள்ளப் போகிறார்களாம். இந்த விழா குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள் தேனிசைத்தென்றல் தேவா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், மற்றும் ஏசுதாசின் மகன் விஜய் ஏசுதாஸ் ஆகியோர்.

நானென்லாம் ஏசுதாஸ் ரெக்கார்டிங்குக்கு வருகிறார்னா அவ்வளவு பயபக்தியா இருப்பேன். அவருக்கு டிராக் பாடுறதுன்னா பயமா இருக்கும். ஏன்னா அதுல ஏதும் ஸ்ருதி தவறி அதை அவர் கேட்டுவிடக் கூடாதேன்னு அச்சமா இருக்கும். தும்பை பூ கலர் வேஷ்டி. அதே கலர் சட்டை. மெல்லிய கண்ணாடியை எடுத்து போட்டுக் கொண்டு பெரிய பெரிய எழுத்தில் பாடலை ஒரு முறை எழுதி வைத்துக் கொள்வார்கள். சில முறை ரிகர்சல் எடுத்துக் கொண்டு டேக் போனால் ஒரே டேக்தான். அவர் வந்து கண்ணாடியை துடைச்சு போடுறது. பேப்பர்ல பாடல் வரிகளை எழுதுவதையெல்லாம் நான் அப்படியே ரசிச்சு பார்த்துட்டு இருப்பேன். ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு’ பாடலுக்கு நான் இசையமைச்சிருந்தாலும், அதை அவர் குரல்ல பாடியதால்தான் அவ்வளவு பெரிய ஹிட் ஆச்சு என்றார் தேவா.

இப்படியொரு விழா எடுக்கிறேன்னு லட்சுமண் ஸ்ருதி சொன்னபோது, அவர் ஏன் இதெல்லாம்னு கேட்டிருப்பார். ஏன்னா அவர் இதுபோன்ற புகழ்ச்சியையெல்லாம் விரும்ப மாட்டார் என்ற தேவா, ‘அப்படிதானே?’ என்றார் ராம் லட்சுமணன் இருவரையும் பார்த்து. அவர்களும் ஆமாம் என்றார்கள் சிரித்துக் கொண்டே.

முன்னெல்லாம் நான் கலர் கலரா டிரஸ் பண்ணுவேன். சிவப்பு கலர் பேண்ட், பச்சை கலர் சட்டைன்னு போட்டுட்டு வருவேன். ஒரு நாள் ஏசுதாஸ் அண்ணாதான், இப்படியெல்லாம் டிரஸ் பண்ணக் கூடாது. ஒயிட் அண் ஒயிட் போடுன்னு சொன்னார். இன்னைக்கு வரைக்கும் அதை ஃபாலோ பண்றேன் என்றார் சங்கர் கணேஷ்.

வந்தோம்… பாடினோம்னு இல்லாம, தனிப்பட்ட முறையில் பழகிய ஏசுதாசின் இன்னொரு பக்கத்தையும் அங்கே அவர்கள் விவரித்த போது ஆச்சர்யமே மிஞ்சியது.

இந்த நிகழ்ச்சி தொடர்பான தகவல்களுக்கு பின்வரும் நம்பரை தொடர்பு கொள்ளலாம். 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778.

1 Comment
  1. Sundar says

    Chittukku Chella chittukku is from the movie Nallavanukku Nallavan and the Music Director is Isaignani Ilayaraja, Not Deva. Is this statement said by Deva himself ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“Uttama Villain” official trailer

https://www.youtube.com/watch?v=mwOFWJUOpv8

Close