வைத்தீஸ்வரன் கோவிலில் கவுதமி! கமல் உடல் நலம் பெற பிரார்த்தனை?
கடவுள் இல்லேன்னு சொல்லல… இருந்தா நல்லாயிருக்கும்னு சொல்றேன்! இது கமல் பேசிய வசனங்களில் ஒன்று. கடவுள் மறுப்பு கருத்துக்களுக்காக இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டவர் கமல். இராம கோபாலன் போன்ற தீவிர மதப்பற்றாளர்களின் வாயில் விழுந்து புறப்படுவது அவருக்கு புதியதல்ல. எப்போதுமே கடவுள் பற்றிய விஷயத்தில், தன்னை பகுத்தறிவாளராக காட்டிக் கொள்ள தயங்கியதேயில்லை கமல். அப்படிப்பட்ட கமலுக்கு அருகிலிருப்பவர்களும் அப்படியிருக்கிறார்களா என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கிறது கவுதமியின் வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம்.
நோய் தீர்க்கும் ஸ்தலம். நவ கிரகங்களில் ஒன்றான செவ்வாய் இங்கே அமர்ந்து அருள்பாலிக்கிறார் என்றெல்லாம் ஐதீகங்கள் இந்த ஸ்தலத்திற்கு உண்டு. எனவே உடல் நலம் குன்றியவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துச் செல்வதும் வாடிக்கை. அப்படிப்பட்ட கோவிலுக்கு நேற்று வந்திருந்தார் கவுதமி.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மிக சிம்பிளாக வந்திருந்த அவரை வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது கோவில் நிர்வாகம். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் அவர் சாமி கும்பிட்டு விட்டு சென்றதை சற்று ஆச்சர்யத்தோடுதான் கவனித்தது பொதுஜனம்.
எந்த நோக்கத்திற்காக கவுதமி வந்தாரோ? ஆனால் அவர் கமல் உடல் நலமில்லாமல் இருக்கிறார் அல்லவா? அவர் விரைவில் குணமடைய வேண்டி வந்திருப்பதாக கிசுகிசுக்கவும் தவறவில்லை அதே பொதுஜனம்.