குபீர்- விமர்சனம்
வயலும் வாழ்வும் மாதிரி, இது குடியும் கும்மாளமும்!
இப்படியெல்லாம் படமெடுக்கிற துணிச்சல், ட்வென்ட்டி ஃபோர் அவர்ஸ் குடிகாரர்களுக்கே கூட வராது. ஆனால் இந்த படத்தில் வரும் ஐந்து இளம் குடிகாரர்கள், ‘அட… தமிழ்சினிமாவே, உன் ஃபார்முலாவையெல்லாம் உடைச்சு ஊற வச்சு உப்பு கண்டம் போட்டுட்டோம் பாரு’ என்று எள்ளி நகையாடுகிறார்கள். இளங்கன்று பயமறியாது. (சமயங்களில் கதையும் அறியாது)
அதிர வைக்கும் ஃபைட் இல்லை. அள்ளி அணைக்கிற காதல் இல்லை. சுவிட்சர்லாந்தில் டூயட் இல்லை. முக்கியமாக க்ளைமாக்சில் பின்னி மில் இல்லை. அட… படத்துல கதையே இல்லைப்பா! அப்படியிருந்தும் படம் இரண்டு மணி நேரம் ஓடுகிறது. ஒருவரும் தியேட்டரிலிருந்து ஓடாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். கோவில் பிரசங்கம் கேட்டிருக்கிறோமல்லவா? இது குடிகாரர்களின் பிரசங்கம். அவ்வளவுதான். வானத்திற்கு கீழேயிருக்கிற எல்லா விஷயங்களையும் பேசுகிறார்கள். பேசுகிறார்கள்.. பேசிக்கொண்……..ண்டேயிருக்கிறார்கள்.
ஒரு வீக் எண்ட் தினத்தை கொண்டாட நினைக்கிற ஐந்து நண்பர்கள் அதற்காக ஆயத்தமாவதில் தொடங்குகிறது படம். ஐந்து பேரும் வெவ்வேறு தொழிலில் இருப்பவர்கள். அப்படியே நண்பனின் அறைக்குள் நுழைகிறார்கள். சரக்கு, பாட்டு, தாளம், அரசியல், சினிமா, வரலாறு, பூகோளம் என்று ஆரம்பித்து எல்லா விஷயங்களையும் பேசிக் கொண்டிருப்பதுதான் படம். அடுத்த சீனிலாவது எல்லாரும் கிளம்பி, அல்லது ஒருவராவது கிளம்பி அறைக்கு வெளியில் செல்வார். கேமிராவும் அவர் பின்னால் செல்லும் என்று நினைத்தால், அட போங்கடா!
ஆனால் வசனம் எழுதப்பட்டு பேசப்பட்டதா, அல்லது வாய்ல வந்ததை பேசுங்க என்று பேச ஆரம்பித்தார்களா தெரியவில்லை. பட்… அவ்வளவு லைவ்! அதுவும் பிரபாகரன் பற்றி இவர்கள் கொடுக்கிற விளக்கம், இந்தி படிக்க விடாம தாத்தா சதி செஞ்சுட்டாரு என்று கலைஞரை வாரி, அட… அதுக்கு அவரு காரணமில்லப்பா. பெரியார்தான் அதை ஆரம்பிச்சு வச்சார் என்று வரலாற்றை புரட்டி புரட்டி விஷயங்களை காதில் திணிக்கிறார்கள்.
அஜீத் நடித்த ராஜா படத்தையும், விஜய் நடித்த புதிய கீதை படத்தை வாரு வாரென வாருகிறார்கள். அவன் இருக்கானே… இவன் இருக்கானே என்று மிச்சசொச்ச ஹீரோக்களை இவர்கள் வறுக்கும் போது, அட ங்கொப்புறானே என்று வியக்க தோன்றுகிறது.
நடுநடுவே வேறு ஏதாவது படங்களில் வந்த பாடல்களை போட்டுவிட்டு ஆடுகிறார்கள். குடி ஏற்றத்தில், சக நண்பனை வலுக்கட்டாயமாக மடக்கி அவன் மீசையை மழிக்கிறார்கள். இன்னொருவனின் மண்டைய ரேசரை வைத்து பிறாண்டுகிறார்கள். கடைசியில் எல்லாரும் கிளம்பி, சரக்கு தீர்ந்து போச்சு வாங்கிட்டு வர்றோம் என்று கிளம்ப, படமும் முடிகிறது.
அட… இந்த சினிமாக்காரர்கள் அடிக்கடி சொல்வார்களே, ஜானரோ? ஸ்பானரோ? ம்… இதுவும் அப்படியொரு ஸ்பானர்தான்.
இந்த அரிய பெரிய சேவையை நாட்டுக்கு ஆற்றியிருக்கும் நல்ல உள்ளங்கள் இவர்கள்தான். டைரக்டர் திலிப்- நடிகர்கள் திலிப், ரவி, பிரபு, பிரதாப், தமிழ், ஒயிட் – இசை விஷால், ஆதித்யா. இந்த படத்தையும் ஒருவர் பணம் போட்டு தயாரித்திருக்கிறார். பெயர் ஆர்ச்சர் சினிமாஸ்
வேலையில்லாதவர்கள், வெட்டியாக பொழுதை கழிப்பவர்கள், ஃபிகரை தள்ளிட்டு போக இடம் தெரியாதவர்கள், போதை ஆசாமிகளின் உளறல்களை கேட்க பிரியப்படுகிறவர்கள் எல்லாரும் கிளம்புங்க… அருகாமை தியேட்டர்களில் ‘குபீர்’ ஓடுச்சுன்னா, உங்களுக்கு அதிர்ஷ்டம்னு அர்த்தம்.
-ஆர்.எஸ்.அந்தணன்