ஹன்சிகாவா? நித்யாமேனனா? யார் அழகு? ஆடியோ விழாவில் ஆவேசப்பட்ட நடிகை!
நடிகை ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ‘உயிரே உயிரே’. இதை ‘சத்யம்’ பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்க வளாகத்தில் செம சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது. சுவாரஸ்யத்திற்கு காரணம் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்திருந்த மோகன்பாபு, அனில்கபூர், வடக்கை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரபல அரசியல் கட்சி தலைவரான அமர்சிங் ஆகியோரின் வரவுதான். ஏதோ வீட்டின் வரவேற்பறையில் உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருப்பது மாதிரி மைக்கை பிடித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அதுவும் மோகன்பாபுவின் பேச்சில் தன்னை வாழ வைத்த தமிழகத்தின் மீதிருந்த அன்பும், திரையுலகத்தின் தற்காலிக நிலவரமும் கலந்து கட்டி அடிக்க… மனுஷன் பிச்சு உதறிட்டாரேப்பா பீலிங்ஸ்சில் திளைத்தார்கள் ரசிகர்கள்!
இங்குதான் அந்த பொல்லாப்பையும் அரங்கேற்றினார் பாடலாசிரியர் விவேகா. ‘இந்த படத்தின் எல்லா பாடல்களையும் நான் எழுதியிருக்கேன். ஒரு காதல் பாடலுக்கு பல்லவி எழுதும்போது, டைரக்டர் ராஜசேகர் என்னிடம் சொன்னார். “நீங்க மனசுல நித்யா மேனனை நினைச்சுகிட்டு எழுதாதீங்க. அழகான ஹன்சிகாவை நினைச்சுகிட்டு எழுதுங்க”ன்னு. உடனே நான் இப்படி எழுதினேன்.
‘இதுவரை பிறந்ததிலே இவள்தான் அழகி. உலகத்தின் மலர்களுக்கு இவள்தான் தலைவி’
பாடலின் பல்லவியை அவர் பாட்டுக்கு சொல்லிவிட்டு அமர்ந்துவிட, பின்னாலேயே மைக்கை பிடித்த நடிகை ஸ்ரீப்ரியா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘யாருங்க சொன்னா நித்யா மேனன் அழகு இல்லேன்னு. ஹன்சிகா அழகுதான். அதுக்காக நித்யாமேனன் அழகு இல்லேன்னு சொல்லாதீங்க. அவ்வளவு க்யூட்டான, நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகை நித்யாமேனன்’ என்று வெடித்தார். பின்னே என்னவாம்? நித்யாவை ஹீராயினாக வைத்து ஒரு படத்தை இயக்கியவராச்சே!
சரி… பாடல்கள் எப்படி? வந்திருந்த அத்தனை பேரையும் கிறங்கடிக்கிற மாதிரியான ஒளிப்பதிவு. ஒட்டு மொத்த விருந்தினர்களும் ஆர்.டி.ராஜசேகரை பாராட்டித் தள்ளினார்கள். எனக்காக இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்ட அவருக்கு நன்றி என்றார் ஜெயப்ரதா. அவர் இவரை இப்படி பாராட்ட, தன் பங்குக்கு விடுவாரா ஆர்.டி?. சத்யஜித்ரேவே ஜெயப்ரதாவை கிளாசிக்கல் ப்யூட்டி என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு பிறகு கிளாசிக்கல் பியூட்டி நம்ம ஹன்சிகாதான் என்று இருவரையும் ஒரே நேரத்தில் பாராட்டினார்.
‘மூக்குல கத்தி வைக்காத ஒரே அழகி ஜெய்பரதாதான்’ என்று போகிற போக்கில் ஸ்ரீதேவியை வாரிவிட்டு போனார் ஸ்ரீப்ரியா. இப்படி ஒரு முழு நீள படத்தை விடவும் சுவாரஸ்யமாக நடந்து முடிந்தது விழா.