ஹாரிஸ் ஜெயராஜோடு கா?! ஏனென்று விளக்குகிறார் உதயநிதி!

இம்மாதம் 29 ந்தேதி திரைக்கு வரப்போகிறது உதயநிதி ஹன்சிகா நடிப்பில் உருவான ‘மனிதன்’. இதில் லாயர் வேடத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி. விதி படம் வெளிவந்து சுமார் 30 ஆண்டுகளாவது இருக்கும். இப்போது நீதிமன்ற பின்னணியில் முழுக்க முழுக்க வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படம் வரப்போகிறது. அந்த வசனங்களை மூச்சடைக்க பேசப் போகிறார் உதயநிதி என்று நினைத்தாலே என்னமோ பண்ணுகிறது அல்லவா? அங்குதான் ட்விஸ்ட்!

“இந்த கதையை படமாக்கணும்னு நினைச்சவுடனேயே நான் வசனத்தை பக்கம் பக்கமா பேசியாகணுமேன்னு பயந்தேன். நான் பயந்த மாதிரிதான் நடந்துச்சு. எழுதி தள்ளிட்டாங்க. ஆனால் எல்லாத்தையும் முறையா பேசி பயிற்சி எடுத்து பிறகுதான் ஷாட்ல வந்து நின்றேன். முதல் படத்தில் டான்ஸ் ஆடத் தெரியாது. ரெண்டாவது படத்தில் அதை சரி பண்ணிகிட்டேன். ரெண்டாவது படத்துல பைட்ல வீக். மூன்றாவது படத்தில் அதை சரி பண்ணிகிட்டேன். இப்போ மனிதன்ல நான் பேசியிருக்கும் டயலாக்குகளை கேட்டால், பரவால்ல உதயநிதி தேறிட்டாரேன்னு நினைப்பீங்க” என்றார் மெல்லிய சிரிப்புடன்.

இப்படத்தின் இயக்குனர் அகமத், அவரது முந்தைய படத்தில் ஹாரிஸ் ஜெயராஜைதான் இசையமைக்க வைத்தார். உதயநிதியின் முந்தைய படங்கள் அனைத்திலும் ஹாரிஸ்தான் மியூசிக். ஆனால் இரண்டு பேருமே மனிதன் படத்தில் ஹாரிசுக்கு கா விட்டுட்டாங்களே, ஏன்? கேள்வியை உதயநிதியிடம் கேட்டால், அகமது முந்திக் கொள்கிறார். “அப்படியில்ல. ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கலைஞர்களுடன் வொர்க் பண்ணும்போது எக்ஸ்பீரியன்ஸ் ஷேர் ஆகும். திரும்ப திரும்ப ஒரே டெக்னிஷியனிடம் வொர்க் பண்ணினால் அதுக்கு இடம் இருக்காது. அதனால்தான் ஹாரிஸ் இல்ல. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அவ்வளவு இனிமையா வந்திருக்கு” என்றார்.

வசனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதியிருக்கிறார்.

பேச்சு மெல்ல உதயநிதியின் கோப ட்விட் பற்றி போனது. “பெய்டு க்ரிட்டிக் னு பொத்தாம் பொதுவா திட்டி தீர்த்துட்டீங்களே, உங்களுக்கு அவ்வளவு கோவமா க்ரிக்ட்டிஸ் மேலல்லாம்?” கேள்வியை முடிப்பதற்கு முன் பரபரப்பான உதயநிதி, “நான் எல்லாரையும் அப்படி சொல்லல. என்னை விமர்சனம் பண்ணக்கூடாதுன்னும் சொல்லல. ஆனால் ரொம்ப காயப்படுற மாதிரி எழுதுறதைதான் ஏத்துக்க முடியல” என்றார்.

மனிதன் படத்தை பொறுத்தவரை க்ரிட்டிக்ஸ் யாரும் கிழிபட மாட்டாங்கன்னுதான் தோணுது! எதுக்கும் உஷாரா இருங்க க்ரிக்டிக்ஸ்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Manithan Movie Stills

Close