ஆமா… இதுல நடிக்க சசிகுமார் எப்படிதான் ஒத்துக்கிட்டாரோ?
கிடாரிக்கு பிறகு சசிகுமார் நடிக்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’! “அண்ணே… இதுல சாதியெல்லாம் ஒண்ணுமில்லண்ணே…” என்கிறார் சசி. அப்புறம் என்னத்துக்கு இப்படியொரு தலைப்பு?
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துல சிவாஜி பேசுகிற புகழ்பெற்ற வசனமாச்சே என்பதால் வைத்தாராம் இப்படத்தின் டைரக்டர் பிரகாஷ், சசிகுமாரிடமே அசிஸ்டென்ட்டாக இருந்தவர் இவர். தான் வளர்த்த கன்னுக்குட்டி எப்படி பாயும் என்பது சசிக்கு மட்டும்தானே தெரியும்? சடக்கென்று மடக்கிப் போட்டுவிட்டார்.
“கம்ப்ளீட் காமெடிப்படம்ணே…” என்று சந்தோஷமாக பேச ஆரம்பிக்கும் சசிகுமார்தான் இப்படத்தின் புரட்யூசர் என்பதும் சந்தோஷமான விஷயம்தான். (மொத்த கொள்முதலும் ஒரே சாக்குக்குள் அடைபடுவது சந்தோஷமில்லாமல் வேறென்ன?)
“இதுல நான் நடிச்சுருக்கேன்றது கூட பெரிய விஷயமில்ல. செல்ஃபி காத்தாயி என்ற கேரக்டரில் கோவை சரளாம்மா நடிச்சுருக்காங்க. படம் முழுக்க அவங்க பண்ணுற அட்டகாசம்தான் இந்தப்படம். கதையை அவங்ககிட்ட சொல்லும்போது, ‘என்னப்பா… படம் முழுக்க நான்தான் வர்றேன். இதுக்கு சசிகுமார் எப்படி ஒத்துக்கிட்டாரு?’ என்றாராம் அவர். அதுக்காக அவரும் நானும் பாட்டி பேரன் கேரக்டர்ல நடிக்குறேன்னு நினைச்சுடாதீங்க. அவங்க வேற… நான் வேற…” என்கிறார் சசி.
“பேஸ்புக், ட்விட்டர், நெட்னு கிராமம் வரைக்கும் சோஷியல் மீடியா பரவிருச்சு. இதைதான் படத்துல கழட்டி தொங்க விட்ருக்கோம்” என்ற சசி, சமீபத்தில்தான் பேஸ்புக்குக் ட்விட்டர் உலகத்துக்கே வந்தார் என்பதுதான் வாயை மூடிக் கொண்டு சிரிக்க வேண்டிய செய்தி.