ரெண்டு வட சாப்ட்டு போங்க சார்… சந்தானத்தை கலாய்த்த டீக்கடைக்காரர்?

தன் சகாக்களின் புன்னகையோடும், ரசிகர்களின் விசில்களோடும் மேடையேறிய சந்தானத்துக்கு இந்த விழா ஸ்பெஷல்தான்! ‘இனிமே இப்படிதான்’ படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கிறார் என்பது ஊரறிந்த விஷயம்தான். ஆனால் இதற்கு முன்பு அவர் ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ பிவிபி நிறுவனத்தின் தயாரிப்பு. ஆனால் சந்தானம் சொந்த பணத்தை போட்டு எடுத்திருக்கும் முதல் படம் இதுதான். முருகன், ஆனந்த் என்று இரண்டு இயக்குனர்கள், முருகானந்த் என்ற பெயரில் ஒன்றாக இணைந்து இயக்கியிருக்கிறார்கள். சந்தோஷ் இசையமைத்திருக்கிறார்.

‘சந்தானம் ஒரு சிறந்த ஆன்மீகவாதி, சந்தானம் நண்பர்களை விட்டுக்கொடுக்காதவர்’ என்றெல்லாம் விழாவுக்கு வந்திருந்த தம்பி ராமய்யா போன்ற விஐபிகள் சர்டிபிகேட் கொடுத்தாலும், அவரது குளோஸ் (அப்) பிரண்ட்ஸ்களான உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிம்பு ஆகியோர் சந்தானத்திற்கு தந்த பாராட்டுகள் உண்மைக்கு சற்று அருகிலிருந்தன. ஆர்யா பேசும்போது, ‘இந்த படத்துக்கு முதல்ல வச்ச தலைப்பே வேற. இனிமே ஹீரோதான் என்று வச்சிருந்தார். ‘என்னடா… டைட்டில்ல ஸ்டார் படமெல்லாம் போட்ருக்கே. லிட்டில் சூப்பர் ஸ்டரான சிம்புவே இப்படி போட்டுக்கிட்டதில்லையேன்னு சொன்னேன். அப்போ சந்தானம் ‘இனிமே இப்படிதான்’னு சொன்னான். அதை விட இப்ப நீ சொன்னியே இது நல்லாயிருக்குன்னு சொன்னேன். அதையே அப்புறம் டைட்டிலா வச்சுட்டோம்’ என்றார் ஆர்யா.

‘நான் ஹீரோவா நடிக்கப் போறேன்னு சொன்னதும், அதுக்கு ரொம்ப ஸ்லிம்மாவனும்னு ஆர்யா சொன்னான். அதுக்கு ஒரு டீ இருக்கு. அதை குடிச்சா ஸ்லிம் ஆயிடலாம்னு சொன்னான். ஒரு டீ குடிச்சா ஸ்லிம் ஆகிடலாமா? ரொம்ப நல்லாயிருக்கே, அந்த டீ எங்க இருக்குன்னு கேட்டேன். காலையில் நாலு மணிக்கு வாடான்னான். போனா, சைக்கிளோட ரெடியா நிக்கிறான். எனக்கும் ஒரு சைக்கிளை கொடுத்து, வா… அந்த டீ வாங்கி தர்றேன்னான். போன இடம் மஹாபலிபுரம். கார்ல போய் டீ குடிக்க சொன்னா கூட, அவ்ளோ தூரமான்னு கேட்பேன் நான். ஆனால் சைக்கிள்ல போய் டீ குடிச்சோம். எனக்கு வேர்த்து தொப்பலா நனைஞ்சுருச்சு. அங்க போய் தினமும் டீ குடிச்சோம். நாங்க தினம் வர்றதை பார்த்துட்டு கடைக்காரன், காலையில நாலு மணிக்கெல்லாம் வடை போண்டாவெல்லாம் போட ஆரம்பிச்சுட்டான். என்ன சார்… இவ்ளோ தூரம் வந்திங்க. ரெண்டு வடை சாப்ட்டு போங்கன்றான்…’ என்று சந்தானம் பேச பேச தியேட்டர் கலீர் என்றானது.

இந்த விழாவில் சந்தானம் அறிவித்ததுதான் திரையுலகம் கவனிக்கப்பட வேண்டிய மெசேஜ். ‘நான் இனிமே ஹீரோவாதான் நடிப்பேனா என்றால், ‘ஆமாம்…!’ ஆனால் என் ஆரம்பகால நண்பர்கள் சில பேர் இருக்காங்க. சிம்பு, ஆர்யா, டைரக்டர் ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின்னு ஒரு லிஸ்ட். அவங்களுக்காக மட்டும், அவங்க படத்தில் காமெடியனா நடிப்பேன்’ என்றார்.

ஏணியை மதித்தவர்கள் என்னைக்குமே சோடை போனதில்ல…. கலக்குங்க சந்தானம்!

பின்குறிப்பு. இந்த விழாவில் சிம்பு, ‘உசுரு மட்டும்தான் போவல. மத்ததெல்லாம் போயிருச்சு…’ என்று புலம்பியது தனி செய்தியாக விரைவில்….

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெரிய ஹீரோக்களே… ஜனங்களை துன்புறுத்தாதீங்க! பிரபலத்தின் பேச்சால், சலசலப்பு?

உதயா நடித்த ‘ஆவிக்குமார்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா பென்ஸ் பார்க் ஓட்டலில் நடந்தது. பெயரை பார்த்தாலே தெரிந்திருக்கும் இது எந்த மாதிரியான பட வகையை...

Close