ஒரே ஒரு ஐ? பல ஐ களில் கண்ணீர்!
உலகத்தையே கவனிக்க வைக்கிறது ஐ. ஆனால் ‘முதல்ல என்னை கவனிங்கய்யா…’ என்று கதறுகிறது ஐ யில் பணியாற்றிய பெரும் கூட்டம் ஒன்று. சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியிருப்பதாக சொல்லப்படும் ஐ, யின் ஒரிஜனல் பட்ஜெட் இதுதான் என்று அப்படத்தின் இயக்குனர் ஷங்கரே ஒரு பட்ஜெட் கொடுத்த பின்பும் இந்த 150 கோடியை விடுவதாக இல்லை யாரும். (ஒரு பில்டப்பா இருந்துட்டு போவட்டுமே)
இப்படி 100 அல்லது 150 ஐ முழுங்கிவிட்டு மலைபாம்பு போல நெளிந்து கொண்டிருக்கும் ஐ எப்போது திரைக்கு வரும்? கிடா கிராஸ் ஆயிருச்சுன்னா ஆட்டுக்குட்டிய அவுத்து வுட்டுடலாம் என்று பல படங்களை பூட்டியே வைத்திருக்கிறார்கள் இங்கே. ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனோ, இந்த மாசம் ரிலீஸ். அடுத்த மாதம் ரிலீஸ் என்று ஏகப்பட்ட தேதிகளை பிளாக் பண்ணி, தியேட்டர் வட்டாரங்களை குழம்ப வைத்துக் கொண்டிருக்கிறார். அது ஒரு புறம் இருக்க, படத்தில் பணியாற்றிய பலரும் தங்கள் சம்பள பாக்கி குறித்து வாயை திறக்காமலே இருந்தார்கள். ‘போனால் போவட்டும் போடா’ என்று துணிந்து ஊருக்கே கேட்கிற மாதிரி குரல் எழுப்பிவிட்டார் ஒருவர்.
அவர்? டைரக்டர் ஷங்கரின் அசிஸ்டென்ட்! தனது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக புலம்பியிருக்கும் அவர், ஐ படத்தில் வேலை செய்த வகையில் எனக்கு மூணு மாசம் சம்பள பாக்கி என்று அறிவித்திருக்கிறார். அவருக்கென்ன? கொஞ்சம் பணம். வந்தாலும் வரலேன்னாலும் பெரிய பாதிப்பு இல்ல. நாங்க எங்க போய் புலம்புறது என்று தவியாய் தவிக்கிறார்கள் அதிக பாக்கிக்காக அலைந்து கொண்டிருக்கும் படத்தின் டெக்னீஷியன்கள் பலர்.
ஐ க்கு முன் நம்ம பூலோகம் வந்துரும் என்று காத்திருந்த ஜெயம் ரவியும் இதே கதையம்சம் உள்ள பல வட சென்னை படங்கள் வரவர ‘நம்ம உழைப்பெல்லாம் ஒண்ணுமில்லாம போயிட்டு இருக்கே’ என்று கவலைப்படுகிறாராம். ஒரு ஐ க்காக எத்தனையெத்தனை ஐ-யில் மிதக்கும் கனவுகள் ஒண்ணுமில்லாமல் போகுமோ?