சென்டர்ல பிஜேபி தான்! ரஜினி சொல்லாமல் சொல்லும் புதுக்கணக்கு!

அவரவர் நாக்கை அவரவர்களே பிடுங்கிக் கொள்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது அரசியல்வாதிகளின் கூட்டணி. ‘ஏன்யா… கொஞ்சமாவது வெட்கம் வேணாமா? நேத்து வரைக்கும் ஒருத்தர் எலும்பை இன்னொருத்தர் கடிச்சு துப்பிட்டு இன்னைக்கு என்னய்யா போஸ் வேண்டிக் கிடக்கு போஸ்?’ என்று வீட்டுக்கு வீடு வெந்து தணிகிற இந்த நேரத்தில், ‘தன் கடன் படம் செய்து கிடப்பதே’ என்று அடுத்தப்படத்தின் கதையை டிக் அடித்துவிட்டார் ரஜினி.

புதுக்கட்சியும் போட்டியும் சட்டமன்ற தேர்தலுக்குதான் என்று சொன்ன ரஜினி, புது தகவலாக நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத்திடம் கதை கேட்டு கால்ஷீட் கொடுக்கிற முடிவுக்கும் வந்திருக்கிறாராம். இவ்வளவு கான்பிடன்ட்டாக அடுத்தடுத்த படங்களை கமிட் பண்ணும்போதே தெரிந்துவிட்டது… ரஜினியின் எண்ணமும் நம்பிக்கையும். இன்னும் ஐந்து வருடங்களுக்கு மோடி பிரதமர் என்றால், மிச்சமிருக்கிற வருஷத்தை முக்காமல் முனகாமல் கடந்துவிடுவார் எடப்பாடி. மத்தியில் ஆட்சி மாறினால்தான் தமிழகத்தில் காட்சி மாறும்.

ஒருவேளை அப்படி நடந்தால் இன்னும் ஆறு மாதம் கூட இந்த ஆட்சி தாங்காது. அப்படியிருக்க புது புது படங்களாக கமிட் பண்ணும் ரஜினி, படத்தில் நடிப்பாரா? கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வாரா?

அடுத்தடுத்து படங்களை கமிட் பண்ணுவதை பார்த்தால், மோடி வருவார் என்கிற ரஜினியின் நம்பிக்கையே தலை தூக்கி நிற்கிறது.

ஒருவேளை எதிர்கட்சிகளின் நெத்தியில வைக்கலாம்னு நினைச்சிருக்கிற ஒத்த ரூவாய ஓட்டு மிசினுக்குள்ள வச்சுருக்காய்ங்களோ என்னவோ?

Read previous post:
ஜுலை காற்றில் / விமர்சனம்

Close