ஜுலை காற்றில் / விமர்சனம்

வரவர காதல், பீட்ஸா டெலிவரியை விடவும் சுலபமாகி விட்டது. காதலுக்காக தாடி வைத்த எய்டீஸ் ஹீரோக்களும், கையில் ஆணி அடித்துக் கொண்டு கதறிய அதே கால கட்ட ஹீரோயின்களும் இப்படத்தை பார்த்தால், ‘நாமெல்லாம் வேஸ்டா வாழ்ந்துட்டமே’ என்கிற மன உளைச்சலுக்கு ஆளாகக் கூடும்! இருந்தாலும் இந்த பீட்ஸாவில் சுவாரஸ்யம் ஜாஸ்தி! இன்னும் சொல்லப் போனால், கவுதம் மேனன் ஸ்டைலில் கதை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் கே.சி.சுந்தரம்!

அழகான அஞ்சு குரியனுக்கும் அனந்தநாக்குக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிறது. கையில் விழுந்த கனியாச்சே… அதில் துளி கூட ஆர்வம் வரவில்லை அனந்துக்கு. முழு காதலோடு வருங்கால கணவனுக்காக ஏங்கும் அஞ்சுவின் ஃபீலிங்ஸ், இந்த அனந்துவுக்கு புரியவே இல்லை. தள்ளி தள்ளிப் போகிறார். ஒரு கட்டத்தில், ‘நாம பிரேக்கப் பண்ணிக்கலாமா?’ என்று கேட்க, கல்யாணம் பணால். அனந்தநாக்கை மறக்க முடியாமல் அஞ்சு குரியன் தவிக்க… அவரோ அடுத்த கிளையில் மாம்பழம் தொங்குகிறதா என்று தேடக் கிளம்புகிறார்.

அடுத்த சந்திப்பு சம்யுக்தா மேனன். எந்நேரமும் கால் சட்டையும் கையில்லா பனியனுமாக திரியும் அவருக்கும் இவருக்கும் லவ்… இது சம்யுக்தா முறை. நமக்கு செட் ஆவாது என்று அவர் அனந்த நாக்கை கழற்றிவிட, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறார் ஹீரோ. ஒரு சின்ன விரக்தி புன்னகையோடு ‘ஸாரி’ சொல்லும் பழைய காதலி அஞ்சு குரியனிடம் அவமானப்பட்டு மீண்டும் மாம்பழம் தேடிக் கிளம்புகிறது கிளி. மாம்பழம் கிடைச்சுதா, இல்ல… மாங்கொட்டை கிடைச்சுதா என்பது பொயட்டிக்கான க்ளைமாக்ஸ்!

காற்றில் அலையும் பாலித்தீன் பை போல கண்ட இடத்திலும் மாட்டிக் கொள்ளும் அனந்த நாக் தன் தவிப்பை மிக சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். ‘ஒனக்கு என்னதான்டா வேணும்?’ என்று பக்கத்து சீட் ஆசாமி முணுமுணுக்கிற அளவுக்கு வெறுப்பேற்றுகிறார். மீசை வச்சா இன்னும் நல்லாயிருப்பீங்க தம்பி!

படத்தில் ரெண்டு மூணு ஹீரோயின்கள் நடமாடினாலும், அடக்க ஒடுக்கமாகவும் அழகு பதுமையாகவும் காட்சியளிக்கும் அஞ்சு குரியனுக்குதான் மொத்த ஓட்டும். காதல் தோல்வியை வலிக்க வலிக்க முழுங்கிக் கொள்ளும் காட்சிகளில் அவ்வளவு சிறப்பான நடிப்பு.

சற்றே முற்றியிருந்தாலும், சம்யுக்தா மேனனின் கையில்லா ரவிக்கைக்கு கண் தானம் செய்கிறான் ரசிகன். ‘இந்தா எடுத்துக்கோ’ என்று எந்நேரமும் காற்றாட திரியும் அவரது கவர்ச்சி படத்திற்கு ப்ளஸ்சோ ப்ளஸ்!

சின்னதாய் ஸ்கிரின் ஓரம் கடந்து போகும் பெண்களை கூட தேடி தேடி தேர்வு செய்திருக்கிறார்கள். படமே பச்சை பசேல் என்று இருக்கிறது. இது போதாதென ஒளிப்பதிவாளர் சேவியர் எட்வர்ட்ஸ் புண்ணியத்தில் இலங்கை, கோவா என்று எக்கச்சக்க பசுமை!

ஆங்… சொல்ல மறந்தாச்சே. சதீஷ் இப்படத்தில் காமெடி செய்திருக்கிறார். வழக்கமாக எல்லா படங்களிலும் வெறுப்பேற்றி சாகடிக்கும் மனுஷன், இந்தப்படத்தில் நிஜமாகவே தெறிக்க விடுகிறார். அப்படியே பிக்கப் பண்ணிக்கோங்க சதீஷ்.

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் ஒரு பாடல் கூட தேறவில்லை. இதுபோன்ற காதல் படங்களுக்கு யுவன், செல்வராகவன் கூட்டணி ஃபார்முலா எடுபட்டிருக்கும். ஆனால் கோட்டை விட்டுவிட்டுட்டீங்களே சுந்தரம்?

காதலை புனிதமா நினைக்கிறவங்களுக்கு மட்டும் ‘ஜுவாலை’ காற்று!

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
நெடுநல்வாடை / விமர்சனம்

Close