நெடுநல்வாடை / விமர்சனம்

கருத்து சொல்ற படத்தையெல்லாம் குருத்துலேயே கொன்று விடுகிற வழக்கம் எப்போது வந்ததோ தெரியாது. பல படங்கள் இப்படி பாதி உசுருலேயே பறிபோய் விடுகிற சூழலில், அழுத்தமும் அழகுமாக இன்னொரு படம்! பெண் பிள்ளைக்கும் சொத்தில் பங்கு உண்டு என்கிற நியாயமான கருத்தை, காதலையும் கலந்து சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் செல்வ கண்ணன்!

மெனக்கெட்டு கிரீடம் செய்தது கூட முக்கியமில்லை. அதை யார் தலையில் வைப்பது என்று தேர்ந்தெடுத்து வைத்தாரே… அங்கே நிற்கிறது செல்வ கண்ணனின் அறிவு. அஞ்சலி நாயர்  என்றொரு நடிகையின் தலைதான் இந்த அழகான கிரீடத்தை வலிக்காமல் சுமந்து வடிவாக மினுக்கியிருக்கிறது. முதல் பாராட்டு இந்த நடிப்பு ராட்சசிக்குதான்!

கதை? ரெண்டு வரியில் முடிந்துவிடுகிற வழக்கமான காதல் கதைதான். சற்றே வசதியான பெண் அந்த ஊரில் இருக்கிற படித்த இளைஞனின் மீது காதல் கொள்கிறாள். வழக்கம் போல பெண் வீட்டில் எதிர்ப்பு. வாழ்ந்தால் உன்னோடுதான் என்று முடிவெடுக்கும் அவளுக்கு சந்தர்ப சூழ்நிலைகள் சங்கு ஊத முனைகிறது. அவள் என்ன செய்தாள்? அவன் என்ன செய்தான்? நடுவில் பேரன் மீது பேரன்பு கொண்ட தாத்தா என்ன செய்தார்? இதெல்லாம்தான் நெடுநல்வாடை!

மீண்டும் அஞ்சலி நாயர்  நடிப்புக்கே வருவோம். எல்லா கிராமத்திலும் இப்படியொரு துள்ளல் அழகி இருப்பாள். சற்றே அத்துமீறி காதல் கொள்வாள். மல்லிகை கோர்த்த சிரிப்பை வைத்துக் கொண்டு இதையெல்லாம் செய்கிறார் அஞ்சலி நாயர் . அழகோ அழகு! இந்நேரம் எத்தனை படங்கள் குவிந்ததோ…!

நான் சிரிச்சதே அவளை பார்த்த பிறகுதான்… என்று அளந்து அளந்து பேசுகிற இளங்கோ. இவர்தான் படத்தின் ஹீரோ. எந்நேரமும் இறுக்கமாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம். பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், ஐயோ பாவம் என்று கவலைப்பட வைக்கிறார்.

இரண்டு குழந்தைகளோடு தன்னை நம்பி வந்த பெண்ணை கை விட்டுவிடாத அப்பா கேரக்டரில் பூ ராமு. நெடுநல்வாடை ஒரு மாலை என்றால், அந்த மாலையை நேர்த்தியாக கோர்த்த கயிறே இந்த ராமுதான்! குறைந்த விலை ராஜ்கிரணாக ஜொலிக்கிறார் மனுஷன்!

மைம் கோபி, செந்தி, ஐந்து கோவிலான் என்று புடம் போட்ட நடிகர்கள் தங்கு தடையில்லாமல் தடம் பதிக்கிறார்கள். தூத்துக்குடி திருநெல்வேலி பாஷை திரையெங்கும் ஒலிப்பது தனி கவர்ச்சி! முக்கியமாக நடிகை செந்திக்கு வேறொருவரை டப்பிங் பேச வைத்திருப்பது!

வில்லேஜ் அழகை அப்படியே வாரியெடுத்து ‘கொலாஜ்’ ஓவியமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி. பாடல்கள் கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ? பின்னணி இசையில் பிரமாதப்படுத்துகிறார் ஜோஸ் பிராங்க்ளின்.

எடிட்டர் காசி.விஸ்வநாதனின் பங்கு எந்த படத்திலெல்லாம் இருக்கிறதோ, அது நல்ல படம் என்கிற எண்ணத்தை இந்த முறையும் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் அவர். நிதானமாக நடந்து போகிற படம், ஒரு இடத்தில் கூட நம்மை சோர்வுக்கு ஆளாக்கவில்லை என்பதை அவரது ‘கட்டிங்’ உணர வைக்கிறது.

ஐம்பது நண்பர்கள் சேர்ந்து தயாரித்த படம் ‘நெடுநல்வாடை’! இவர்கள் விதைத்தது பணத்தை மட்டுமல்ல… ஒரு நல்ல இயக்குனரையும்தான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

ஒரு முக்கிய குறிப்பு. இப்படத்தில் முதலில் நடிக்க வந்தவர் அதிதி மேனன். பாதி படத்திலேயே இவர் ஓடிவிட, பெரும் நஷ்டத்துடன் மீண்டும் எடுத்ததையே எடுக்க வேண்டிய துர்பாக்கியம் இயக்குனருக்கு. எப்படியோ தவிடு ஒழிந்து தங்கம் வந்ததே என்று இப்போது சந்தோஷப்பட்டிருப்பார்!

Read previous post:
செருப்படி வாங்கிய செக்ஸ் படம்! கதவ மூடுது கோடம்பாக்கம்!

Close