இசைகேட்டு வளருமே ராஜா வச்ச மரம்!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் கோலாகலமாக நடந்தது.

இந்த விழாவில் இளையராஜா குமுதத்தில் தொடராக வந்த இளையராஜாவின் கேள்வி பதில்களின் தொகுப்பான ‘இளையராஜாவைக் கேளுங்கள்’ எனும் புத்தகமும், திருப்பாவை பள்ளி எழுச்சிப் பாடல்களும் வெளியிடப்பட்டன. இந்த விழா இளையராஜாவின் பிறந்தநாளாக மட்டுமல்லாமல். 71001 மரக் கன்றுகள் நடும் விழாவாகவும் நடைபெற்றது.

காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான பாடல்களை இந்த நாட்டுக்கு அளித்த ‘புண்ணிய ஸ்தலம்’ என்றே வர்ணிக்கலாம் பிரசாத் ஸ்டுடியோவை. அங்குதான் இருக்கிறது இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் தியேட்டர். இந்த 71001 மரக்கன்றுகள் வரிசையில் முதல் கன்றை தன் விரலிசை கரங்களால் இங்கு நட்டு வைத்தார் ராஜா. மரம் வைப்பனே ஒழிய தண்ணீர் ஊற்றுகிற பழக்கம் இல்லை என்று சிலேடையாக குறிப்பிட்டார் அப்போது. அதற்கென்ன? பக்கத்திலேயே இருக்கிறது ராஜாவின் கம்போசிங் அறை. இசை கேட்டே வளர்ந்து விடும் அது.

விழாவில் கலந்து கொண்ட எல்லாருமே அளந்து வைத்தது போல பேசி முடிக்க, தனக்கான நேரத்தை மிக சிறப்பாகவே பதியம் போட்டுவிட்டு போனார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

அவர் பேசுகையில், “நான் ஒருமுறை வெளிநாடு சென்று கொண்டிருந்தேன். அப்போது ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நின்ற விமானம் திரும்பக் கிளம்ப எட்டுமணி நேரமாகும் என்பதால் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அதே ஏர்போர்ட்டில் சதீஷ் என்கிற இளைஞனும், இளையராஜாவின் காதலின் தீபம் ஒன்று… பாடலை செல்போனில் ஒலிக்கவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். உடனே நான் அவனிடம் ஓடிச்சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். என்னிடமுள்ள இளையராஜா பாடல்களை அவனும், அவனிடமுள்ள இளையராஜாவின் பாடல்களை நானும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள் இருவரும் அங்கே எங்களை மறந்து, போட்டிபோட்டுக்கொண்டு இளையராஜாவின் பாடல்களைக் கேட்க, அவற்றைக் கேட்டு 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரும் அந்தப் பாடல்களை ரசித்து, பாராட்டிவிட்டுச் சென்றனர். நான் வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம், நான் தங்கும் விடுதியின் கதவைத் திறந்துவைத்துவிட்டு, இளையராஜாவின் பாடல்களை ஒலிக்க விடுவேன். நிச்சயம் அடுத்த சில நிமிடங்களில் யாராவது ஒருவர் என் அறையைத் தேடி வந்து நீங்க தமிழா என்று கேட்டு வருவார்கள். எந்த ஊருக்கும், எந்த நாட்டுக்கும் சென்றாலும் அங்கே இளையராஜா பாடல்களைக் கேட்கும் தமிழன் ஒருவனை சந்திக்காமல் இருக்கவே முடியாது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முதல் ஆதாரமே இசைஞானியின் இசைதான்,” என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குனருமான பஞ்சு அருணாச்சலம், இயக்குநர்கள் பாலா, பார்த்திபன், சுகா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Read previous post:
செல்வராகவன் சிம்பு இணையும் படம் நின்றது ஏன்? வெளிவராத சுவாரஸ்யமான தகவல்!

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படம் விரைவில் துவக்கம்! இப்படியொரு செய்தியை கேள்விப்பட்டதிலிருந்தே மின்னலை கூட தீப்பெட்டியில அடச்சுடலாம். இப்படி இன்னலை பிடிக்க நினைக்குறாங்களே, இதெல்லாம்...

Close