இன்று நேற்று நாளை – விமர்சனம்

‘இன்று’ கிடைத்திருக்கும் ஒரு மெஷினில் ஏறி, நேற்றிலும் நாளையிலும் டிராவல் பண்ணுகிற இரண்டு நண்பர்களின் கதை. கொஞ்சம் சறுக்கியிருந்தாலும், எப்பவோ தமிழில் வெளிவந்த 12 பி கதையாக முடிந்திருக்கும். நல்லவேளை… தெள்ளந் தெளிவான திரைக்கதையால் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் அறிமுக இயக்குனர் ரவிக்குமார். இப்படியொரு புதுமையான பேக்ரவுண்டில், மாமூல், கொலை, வழிப்பறி என்று வில்லன் ஒருவனையும் உள்ளே நுழைத்து, காரம் மசாலாவுடன் கமகம வேக கமர்ஷியல் படம் கொடுத்திருப்பதே தனித்திறமைதான். இருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே இவர் காட்டும் 2065 ம் வருட சென்னை வெறும் ஒற்றை கிளிக்காக முடிந்ததில் ‘அடச் சே…’தான் போங்க பிரதர்.

கெஸ்ட் ரோல் மட்டுமல்ல, அதிலேயும் ரொம்ப ரொம்ப ஜஸ்ட் ரோல் ஆர்யாவுக்கு. அவர் கண்டுபிடிக்கும் ஒரு கால எந்திரம், பல வருடங்கள் பின்னோக்கி 2015 ல் சென்னையில் தரையிரங்குகிறது. அந்த நேரம் பார்த்து அங்கு விபத்தில் சிக்குண்டு கிடக்கும் ஒரு அரைகிறுக்கு விஞ்ஞானியும், அவருடன் சேர்ந்தே உருளும் விஷ்ணுவும், கருணாகரனும் அதை கவனிக்க, விஞ்ஞானியே விளக்குகிறார் அது என்னவென்று? அதற்கு முன்பு தனது காதலியின் அப்பாவால் அவமானப்படுத்தப்பட்டு அரைகுறை விரக்தியிலிருக்கும் ஹீரோ விஷ்ணுவிஷால், அந்த எந்திரம் என்னவெல்லாம் செய்யும் என்பதை உணர்கிறார். நினைத்தால் கால் டாக்ஸி போல அதை கிளப்பிக் கொண்டு முன்னாலும் பின்னாலுமாக பயணப்படுகிறார்கள் பிரண்ட்ஸ்.

பங்கு சந்தையில் இன்னும் பத்து நாளைக்கு பிறகு வரப்போகும் ஏற்ற இறக்கங்களை கூட துல்லியமாக தெரிந்து கொள்ளும் விஷ்ணு, அதை வைத்தே காதலியின் அப்பா ஜெயப்ரகாஷை கவர்கிறார். இந்த நேரத்தில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் வரும் ஒரு பிரச்சனையை இந்த கால எந்திரத்தில் டிராவல் பண்ணி எப்படி முறியடிக்கிறார்கள் என்பதே விறுவிறுப்பான இன்று நேற்று நாளை! கிராபிக்ஸ்சுக்கு நிறைய செலவு செய்திருந்தால், அற்புதமான கற்பனைகளால் நம்மை அசரடித்திருப்பார் டைரக்டர். ஆனால் கிடைத்த நெய்யே இவ்ளோண்டு. அதற்குள் என்னவோ, அந்த சுவைதான் வந்திருக்கிறது பொங்கலில். பட் ஸ்வீட்! குறிப்பாக மியா ஜார்ஜ் இன்னும் இன்னும் என்று காலத்தை கடந்து பின்னே சென்று, அவரே தன் தாயை பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பதும், பிறக்கும் குட்டி மியா ஜார்ஜை, அவரே தன் கைகளால் அள்ளிக் கொஞ்சுவதும் எப்படியொரு அற்புதமான கற்பனை! கலக்கிட்டீங்க ரவிக்குமார்.

ஜெயப்ரகாஷை காப்பாற்ற வேண்டும் என்றால், வில்லன் சுடப்படும் அந்த தேதியில் பின்னோக்கி சென்று அவனை கொன்றாலொழிய நடக்காது. ஆனால் அப்படி போனால் மீண்டும் திரும்பி நிகழ்காலத்திற்கு வரமுடியாத சூழல். இப்படியொரு பரபர முடிச்சோடு கால எந்திரத்தில் அவர் கிளம்பும்போது நம் மனசு படக் படக் என்கிறது. எப்படியோ எல்லாம் சுபமாக முடிகையில், நம்மையறியாமல் கை தட்டவும் முடிகிறது.

அந்த பையன் என்ன பண்றான்மா…? என்று கேட்கும் அப்பாவிடம், ‘ஷேர் மார்க்கெட் கன்சல்டென்ட்டா இருக்காருப்பா’ என்று சொல்லும் மியா, அடுத்த காட்சியிலே விஷ்ணுவை செமத்தியாக சிக்க வைக்கிறார். போர்டு மீட்டிங்கில் பங்கு சந்தை பற்றி உளறும் போது ஐயோவாகிற விஷ்ணு, டைம் மிஷின் அனுபவத்திற்கு பின், அதே டேபிளில் கலக்கி எடுக்கிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது. விஷ்ணுவிடம் இன்னும் கூட துள்ளல் இருந்திருக்கலாம். பல காட்சிகளில் இது போதும் என்பது போலவே இருக்கிற அந்த நடிப்புக்கு, அடுத்த படத்தில் கொஞ்சம் வெயிட் ஏற்றிக் கொள்வது நல்லது.

அழகி மியாவுக்கு அதிகம் வேலையில்லை. இருந்தாலும் அந்த டைம் மெஷின் பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி கொடுப்பதும், அதன் விந்தைகள் கண்டு மிரள்வதும் அழகு.

யாருய்யா அந்த விஞ்ஞானி. மாத்ரூபூதத்தை ஒல்லியாக பார்த்த மாதிரியிருக்கிறார். மனுஷன் வாயை திறந்தால் தியேட்டர் சிரிக்கிறது. அவர் கண்டுபிடிக்கும் அந்த கார் பிரம்ம்ம்ம்ம்மாதம்! (நிஜத்தில் அப்படியொன்று இருந்தால் என்ற ஏக்கமே வந்துவிடுகிறது)

புலிக்குட்டி சித்தராக ‘வேஷம்’ போட்டுத் திரியும் கருணாகரன், ஒரு டி.வி லைவ் புரோகிராமை ஒரே ஷாட்டில் காலி பண்ணுவது செம்ம. வேடிக்கை என்னவென்றால், இந்த கதையின் ஆகப் பெரிய ட்விஸ்ட்டே மறைந்த பெரியவர் வி.எஸ்.ராகவன்தான். ‘என்னோட பதக்கத்தை தொலைச்சுட்டேன்’ என்று அவர் கூற, பதக்கம் தேடிக் கிளம்பும் விஷ்ணுவும், கருணாகரனும் தங்களையறியாமல் வில்லன் தப்பிக்க காரணம் ஆகிவிடுகிறார்கள். அப்புறம்தான் வருகிறது அவஸ்தை.

இறுதியில் அந்த மெஷின் தூள் தூளாக உடைவதை பார்க்கும்போது, என்னவோ… சொந்த பைக் சுக்கு நூறாகிவிடுகிற சோகம் நமக்குள். ஒரு மெஷின் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திவிடுமா என்ன? அதுதான் இந்த படத்தின் வெற்றியும்.

ஹிப் ஹாப் தமிழன் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையும் பொருத்தம். வசந்தின் ஒளிப்பதிவில் சில வினாடிகளே வந்து போகும் சென்னையும், மகாத்மா காந்தியும் சட்டென்று மின்னல் வெட்டுகிற ஆச்சர்யம்.

பெரிய்ய்ய்ய்ய பட்ஜெட்டுடன் ரவிகுமாரை களம் இறக்கிவிட்டால், குழந்தைகள் உலகம் மட்டுமல்ல, இளசுகள் உலகத்தையும் மிரள வைக்கிற படம் கிடைக்கலாம். யாராவது கார்ப்பரேட் நிறுவனங்கள் கண் திறங்கய்யா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இதுதான் புலி படத்தின் கதை! எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்!

ஏழைகளின் ‘பாகுபலி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது விஜய்யின் ‘புலி’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் என்பதால், அவரது முந்தைய படங்களோடு முடிச்சு போட்டு இந்த கதை...

Close