இது நம்ம ஆளு ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா?
பாம்பு புற்றில் மூக்கை விட்டு ஒரு தும்மல் தும்மினால் என்னாகுமோ… அதைவிட பிரமாதமான களேபரம் நடக்கும் போலிருக்கிறது ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் விவகாரத்தில். மே 20 ந் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும் என்று அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நம்பிக்கை தெரிவித்தாலும், பாண்டிராஜின் நம்பிக்கையில் விழுவதற்காக ஒரு ஏழெட்டு இடிகள் ஒரே நேரத்தில் புறப்பட்டு வருவதாக தகவல். வாலு பட ரிலீஸ் நேரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி பெயரிலிருந்த கடனுக்கெல்லாம் நானே பொறுப்பு என்று கையெழுத்து போட்டிருந்தாராம் டி.ராஜேந்தர்.
வாலு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதில் வரும் கலெக்ஷனை கொண்டு அந்த கடன்களை அடைத்துவிடலாம் என்பது அவரது கணக்கு. ஆனால் வாலுதான் அறுந்த வாலு ஆகிவிட்டதே? கடன் பார்ட்டிகள் அத்தனை பேரும் இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்காகதான் காத்திருந்தார்களாம். இவர்கள் தேதி அறிவித்த அறிவித்த அடுத்த நொடியே பைனான்ஸ் பேப்பர்களுடன் டி.ஆர் வீட்டுக் கதவை தட்டி, “எல்லா கடனையும் அடைச்சுட்டு படத்தை வெளியிடுங்க. இல்லேன்னா ஜென்மத்திலும் ரிலீஸ் ஆக விட மாட்டோம்” என்று குரல் கொடுக்க, “இத இத இததான் எதிர்பார்த்தேன்” என்றாராம் டிஆர்.
கடனை அடைக்க அவரும் ரெடிதான். ஆனால் வட்டி குட்டி, குட்டிக்கு வட்டி என்று லட்சம் கோடி ஆகுமே?
ஒருவேளை அதையெல்லாம் எண்ணி வச்சுட்டு படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்று கடன் காரர்கள் பிடிவாதம் பிடித்தால், இது நம்ம ஆளு படத்திற்கு இதே மாதிரி இன்னொரு ட்விட் போட வேண்டியிருக்கும் மிஸ்டர் பாண்டிராஜ்.
முடிவு வருமான்னு இவர் இருக்க… ஒரு முடிவோடதான் இருக்காங்க கடன் பார்ட்டிகள்!