‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’

நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டால், ‘ஒரு வெள்ளை சுவரும் சில கரித்துண்டுகளும்’ என்றுதான் அந்த சரிதைக்கு தலைப்பு வைக்க முடியும்! தென்னிந்திய சினிமா ஒரு பட்டுப்புடவை என்றால், சந்தேகமேயில்லை, அதன் ‘சரிகை’ நயன்தான்! இருந்தாலும் அவரைச்சுற்றி ஆயிரமாயிரம் கிசுகிசுக்கள், ஆயிரமாயிரம் பிரச்சனைகள்…! அதனாலென்ன? மேலே ஸ்டூடியோ வெளிச்சம் விழுந்துவிட்டால், எல்லாவற்றையும் துண்டு பேப்பராய் சுருட்டி எரிந்துவிட்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் நயன்தாரா எப்பவுமே டைரக்டர்களின் மனசுக்கு பிடித்த ‘ஒயின்’தாராதான்!

‘எழுதுவதற்கு எதுவுமில்லாதபோது கொஞ்சம் நயன்தாராவை தொட்டுக் கொள்’ மனப்பான்மையில்தான் அவரை காயப்படுத்திக் கொண்டிருக்கிறது கிசுகிசு உலகம். நிஜத்தில் நயன்தாரா யார்? கொஞ்சம் தொழிலாளர்களின் ஏரியாவில் காதை நுழைத்துப்பாருங்களேன்… ஒரு கெட்டி வைரத்தையா இப்படி தட்டி நொறுக்குகிறார்கள் என்கிற கவலையே வந்துவிடும்.

சில வருஷங்களுக்கு முன் நடந்த சம்பவம். சென்னையில் நயன்தாரா நடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பு அது. சுமார் ஆயிரம் பேர் திரண்டு நிற்கிறார்கள். அதிகாலை ஆறு மணி. விடிய விடிய படப்பிடிப்பு நடந்ததற்கான களைப்பு எல்லார் முகத்திலும் தேங்கி நிற்கிறது. அந்த நேரத்திலும் அங்கு இரண்டாயிரம் கைகள் தட்ட ஆரம்பிக்கின்றன. உற்சாகமாக இன்னோவா காரில் ஏறி, கையை அசைத்துக் கொண்டே விடை பெறுகிறார் நயன்தாரா! கார் நகர நகர கைத்தட்டல்கள் அவரது செவியை விட்டு மறைகிறது. அந்த சம்பவம் பிற நடிகைகள் கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடம்!

அதென்ன?

ஏற்காட்டில் ஏகன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. அதே நாளில் சென்னையில் சத்யம் படப்பிடிப்பு. இரண்டுக்குமே நயன்தாரா தேவைப்படுகிறார். இங்கோ க்ளைமாக்ஸ் காட்சி. சுமார் 3000 ஜுனியர் ஆர்ட்டிஸ்டுகள் திரண்டிருக்கிறார்கள். மூன்று மணி நேரம் நயன்தாரா கிடைத்தால் போதும். அதே மாதிரிதான் ஏற்காட்டிலும். அஜீத்துடன் காம்பினேஷன். எதையும் தவிர்க்க முடியாது. ‘சரி… ஆகட்டும். சமாளிக்கலாம்’ என்கிறார் நயன்தாரா. மாலை ஆறு மணிக்கு ஏற்காட்டில் படப்பிடிப்பு முடிய, அங்கிருந்து ஒரு இன்னோவா காரில் கிளம்புகிறார் அவர்.

அதற்குள் விஷயம் அஜீத்தின் காதுகளுக்கு செல்ல, ‘யார் டிரைவர்?’ என்று விசாரிக்கிறார். ‘தெரியாத ஆளை இரவு நேரத்தில் அவங்க கூட அனுப்ப வேணாம். என் டிரைவரை அழைச்சுட்டு போக சொல்லுங்க’ என்கிறார். அதற்கப்புறம் அஜீத்தின் டிரைவர் காரை ஓட்ட சுமார் ஆறு மணி நேர பயணம். சென்னை வந்து சேர்கிற நயன்தாரா, வரும்போதே காருக்குள்ளேயே மேக்கப் போட்டுக் கொண்டு காஸ்ட்யூம் மாற்றிக் கொண்டு, இறங்கிய வினாடியிலிருந்தே நடிக்க ஆரம்பிக்கிறார். பொட்டு தூக்கம் இல்லை. விடியற்காலை ஆறு மணிக்கு மீண்டும் ஏற்காடு பயணம். தொடர் நடிப்பு. ‘என்னால முடியல. ப்ளீஸ்’ என்றால், எந்த கல்நெஞ்ச காரர்களும் நயன்தாராவுக்காக கசிந்திருப்பார்கள். ஆனால் செய்யவில்லை அவர். இந்த அர்ப்பணிப்பு இப்போதிருக்கிற எந்த நடிகைக்கும் இல்லை என்கிறார்கள் தொழிலாளர் வட்டத்தில்!

அவ்வளவு ஏன்? அறிமுகமாகிற நடிகைகளுக்கே கூட இல்லை! ஒரு படத்திற்கு கதாநாயகி அமைவது லேசுபட்ட விஷயமல்ல. ‘ராமர் பாலம்’ என்றொரு படம். கதாநாயகி தேடி ஊரெல்லாம் அலைந்து திரிந்த டைரக்டர் சண்முகவேல், மூடி வைத்த குண்டான் குவளைகளை மட்டும்தான் திறந்து பார்க்கவில்லை. அந்தளவுக்கு தேடி தேடி கடைசியில் சென்னையில் புகழ்பெற்ற ஒரு கல்லூரி வாசலில் கண்டெடுத்தார்கள் அவரை. சுமார் இரண்டு மாத காலம் அந்த கல்லூரிக்குள்ளேயே ஸ்பெஷல் அனுமதி பெற்று நடிப்பை சொல்லிக் கொடுத்தார் டைரக்டர். மறுநாள் திருநெல்வேலியில் ஷுட்டிங். முதல் நாள் வரைக்கும் பயிற்சி தந்துவிட்டு போனவருக்கு, உச்சி முடியில் எடைக்கல்லை தொங்க விட்டார் அந்த பெண். ஸ்பாட்டுக்கு வரவேயில்லை.

‘வீட்ல ஆயா வேணாம்னு சொல்லிட்டாங்க’ என்று ஒரு வரி பதிலோடு முடித்துக் கொண்டார். ரெண்டு மாச உழைப்பு அம்பேல். யாரிடம் போய் அழுவது? யாரை சொல்லி புலம்புவது? ஹும்… நடிகைகள் இப்படிதான். குளிக்கறதுக்கு மினரல் வாட்டர் தரலேன்னு ஓடிப்போன நடிகைகளும், கொறிக்கறதுக்கு முந்திரி பருப்பு தரலேன்னு ஓடிப்போன நடிகைகளும் இங்கு சர்வ சாதாரணம்! இங்கு நயன்தாராக்களின் எளிமையை கொண்டாடுவது நமக்கு வேண்டுமானால் பழக்கமில்லாமலிருக்கலாம். தொழிலாளர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அவர்தான் பண்ணாரியம்மன் கோவில் படையல் பிரசாதம்!

ஒன்றல்ல… இரண்டல்ல… ‘நயன்தாராவின் மகிமைகள்’ என்றொரு புத்தகமே போடுகிற அளவுக்கு ‘வாசிப்பு’ பலமாக இருக்கிறது கோடம்பாக்கத்தில். அதே மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை. அது வேறொரு படம். ஒரு பாடல் காட்சிக்கு நடுவில் நயன்தாரா அம்மன் வேஷம் போட்டுக் கொண்டு நாக்கை வெளியே தள்ளி மிரட்டினால் எப்படியிருக்கும்? டைரக்டருக்கு தோன்றிய திடீர் ஐடியா அது. புத்தமாக இருந்தால் ஒரு வரியில் எழுதிவிட்டு போய்விடலாம். இது காட்சி ஊடகமாச்சே? நெற்றிப்பொட்டிலிருந்து காலில் போட்டுக் கொள்கிற மெட்டி வளையம் வரைக்கும் ஓடி ஓடி கலெக்ட் பண்ணினால்தான் ஆச்சு. அந்த நேரத்தில் மஞ்சள் புடவைக்கு எங்கு போவார்கள்?

ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலிருந்து கிளம்பி டவுனுக்கு போய் பெரிய கடையில் ‘பர்ச்சேஸ்’ பண்ணிக் கொண்டு திரும்புவதற்குள், நேரம் எல்லாரையும் ‘சேஸ்’ பண்ணி முடித்திருக்கும். ஆளாளுக்கு கார் எடுத்துக் கொண்டு மூன்று திசைகளிலும் கிளம்ப, கூலாக டைரக்டரை அருகில் அழைத்தார் நயன்தாரா. ‘சார்… அரை மணி நேரத்துல முடியப்போற ஷாட். எதுக்கு பெரிய ஷாப்பிங் மாலுக்கு ஓடுறீங்க. இதோ ஸ்டூடியோ வாசல்ல நூறு ரூபாய்ல ஒரு மஞ்சப்புடவை கிடைக்கும். வாங்கிட்டு வாங்க. பார்த்துக்கலாம்…! ’

இதுவாவது பரவாயில்லை. இதே மாதிரி இன்னொரு படத்தில் எல்லாரையும் மயக்கம் போட வைத்தார் நயன்தாரா. அவ்வளவு எளிமையான அப்ரோச் அது. காட்சிப்படி அவருக்கு கருப்பு கலரில் காஸ்ட்யூம். பாடலுக்கு ஸ்டெப் வைக்கிற அந்த கடைசி நேரத்தில் வந்து சேர்கிறது அவர் கைகளுக்கு. போட்டுப்பார்த்தால், எங்கோ பிடிக்கிறது. எங்கோ இடிக்கிறது. உற்று உற்று பார்த்த டைரக்டர், ‘இது கம்பர்டபுளா இல்லேல்ல?’ என்கிறார். ‘ஆமாம்…’ என்கிறார் நயன்தாரா. புதுசாக தைத்தாக வேண்டும். காஸ்டயூமர், தையல் மெஷின் எல்லாம் அங்கேதான் இருக்கிறது. இருந்தாலும், நேரம் போய் கொண்டிருக்கிறதே?

அவர் நிற்கும் அதே மேடையில் ஒரு ஓரத்தில் இரண்டு பெரிய பெரிய லைட்டுகள் இருந்தன. அதை மூடி வைப்பதற்காகவோ, அல்லது பொங்கி வரும் வெளிச்சத்தை மட்டுப்படுத்துவதற்காகவோ இரண்டு கருப்பு துணிகளை தொங்க விட்டிருந்தார்கள் அதில். மிக மிக மலிவான விலையில் கிடைக்கும் சாட்டின் துணி அது. கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை நயன்தாரா. அப்படியே அந்த துணியை உருவி, போட்டிருந்த அந்த கருப்பு காஸ்ட்யூம் மேலேயே ஒரு டிசைனாக சுற்றிக் கொள்கிறார். ‘இப்ப பாருங்க சார். புடிச்சுருக்கா?’ என்று கேட்க, காஸ்ட்யூம் டிசைனர் நாலு நாள் கண் முழிச்சு உருவாக்குனா கூட அப்படியொரு அழகு வந்திருக்காது அதில். ‘ஆஹா…’வென்று கைதட்டுகிறது யூனிட். அரை மணி நேரத்தில் விஷயம் குளோஸ்! அவர்தான் நயன்தாரா!!

இது மாதிரி, சூழ்நிலைக்கேற்ப தன்னை ஒப்புக் கொடுக்கிற ஹீரோயின்களை இங்கல்ல, தென்னிந்தியா முழுக்க மைக்ராஸ்கோப் வைத்து தேடினாலும் தென்பட மாட்டார்கள்.

படத்தின் தயாரிப்பாளருக்கு என்ன மரியாதையோ, அதில் ஒரு ஸ்பூன் அளவு கூட குறையாமல் டைரக்டருக்கு கொடுப்பார். டைரக்டருக்கு என்ன மரியாதையோ, அதில் ஒரு ஸ்பூன் அளவு கூட குறையாமல் தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுக்கு கொடுப்பார். இன்னும் ஒரு சம்பவத்தை சொல்லி, அதையும் சத்தியம் பண்ணுகிறது சினிமாவுலகம்.

வேறொரு படத்தின் ஷுட்டிங். ஒரு ஓரமாக நாற்காலியில் அமர்ந்து ஷுட்டிங்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் நயன். கதைப்படி ஒரு சின்ன கைகலப்பு காட்சி அது. ஹோய் ஓய்… என்ற கூச்சலுடன் யாரோ யாரையோ சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டிருக்க, ஒரு ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் அப்படியே மயங்கி சரிகிறார். அது நடிப்பல்ல…. வேறு ஏதோ என்பது வினாடியில் புரிந்துவிடுகிறது இவருக்கு. அதற்குள் கட் கட்… என்று டைரக்டர் கத்த, எல்லாரும் அந்த சின்ன நடிகரை சூழ்ந்து கொள்கிறார்கள். இதுவே வேறொரு நடிகையாக இருந்தால், சட்டென்று அங்கிருந்து விலகி கேரவேனுக்குள் புகுந்து கொண்டிருப்பார்.

அப்படியே எழுந்தோடி வந்த நயன்தாரா, அந்த ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்டை அள்ளி மடியில் போட்டுக் கொள்கிறார். ‘எல்லாரும் ஓரமா போங்க. காற்று வரட்டும்…’ என்று பதறுகிறார். அப்படியே அவசரத்தில் தன் துப்பட்டாவை எடுத்து விசிறுகிறார். முகத்தில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. சில நிமிஷங்களில் கண்விழிக்கும் அந்த துணை நடிகர், அவ்வளவு நேரம் நாம் தலைவைத்து கிடந்தது நயன்தாரா மடியில் என்பதை அறிந்து அப்படியே கரகரவென கண்ணீர் சிந்துகிறார். ‘அண்ணே.. ரெஸ்ட் எடுத்துக்குங்க’ என்று நயன்தாரா அவரை கைதாங்கலாக அனுப்பி வைக்க, தன்னையறியாமல் கை கூப்புகிறது யூனிட்!

இப்பவும் அவர் எங்கு சென்றாலும் தனியாகதான் செல்கிறார். தனியாகதான் வருகிறார். அதெப்படி முடிகிறது? ஏழாவது படிக்கும் போது பள்ளிக்கூடத்தில் டான்ஸ் புரோகிராமில் சேர்ந்தாராம். தினமும் பயிற்சி முடிய இரவு ஏழாகிவிடும். ஒன்றரை மணி நேரம் சைக்கிள் ஓட்டிக் கொண்டே வீடு வந்து சேர வேண்டும். ‘டான்ஸ் முக்கியம்னா தனியா போயிட்டு தனியா வா. அப்பா வரமாட்டேன்…’ என்று வீட்டில் சொல்லிவிட, சுமார் ஒருவாரம் இருட்டில் தனியாகவே வந்ததில் துவங்கியது இந்த துணிச்சல். ஒருமுறை பல நூறு கிலோ மீட்டர் தாண்டியிருந்த அப்பா, ‘என்னோட ஜீப்பை ஓட்டிட்டு வந்து கொடுத்துட்டு போயேன்’ என்று கேட்க, அந்த ஜீப்போடு தனியாக கிளம்பி சென்றாராம்.

நயன்தாராவுக்குள் ஒரு ஜான்சிராணியும் இருக்கிறார். அது புரியாமல்தான் அவரை விரட்டிக் கொண்டிருக்கின்றன ஓராயிரம் பேனாக்கள்!

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிவரும் ‘கோடம்பாக்கம் செக்போஸ்ட்’ தொடரிலிருந்து…)

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிரிச்சுகிட்டே நோ சொல்லு… விஜய்… அப்புறம் ஜீவா!

அதென்னவோ தெரியவில்லை, ‘தம்பி’ என்ற உணர்வுபூர்வமான படத்தை இயக்கிய சீமானுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஹீரோக்கள். அவர் உணர்வு பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுகிற அரசியல்வாதி. அவருக்கு இனிமேல்...

Close