கும்பகோணத்துலயுமா அல்லு அர்ஜுன் பேமஸ்? சந்தேகத்தை கிளப்பிய லிங்குசாமியின் ஸ்பீச்!
“வருஷா வரும் வறட்சி வருது! வாரத்துக்கு ஒரு முறை பேஸ்புக்குல புரட்சி வருது! ஆனால் ந்தா பக்கத்துல கைகெட்டுற தூரத்துல இருக்கிற ஆக்டருங்க யாரும் நேரடியா தமிழ் படத்துல நடிக்க மாட்டேங்குறாங்களேப்பா…” என்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்க, பிரபாசோ, சிரஞ்சீவியோ, பவன் கல்யாணோ தயாராக இல்லை. (டப்பிங் ராஜா ஏ.ஆர்.கே. ராஜராஜா புண்ணியத்தில் மகேஷ்பாபுவும் மேற்படி முன்னணி ஹீரோக்களும், ஆக்ரோஷமாக டப்பிங் தமிழ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)
இதற்கிடையில் பிரஸ்சை கூட்டி, மங்கள மேளம் வாசித்துவிட்டார் அல்லு அர்ஜுன். ஆந்திராவில் பல கோடிகள் பிசினஸ் ஆகிற முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுனை தமிழில் நடிக்க வைக்க விரும்பிய லிங்குசாமி, அவருக்கு கதை சொல்லி நாலைந்து வருஷங்கள் ஆகிவிட்டன. ஆனால் கால்ஷீட் விஷயத்தில் அவர் இதோ அதோ என இழுத்துக் கொண்டிருக்க, எப்படியோ… அந்த திருநாள் வந்தே விட்டது! நடுவில் அல்லுவை சந்தித்த லிங்கு, “நான் வேணும்னா வேற கதை சொல்லவா? இந்தக் கதை உங்களுக்கு புடிக்கலையா?” என்றெல்லாம் கேட்க, மனுஷன் அப்செட் ஆகிட்டாராம். “அப்படியெல்லாம் இல்லைங்க. இந்தக் கதைதான் எனக்கு பொருத்தமான கதை. நிச்சயம் இந்தப் படத்தை நாம சேர்ந்து பண்றோம்” என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார். இந்தப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.
பெரும் திருப்பமாக நேற்று, அல்லு அர்ஜூனே ஸ்பெஷலாக சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து தனது நெடுநாள் ஆசையை சொன்னார். “நான் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் சென்னையில் தான். 2௦ வருடமாக இங்கே தான் இருந்தேன். எனக்கு சொந்த ஊர் சென்னை தான். நான் தெலுங்கில் நடித்த எந்த ஒரு படத்தையும் தமிழில் டப் செய்து ரீலீஸ் செய்யவில்லை. அதற்க்கு காரணம் நான் பிறந்து வளர்ந்த சொந்த மண்ணில் நேரடி தமிழ்ப்படம் நடிக்க வேண்டும் என்பது தான். எந்த மண்ணில் ஜெயித்தாலும் என்னுடைய சொந்த மண்ணில் ஜெயித்தது போல் வராது. நான் இதற்காக பல நாட்களாக காத்திருந்தேன். அதற்கான ஒரு நல்ல படமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது” என்றார்.
முன்னதாக பேசிய லிங்குசாமி சொன்னதுதான், ஹரே ராமா காமா சோமா!
இவரது கிராமத்தில் அல்லு அர்ஜூனை வைத்து படம் பண்ணுவதாக சிலரிடம் சொன்னாராம். அவர்கள், “அப்படியா… அவரோட டான்சுக்கு நாங்க ரசிகர்கள்”னு சொன்னாங்களாம்! ஏண்ணே… கும்பகோணத்துல அல்லு அர்ஜுனுக்கு அவ்ளோ ரசிகர்கள் இருக்காங்களா? அல்லது கும்பகோணத்தை கொண்டு போய் ஆந்திராவுல இணைச்சிட்டீங்களா?
ஒரு டவுட்டூ… அதேன்!