தொடரி விமர்சனம்
ஒரு காலத்தில் செதுக்கி செதுக்கி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரபுசாலமன், பிற்பாடு ஏதேதோ ஆகி பிதுக்கி பிதுக்கி எடுத்த பேஸ்ட்டுதான் இந்த தொடரி! ஒரு அற்புதமான தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றியும், ஒரு நல்ல கதைக் களத்தை சொதப்பி சுண்ணாம்பு டப்பா ஆக்கியதற்கு வருத்தமும் உரித்தாகுக! அப்படியே தனுஷ் என்ற நல்ல நடிகனின் மார்க்கெட்டில் கரித்துண்டால் கிறுக்கியதற்கும் சேர்த்து ஒரு கண்டனத்தை பதிவு செஞ்சுக்குங்க பஞ்சாயத்து!
டெல்லியிருந்து சென்னை வரும் ரயிலில், பேன்ட்ரியில் வேலை செய்யும் சப்ளையர்தான் தனுஷ். அதே ரயிலில் வரும் நடிகையின் ‘டச்சப்’ கேர்ள் கீர்த்தி சுரேஷ். முதல் பார்வையிலேயே சறுக்கி விழும் தனுஷ், அவளை மடக்குவதற்காக ஒரு பொய் சொல்கிறார். என்னவென்று? தான் கவிஞர் வைரமுத்துவின் நண்பன் என்று. சகல குண நலன்களிலும் ஊர்வசியின் ஒண்ணுவிட்ட தங்கச்சி போலவே ‘மரை கழண்டு’ திரியும் கீர்த்தி சுரேஷ், அதையும் நம்புகிறார். ஒருபுறம் காதல் டிராக் ஓடிக் கொண்டிருக்க, ரயிலை நிறுத்தவே முடியாதபடி ஒரு சிக்கல் வந்து சேர்கிறது. 140 கி.மீ வேகத்தில் செல்லும் ரயில் நின்றால்தான் பயணிகள் பிழைக்க முடியும். ரயில் நின்றதா? ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் காதலர்கள் பிழைத்தார்களா? க்ளைமாக்ஸ்!
நெஞ்சம் பதறுகிற அளவுக்கான ஒரு கதையை இவ்வளவு அலட்சியமாக சொல்வதே பெரும் பாவம். தொழிலுக்கு செய்கிற துரோகம்! அதை சர்வ சாதாரணமாக செய்திருக்கிறார் பிரபுசாலமன். மருந்துக்கும் ‘லாஜிக்’ இல்லை. ஒரு ரயில், இன்னும் கொஞ்ச நேரத்தில் கூண்டோடு கோவிந்தா ஆகப்போவதை அதே ரயிலில் பயணம் செய்யும் எவரும் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள மாட்டார்களா என்ன? சரி… அவர்களுக்காவது முறையாக தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். ட்ரெயின் தீ பற்றி கொண்டு எரிகையில் அந்த நெருப்புக்கு பக்கத்திலிருக்கும் ஹீரோ, முகம் கொள்ளா சிரிப்போடு டூயட் பாடுகிற அந்த ஒரு காட்சிக்காகவே மாநாடு நடத்தி மெடல் குத்த வேண்டும் டைரக்டருக்கு. இப்படி உடம்பு முழுக்க மெடல் வாங்குகிற அளவுக்கு ஏராளமான காட்சிகள் இருக்கிறது படத்தில்.
மீடியாவை மட்டுமல்ல, பிரபு சாலமனை யாரெல்லாம் சீண்டினார்களோ, அவர்களை பதிலுக்கு சீண்டுவதற்காகவே ஒரு படம் எடுத்திருக்கிறார் என்று நினைக்க வைக்கிற அளவுக்கு திட்டமிடப்பட்ட வசனங்கள்! ஐயோ பாவம்… அந்த வேலு மிலிட்டரி ஓட்டல் என்ன பண்ணுச்சோ? அதையும் கூட விட்டு வைக்கவில்லை அவர்.
இருந்தாலும் தனுஷ் என்கிற நடிகனின் நுணுக்கமான நடிப்பால், ஆங்காங்கே தடம் புரளாமல் போகிறது படம். அதிலும் என்ன குறை கண்டாரோ, செகன்ட் ஹாஃபில் தனுஷை ஒரு ரூமிற்குள் போட்டு பூட்டிவிட்டு, எங்கெங்கோ சுற்றுகிறது அது. ரயிலில் காற்று வர ஜன்னலை திறப்பதுதானே வழக்கம்? இதில் பயணம் செய்யும் பாதி பேர் ஆ ஊ என்றால், ரயிலின் மொட்டை மாடிக்கு தாவி விடுகிறார்கள். அங்கேயே பைட், அங்கேயே டூயட்! விஷூவலுக்கு ஓ.கே. ஆனால் புத்தியும் அறிவும் பின் மண்டையிலேர்ந்து சிரிக்குதே பாஸ்?
தம்பி ராமய்யாவின் பாடி லாங்குவேஜ் நமக்கு அத்துப்படி என்பதால், அவ்வளவு சேஷ்டைகளையும் ஒரு முன்னேற்பாடுடன் எதிர் கொள்கிறோம். அப்படியும் சிரிக்க வைக்கிறார். வெரி குட் இல்ல, வெறும் குட்!
கீர்த்தி சுரேஷுக்கு இப்படத்தில் மேக்கப் இருக்கிறதா, இல்லையா? ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமாக தெரிகிறார். அவ்ளோ பீதிக்குரிய நேரங்களிலும் அவர் முகத்தில் காட்டும் பற்பல காதல் எக்ஸ்பிரஷன்களுக்கு தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது.
கருணாகரன், ஹரிஷ் உத்தமன் இவர்களுடன் ராதாரவியும் இருக்கிறார்! மீடியா, அரசியல், அதிகாரம் எல்லாவற்றையும் கலந்து கட்டி அவர் கொடுக்கும் பர்பாமென்ஸ் அசத்தல்!
கீர்த்தி சுரேஷும், ஹரிஷ் உத்தமனும் படத்தில் பாதியளவுக்காவது வருகிறார்கள். அதிலும் முக்கால்வாசி மலையாளத்திலேயே பறைகிறார்கள். கண்ணை மூடிக் கேட்டால், திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிவிட்ட ஃபீலிங்ஸ் வந்திருதே பாஸ்!
இந்திய ரயில்வேயை இதைவிட கேவலப்படுத்த முடியாது. அதை செவ்வனே செய்திருக்கிறார் பிரபுசாலமன். மவுண்ட் ரோடில் பள்ளம் விழுந்தாலே சம்பந்தப்பட்ட துறை செய்யும் பரபரப்புகள், கிறுகிறுக்க வைக்கும். இவ்வளவு பெரிய இஷ்யூவில் அது என்னவெல்லாம் செய்யும்? அதை துளி கூட டச் பண்ணவில்லை அவர். அதுமட்டுமல்ல, ஹெலிகாப்டர் ஓட்ட ஆட்டோ டிரைவர் மாதிரி ஒருவர் வருவதும், ஒருவனை பலி கொள்வதும், அடுத்த ஷாட்டிலேயே அதே ஆளிடம் இன்னொரு பொறுப்பை ஒப்படைப்பதும்… வறட்சி வறட்சி! இப்படி முதல் ரீலில் ஆரம்பித்து முடியும் வரை ஒப்பிக்க ஓராயிரம் பிழைகள்…
வி.மகேந்திரனின் ஒளிப்பதிவில் தனியாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. கம்பார்ட்மென்ட் தாண்டி கதை வந்தால்தானே அவரும் ஏதாவது செய்ய முடியும்? அச்சுபிச்சு கிராபிக்ஸ் காட்சிகளெல்லாம் ஒளிப்பதிவாளரின் மதிப்பெண்ணை ரப்பர் கொண்டு அழிக்கிறது.
இமானின் இசையில், க்ளைமாக்சுக்கு முந்தைய பாடல் மட்டும் ஓ.கே. ஆனால் அதுவும் ராங் பிளேஸ்மெட் என்பதால் நகைப்புக்குள்ளாகிறது!
தொடரி – இடறி விழுந்தது ரயில் மட்டுமல்ல!
-ஆர்.எஸ்.அந்தணன்
To listen audio click below:-