ஹன்சிகா மேடைக்கு நயன்தாரா வருவாரா? ‘உயிரே உயிரே ’ ஸ்டார்ட் மியூசிக்
ஹன்சிகாவும் த்ரிஷாவும் செம ராசியாகிவிட்டார்கள். சமீபத்தில் அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றே அதற்கு சாட்சி. ஒரே அந்தஸ்திலிருக்கிற இரண்டு ஹீரோயின்கள் இப்படி பழகுவது அவ்வளவு ஈசியான விஷயமல்ல. சுந்தர்சி படத்தில் எவ்வித ஈகோவும் இல்லாமல் இருவரும் சேர்ந்தே நடித்தும் வருகிறார்கள்.
நயன்தாரா, த்ரிஷாவுக்கு போக வேண்டிய வாய்ப்புகளையெல்லாம் வந்த புதிதில் சூறையாடி வந்த ஹன்சிகாவை, த்ரிஷா தன் நட்பு வளையத்திற்குள் அனுமதித்தது பெரிய விஷயம்தான். அவரைப்போலவே நயன்தாராவும் அனுமதிப்பாரா? அதற்கு விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். வருகிற 27 ந் தேதி சென்னையில் ‘உயிரே உயிரே’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. விஷால் நயன்தாரா நடித்த ‘சத்யம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.ராஜசேகர்தான் இந்த படத்தையும் இயக்கியிருக்கிறார். நடிகை ஜெயப்ரதா தயாரித்திருக்கும் இந்த படத்தில் அவரது மகன் சித்துவே ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
ஜெயப்ரதா அரசியலிலும் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறார். கலையுலகத்தை பொறுத்தவரை நான்கு மொழி நாயகியாகவும் அறியப்பட்டவர். ரஜினி, கமல், சிரஞ்சீவி, அம்பரீஷ், அனில்கபூர் என்று எல்லா மொழி ஹீரோக்களுக்கும் நன்கு பரிச்சயமானவர். எனவே அரசியல் வட்டாரத்திலும், நான்கு மாநில சினிமா வட்டாரத்திற்கும் ஜெயப்ரதா அழைப்பிதழ் வைத்திருக்கிறாராம்.
இது ஒருபுறமிருக்க, தனது படத்தில் நடித்தவர்கள் என்ற வகையில் விஷாலுக்கும், நயன்தாராவுக்கும் அழைப்பிதழ் வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ராஜசேகர். ஹன்சிகா இருக்கும் மேடையில் நயன்தாராவும் வந்தால், எல்லா கேமிராக்களுக்கும் ஆயிரம் கண் பூக்குமே? அதுமட்டுமல்ல, இந்திநடிகர் அனில்கபூர், தெலுங்குநடிகர் மோகன்பாபு, கன்னடநடிகர் அம்பரிஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் கலந்துகொள்ளப் போகிறார்களாம்.
பார்க்கலாம்… அந்த மேடையில் இன்னும் என்னென்ன வாணவேடிக்கைகள் நிகழப்போகிறதென்று?