அரசு நிலத்தை ஆக்ரமித்தாரா விவேக்?
இதென்னடா விவேக்குக்கு வந்த சோதனை? தனது அன்னை ராஜலட்சுமி டிரஸ்ட் மூலமாக ஊருக்கெல்லாம் நல்லது செய்து வருகிறார் விவேக். தமிழகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து அவர் நட்ட மரக்கன்றுகள் இந்நேரம் ஆடு மாடுகளின் அகோர பசிக்கு தப்பி, காற்று வீச ஆரம்பித்திருக்கும். ஆனால் இந்த நேரத்தில் அவரை நோக்கி சேறு வீச ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். அவர்கள் வேறு யாருமல்ல, விவேக்கின் அலுவலகம் அமைந்திருக்கும் பகுதி வாசிகள்தான். புறம்போக்கு நிலத்தை ஆக்ரமிக்க பார்க்கிறார் என்பதுதான் அவர் மீது அவர்கள் வீசும் குற்றச்சாட்டு.
கடந்த சில மாதங்களாகவே இந்த பஞ்சாயத்து அப்பகுதியில் நடந்து வருகிறது. அவர் அலுவலகத்தின் வெளியில் யாரும் பயன்படுத்தப்படாத ஒரு வெற்று ஏரியா இருந்தது. அந்த இடத்தில்தான் அந்த ஏரியாவாசிகள் குப்பை கொட்டுவார்களாம். நாற்றம், சுகாதாரக்கேடு, மாசு இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த அந்த இடத்தில் ஒரு தடுப்பு ஏற்படுத்தி அதில் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார் அவர். அது மட்டுமல்ல, அந்த பகுதி அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். அது பொறுக்காத சிலர் நள்ளிரவில் வந்து அவற்றையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு போயிருக்கிறார்கள்.
தொடர்ந்து இப்படி நடந்து வருவதால் காவல் துறையிடம் புகார் அளித்தாராம். அதற்கப்புறமும் இந்த செய்கை தொடர்வதால் வேதனையில் இருக்கிறார் விவேக். நாடு முழுக்க சுற்றி வந்து மரம் நட்டேன். ஆனால் என் ஆபிஸ் வாசல் நாறிப்போய் கிடக்கு. என்ன பண்றது என்று புலம்பியதுடன், உடனடியாக அந்த சமூக விரோதிகளை போலீஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை.
ஆனால் அந்த ஏரியாவாசிகளின் குற்றச்சாட்டு என்ன? ‘விவேக்கின் ஆபிசுக்கு வெளியே நாற்பதடி நீளத்தில் காலியிடம் இருக்கிறது. அதை அவர் ஆக்ரமிக்க பார்க்கிறார். அரசு புறம்போக்கு நிலத்தில் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். ஆனால் மின் இணைப்பு அந்த இடத்திற்கு கீழேதான் செல்கிறது. மரத்தின் வேர்கள் நாளைக்கு வளர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் என்னாவது? அதனால்தான் நாங்கள் அதை பிடுங்கி எறிகிறோம்’ என்கிறார்களாம்.
அட புண்ணாக்குகளா? உங்க மின் இணைப்பை நிரந்தரமா துண்டிச்சா கூட தப்பில்லை!