அது குடும்பத்துக்கே உரிய ராசிடா மச்சான்

‘நவரச நாயகன்’ கார்த்திக்குக்கு ஒரு ரசத்தில் மட்டும் உப்பு மிளகு சற்று ஒசத்தியாக இருக்கும். அதுதான் ரொமான்ட்டிக்! இன்றைய தேதி வரைக்கும் கார்த்திக்கின் இடத்தை நிரப்ப ஒரு கொம்பனும் பிறக்கவில்லை தமிழ்சினிமாவில். கட்சி, ஜாதி அரசியல், காங்கிரசுக்கு பிரச்சாரம் என்று கார்த்திக்கின் அரசியல் வாழ்க்கை நையாண்டியாக அமைந்தாலும், காதல் காட்சிகளில் அவரை ரசிக்காமல் இருக்கவே முடியாது. அப்படிப்பட்ட காதல் கிடாவுக்கு பிறந்த குட்டி ஆடுதான் கௌதம் கார்த்திக். ‘கடல்’ படம் முழுவதுமே சுனாமியால் உள் வாங்கினாலும், பளிச்சென்று வெளியே தெரிந்தவர் ஒருவர் உண்டென்றால் அது கௌதம்தான்.

‘கடல்’ படத்திற்கு பிறகு அவர் நடித்து இந்த வாரம் வெளிவரப் போகும் படம் ‘என்னமோ ஏதோ’. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த கௌதமுக்கு இந்த பக்கம் ஒரு ஹீரோயினும் அந்த பக்கம் ஒரு ஹீரோயினும் அமர, ‘அது குடும்பத்துக்கே உரிய ராசிடா மச்சான்’ என்று மண்டைக்குள் பல்லி கத்தியது. நினைத்தமாதியே ஒரு பத்திரிகையாளர் கேட்டார். ‘இந்த படத்துல உங்களுக்கு ரெண்டு ஹீரோயின். இதை பார்த்துட்டு உங்க அப்பா என்ன சொன்னார்?’ என்று. சற்று வெட்கம் வழிய பேச ஆரம்பித்தார் கௌதம். ‘அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவர் படம் பார்த்துட்டார். அடுத்தடுத்த படத்துல ரெண்டு மூணுன்னு அதை டெவலப் பண்ணனும்’ என்றார் அதே ‘கேட்சிங்’ சிரிப்புடன்.

தெலுங்கில் வெளிவந்த ‘ஆலா மொதலாயிந்தி’ என்ற படத்தின் ரீமேக்தான் இது. அப்படிதான் முதலில் ஆரம்பித்தது என்று அர்த்தமாம் இதற்கு. ஆனால் இங்கு ‘என்னமோ ஏதோ’ என்று தலைப்பு வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ரவி தியாகராஜன். இவர் பிரியதர்ஷனிடம் தொழில் கற்றுக் கொண்டவர். ‘படத்துல என்னமோ ஏதோ இருக்குன்னு நினைச்சு உள்ளே வருவாங்கல்ல?’ என்கிறார் ரவி.

பேக் டூ கௌதம்…. ‘என்ன சார்? அப்பா அரசியல் பிரச்சாரத்திற்கு போறார். நீங்க போகலியா?’ என்றது பிரஸ். ‘அது அப்பாவோட தனிப்பட்ட டிபார்ட்மென்ட். எனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. நான் ஒரு காலத்திலேயும் அரசியல் பக்கம் போகவே மாட்டேன்’ என்று சத்தியம் பண்ணாத குறையாக பதறினார் கௌதம்.

கொஞ்சம் வளர்ந்துட்டா, சினிமாவுல இவங்க பண்ற அரசியலை கவனிக்கவே நேரம் போதாது. அப்புறம் எங்கே அந்த பக்கம் போறது? இல்லையா கௌதம்…!

Read previous post:
ஐ.டி பசங்க மத்தியில் ஒரு ஹை டீ வீணா நாயர்!

பாக்சிங் பற்றி யாராவது படமெடுத்தாலும் சரி, கில்லி, கபடி பற்றி படம் எடுத்தாலும் சரி, அல்லது தெருவோரத்தில் திருட்டுத்தனமாக ஆடுகிற மங்காத்தா பற்றி எடுத்தாலும் சரி. ‘அவங்க...

Close