ஐ.டி பசங்க மத்தியில் ஒரு ஹை டீ வீணா நாயர்!
பாக்சிங் பற்றி யாராவது படமெடுத்தாலும் சரி, கில்லி, கபடி பற்றி படம் எடுத்தாலும் சரி, அல்லது தெருவோரத்தில் திருட்டுத்தனமாக ஆடுகிற மங்காத்தா பற்றி எடுத்தாலும் சரி. ‘அவங்க சரியா எடுக்கல, எங்க கலையை கேவலப்படுத்திட்டாங்க. இதை நாங்க வுட மாட்டோம்’னு கோர்ட்டுக்கு போய் ஸ்டே கேட்கிற அளவுக்கு கருத்து சுதந்திரம் தறிகெட்டு ஓடுகிறது நாட்டில். இன்று ‘மான்க ராத்தே’ படத்திற்கு எதிராக ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் இன்னொரு பாக்சிங் படம் வரப்போகிறது. படத்தின் பெயர் ‘நாங்கள்லாம் ஏடாகூடம்’.
நகுலன் பொன்னுசாமி, வடிவுடையான் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் இப்படத்தின் டைரக்டர் விஜயகுமார். இந்த படக்குழுவினரை பொருத்தவரை ஒரு சின்ன சேஃப்ட்டி. வட சென்னையில் இப்போதும் பிரபலமாக பலரும் விளையாடிக் கொண்டிருக்கும் பாக்சிங் விளையாட்டை லைவ்வாகவே படம் பிடித்திருக்கிறார்கள் . ‘நிஜ மேட்ச் நடக்கிற இடத்தில் நாங்க ஷுட் பண்ணியிருக்கோம். இந்த கலையை பலரும் ரவுடிசத்துக்கு பயன்படுத்துறாங்க. ஆனால் இந்த படத்தில் வரும் ஹீரோ இந்த பாக்சிங்கை கலையாக பார்க்கிறார். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தன்னம்பிக்கையோடு எதிர்த்து நிற்கிற துணிச்சலை இந்த கலை கொடுக்குது. அதைதான் நாங்கள்லாம் ஏடாகூடம் படத்தில் முக்கியமாக காட்டப் போறோம்’ என்றார் விஜயகுமார்.
படத்தின் தயாரிப்பாளர் நிர்மல் தேவதாஸ், ஹீரோ மனேஜ் தேவதாஸ் உள்ளிட்ட பலரும் ஐ.டி -துறையில் பணியாற்றுகிறார்களாம். நுனி நாக்கு திகட்ட திகட்ட ஆங்கிலம் பேசுகிற இவர்கள் படத்தில் வட சென்னை பாஷையை பிய்த்து உதறியிருக்கிறார்களாம். படத்தின் ஹீரோயின் வீணா நாயர் மட்டும் கேரளா வரவு. ‘ஞான் கொஞ்சம் கொஞ்ம் தமிள் அறியும்…’ என்று பேச ஆரம்பித்தாலும், வடசென்னை முழுக்க அத்துப்படியாகி விட்டது இந்த பெண்ணுக்கு. படத்தில் இவரையும் ஐ.டி துறையில் பணியாற்றுகிற பெண்ணாக காட்டியிருக்கிறார் டைரக்டர்.
நிஜத்தில் நார்த் மெட்ராசை நாத்த மெட்ராஸ் என்று வர்ணிக்கிற அளவுக்கு நாடு இந்த ஏரியாவை புறக்கணித்தாலும், அந்த ஊரின் பெருமையை சினிமா மூலம் மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை தருகிறார் விஜயகுமார். குத்து பலமாக விழுந்திருக்கிறதா என்பதை அறிய வெள்ளித்திரை வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்.