ஸ்ரீதேவியோட பொண்ணுதான் கடைசியா முடிவாச்சு!

பாலா படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக ஒருவர் பணியாற்றிவிட்டால், வானத்தை வில்லா வளைச்சு அது தலையில ஒரு குல்லா மாட்டணும் என்றால் கூட, …இதோ செஞ்சாச்சு என்பார் சுறுசுறுப்பாக. நடிகர்களை மட்டுமல்ல, படத்தில் பங்காற்றும் ஜடப் பொருட்களை கூட சவட்டி கழித்துவிடுவார் பாலா. அப்படிப்பட்ட ஸ்கூலில் இருந்து பாடம் படித்துவிட்டு வந்திருக்கிறார் முருகானந்தம். சேது படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி அதற்கப்புறம் சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக அமர்க்களம், பார்தேன் ரசித்தேன், ஜேஜே, வசூல்ராஜா எம்பிபிஸ் போன்ற பல முன்னணி படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர் இவர். இப்போது ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தின் பெயர் ‘முருகாற்றுப்படை’. (ஹீரோ முருகனுக்கு ஆறு நண்பர்களாம். அதனால்தான் இப்படியொரு தலைப்பு)

‘தயாரிப்பு நிர்வாகியா இருந்தவங்க படம் தயாரிச்சிருக்காங்க, நீங்க என்ன திடீர்னு இயக்குனாகிட்டீங்க?’ என்றால், ‘என்னோட கனவே இயக்குனர் ஆகணும்ங்கறதுதான். சினிமாவில் எந்த துறையிலாவது இருக்கணும் என்று உள்ளே நுழைஞ்சேன். இயக்குனர் ஆவதற்கு இத்தனை வருஷமாகிருச்சு’ என்கிறார். சரவணன் என்கிற புதுமுகம் ஹீரோவாக நடிக்க, இவருக்கு ஜோடியாக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவிக்கு மகளாக நவீக்கா நடிக்கிறார். ‘கதாநாயகிக்காக தென்னாடு வடநாடுன்னு இந்தியா முழுக்க சுற்றினோம். சுமார் எண்பது ஹீரோயின்களை பார்த்துட்டு கடைசியா இந்த நவீக்காவை அழைச்சிட்டு வந்திருக்கோம்’ என்றார் முருகானந்தம்.

கதை என்ன? ‘காலேஜ்ல படிக்கிற மாணவர்களுக்கு இடையிலேயே ஏற்ற தாழ்வுகள் நிறைய இருக்கு. சாதாரணமா பி.ஏ , எம்.ஏ படிக்கிற மாணவர்களுக்கு என்ஜினியரிங் காலேஜ் மாணவர்களை பார்க்கும் போது பொறாமையா இருக்கும். என் படத்தில் அதுதான் கான்சப்ட். அதை காதல் கலந்து எப்படி சொல்லியிருக்கேன்னு படம் பாருங்க’ என்றார் முருகானந்தம்.

படத்தின் தயாரிப்பாளர் வச்ச முதல் கண்டிஷன் என்ன தெரியுமா? நம்ம படத்துல ஆபாசம்ங்கறதே இருக்கக் கூடாது. பாடல் வரிகளில் கூட பாசிட்டிவ்வான எண்ணங்கள்தான் இருக்கணும் என்பதுதான். இதற்காகவே மூன்று கதைகளை அவருக்கு சொல்லி, நாலாவது கதையை ‘டிக்’ அடித்திருக்கிறார் முருகானந்தம்.

கேட்கவே ஆனந்தமா இருக்கு முருகா!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அமலாபாலின் கொழுந்தனுக்கு அடிக்குது லக்கி பிரைஸ்….

நேற்று முதல் நீ யாரோ? இன்று முதல் நீ வேறோ? என்று ஆகிவிட்டார் உதயா! நடிகர் உதயா என்றால் சட்டென்று புரியாதவர்களுக்கு அமலாபாலின் வருங்கால கொழுந்தனார் என்றால்...

Close