ஜெய் ஹிந்த் 2- விமர்சனம்

நாட்டுல ஒரு பிரச்சனைன்னா நாக்குக்கு அடியிலிருந்து கோபம் வரும் அர்ஜுனுக்கு. இரு தோள்களை விரித்து காற்றிலிருந்து மின்சாரம் எடுத்தாவது ஷாக் அடிப்பார் துரோகிகளை. அவரது ஃபார்முலாவிலிருந்து சற்றும் மாறாத படம். ஆனால் இந்த முறை தேசியக் கொடி, டெரரிஸ்ட் என்று எந்த வம்பு தும்புக்கும் போகாமல், உள்ளூர் கல்வி வியாபாரிகளுக்கு ‘உலக்கையடி’ கொடுத்திருக்கிறார். கருத்து சரிதான். அதை நிறுத்த தராசில்தான் அநியாயத்துக்கு அடாவடி!

ஒரு தனியார் பள்ளியில் தங்கள் செல்ல மகளுக்கு சீட் கிடைத்ததற்காக சந்தோஷப்படுகிறான் அந்த தகப்பன். பள்ளி நிர்வாகமோ லட்சக்கணக்கில் பணம் கட்ட சொல்கிறது. கையில் காலில் விழுந்து கடன் வாங்கியாவது பிள்ளையை அந்த ஸ்கூலில் சேர்க்க துடிக்கும் அவனுக்கு கிடைத்ததோ ஏமாற்றம். ‘சீட் கிடைக்கலியே’ என்று ஃபீல் பண்ணி குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்கிறான். அதை கண்ணெதிரே பார்க்கும் அர்ஜுன் வெகுண்டெழுந்து ‘தமிழ்நாட்ல இருக்குற தனியார் பள்ளிகளையெல்லாம் கபளீகரம் செஞ்சு எல்லாத்தையும் அரசு பள்ளிகளாக்குங்கப்பா’ என்கிறார் ஆத்திரமும், அலறலுமாக! நயன்தாராவுடன் ஜோடி சேர முடியலைன்னு வையாபுரி தற்கொலை செஞ்சுகிட்டா டைரக்டர் ஷங்கர் சண்டைக்கு வந்து சவுட்டி கழிச்சால் அது எவ்வளவு அநியாயமோ, அதைவிட அநியாயம் அந்த தற்குறி தகப்பன் செய்த காரியமும் அதற்கு சப்போர்ட்டாக அர்ஜுன் வருவதும்.

இதையே துருப்பு சீட்டாக கொண்டு அர்ஜுன் விளையாடுகிறார்? ஒட்டவே மாட்டாமல் துருத்திக் கொண்டு நிற்கிறது கருத்து. அதிலும் அந்த தகப்பனின் நடிப்பு… எட்டு சிவாஜி, பத்து ஜெமினி, பனிரெண்டு நாகைய்யாவுக்கு சமம்! (எங்க சார் புடிச்சீங்க அந்தாள?) பட்… அந்த குட்டிக்குழந்தை எல்லாவற்றையும் மன்னிக்க வைக்கிறது.

இருந்தாலும் அர்ஜுனின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இந்த படத்தை ஆறாவது ஏழாவது முறையாக கூட பார்க்கலாம். அப்படியொரு மின்னல் இடி… பொறி பறக்கிறது ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும். ஜெய் ஆஞ்சநேயா பக்தனான அர்ஜுன் படத்திலும் அப்படியே வருகிறார். சிக்ஸ் பேக்ஸ், எய்ட் பேக்ஸ், செவன்டீன் பேக்ஸ் ஹீரோக்களெல்லாம் அர்ஜுனிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படியொரு கட்டுமஸ்தான காளையாக இருக்கிறார் இப்போதும். டூப் போடாமல் அவர் சண்டை போடுவதை ஆற அமர நிதானமாக சில நேரங்களில் ஸ்லோ மோஷனில் காட்டும் ஒளிப்பதிவாளர் வேணுகோபாலுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ். இப்படியெல்லாம் சண்டை போட ஹாலிவுட் நடிகர்களுக்குதான் முடியுமா? எங்க அர்ஜுனை பார்த்துட்டு அப்புறம் பேசுங்க என்று உண்டிவில்லால் அடித்து முறைக்கலாம் அவரது ரசிகர்கள். காதல் காட்சிகளில் அவருக்கே ‘இது ஓவர்ப்பா… ’ என்று தோன்றியிருக்க வேண்டும். அடக்கியே வாசிக்கிறார் மனுஷன்.

அவரது கராத்தே பள்ளிக்கு வந்து காதல் வளர்க்கும் ஹீரோயின் கர்வீன் சாவ்லாவுக்கு கண்களில் சோகமும் காதலும் வழிகிறது. நல்லவேளை… நோ டிராஜடி.

இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் காமெடியன் பிரம்மானத்தை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்கு டிக்கெட் போட்டு வரவழைத்த அதே டிக்கெட்டின் பின் புறத்திலாவது அவருக்கான காட்சிகளையும் வசனங்களையும் எழுதி பார்த்திருக்கலாம். நம்ம ஊரு கஞ்சா கருப்பே தேவலாம் என்றாக்குகிறார். (ஆனைக்கும் படி சறுக்கும்! )

அந்த வில்லன் சிம்பிளாக ஒரு துண்டை தோளில் போட்டுக் கொண்டு இன்டர்நேஷனல் லெவலுக்கு ரவுடியிசம் செய்வதை நன்றாகவே ரசிக்க முடிகிறது.

தனியார் கல்வி நிறுவன முதலாளிகளை கலங்கடிக்கும் விதத்தில் அர்ஜுன் செய்யும் கடத்தல் விஷயமும், பின் அவர்களை அவரே ஆபத்து முனையிலிருந்து மீட்டெடுப்பதும் ஹாலிவுட் படம் போன்ற விறுவிறுப்பை தருகிறது. காதலே இல்லாமல் இந்த படத்தை எடுத்திருந்தால் அது இன்னும் விசேஷமாக இருந்திருக்குமோ என்னவோ?

அர்ஜுன் ஜெனியா என்ற புதிய இசையமைப்பாளர் ‘அடித்திருக்கிறார்.’ கானா பாலா பாடியிருக்கும் ஐயா படிச்சவரே… செம ட்யூன். அழுத்தமான வரிகள்.

சிங்கம் சோர்வதுமில்லை, சீற்றம் குறைவதுமில்லை. அர்ஜுன் படங்கள் அப்படிதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் – மாரிசெல்வராஜ்

நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் அவர்களுக்கு ஒரு சேரிப்பையனின் பகிரங்க கடிதம்: வணக்கம் எனக்கு எட்டு வயசாகும்போது என் கண்முன்னே எங்கள் வீடு எரிந்துகொண்டிருந்த நடு இராத்திரி ஒன்றில்...

Close