பல கோடி கேட்டு மிரட்றாங்க – விஜய் சேதுபதி அவர்தான் இரண்டு கோடி தர்றதா ஒத்துக்கிட்டாரு – ஸ்டுடியோ 9 சுரேஷ் – பற்றிக் கொண்டு எரியும் பஞ்சாயத்து மேளா!
வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ் எந்த ரகம்? முடிஞ்சா கண்டுபிடிங்கப்பா… என்பது போலவே இருக்கிறது இருவரது நியாயமும்!
‘வசந்தகுமாரன்’ படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் நிர்ணயித்து அதில் 10 லட்ச ரூபாயை அட்வான்சாக கொடுத்திருக்கிறார் சுரேஷ். நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய விஜய் சேதுபதி படங்களை தொடர்ந்து வெளியிட்ட விநியோகஸ்தர் இவர்.
என்ன சொல்கிறார் அவர்?
‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்திற்கு சென்னையில் மட்டும் 400 வினைல் வச்சுருக்கேன். விஜய் சேதுபதி யாருன்னே தெரியாத நேரத்தில் அவரை பெரிய ஹீரோக்களுக்கு இணையாக விளம்பரம் செஞ்சு மார்க்கெட்ல நல்ல இடத்துக்கு கொண்டு வந்தேன். முதன் முதல்ல அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிச்சதும் நான்தான். ஆனால் அப்படிப்பட்ட எனக்கே அவர் கால்ஷீட் தராம இழுக்கடிச்சுட்டு இருக்கார். அதுமட்டுமல்ல, அவரே சொன்ன டைரக்டரை வச்சுதான் வசந்தகுமாரன் என்கிற படத்தை துவங்குனோம். பிந்து மாதவி ஹீரோயினா வேணும்னாங்க. புக் பண்ணினேன். வரலட்சுமி ஹீரோயினா வேணும்னாங்க. புக் பண்ணினேன். எல்லாருக்கும் சம்பளத்தை முழுசாகவே கொடுத்துட்டேன். இரண்டு வருஷமா ஆபிசை ரன் பண்ணியிருக்கேன். எட்டு அசோசியேட் டைரக்டர்ஸ் இந்த படத்திற்காக வேலை பார்த்துருக்காங்க. எல்லாருக்கும் சம்பளம் கொடுத்துருக்கேன். டைரக்டருக்கு நாலு லட்ச ரூபாய் சம்பளத்தை மொத்தமா முன்னாடியே கொடுத்துட்டேன். இதுவரைக்கும் கிட்டதட்ட 90 லட்ச ரூபாய் செலவு பண்ணியிருக்கேன். நானும் வெளியில் வட்டிக்கு வாங்கிதான் படம் எடுக்கிறேன். இப்போ வட்டியோடு பார்த்தாலே அது ஒன்றரை கோடி வரும் என்கிறார் ஸ்டுடியோ 9 சுரேஷ் மூச்சுவிடாமல்.
‘இப்ப வந்து நான் படம் பண்ண மாட்டேன். அட்வான்சை திருப்பி வாங்கிக்கங்க என்று சொன்னால், அதை நான் எப்படி ஒப்புக்க முடியும்? அவர் இப்போ நடிச்சுட்டு இருக்கிற ‘நானும் ரவுடிதான்’ படத்தை முடிச்சுட்டு கூட வரட்டும். நான் வெயிட் பண்றேன். ஆனால் அவர் என் தயாரிப்பில் நடிச்சே ஆகணும். வேறு முடிவுகளுக்கு நான் கட்டுப்பட மாட்டேன்’ என்கிறார் சுரேஷ் உறுதியாக.
நீங்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தீங்களாமே? இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டீங்களாமே? தகாத வார்த்தைகளில் அவரை திட்டினீங்களாமே? அதனால்தான் அவர் இந்த படத்திலிருந்து விலக நினைக்கிறாராமே? என்று அடுக்கடுக்காக நாம் கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்தார் சுரேஷ். ‘எல்லாம் பொய் சார். நாங்க அவரை ஒருமுறை தாஜ் ஓட்டலில் சந்திச்சு பேசும்போது, ‘இரண்டு கோடி ரூபாய் பணம் கொடுத்துடுறேன். இந்த படத்திலிருந்து என்னை விடுவிச்சுருங்க’ என்று சொன்னதே அவர்தான். ஆனால் அதற்கப்புறம் அவர் எங்களை தொடர்பு கொள்ளவே இல்ல. அவர் நல்லவர்தான். அவரை வேறு யாரோதான் எனக்கு எதிரா திருப்பிவிடுறாங்க’ என்றார். நான் கொலை மிரட்டல் விடுத்தேன் என்று சொன்னால் எனக்கு எந்த ஹீரோதான் படம் கொடுப்பார்கள்? திட்டமிட்டு என்னுடைய கேரியரை நசுக்கப்பார்க்கிறார் விஜய் சேதுபதி என்றும் குமுறினார் சுரேஷ்.
இவர் ஒருபுறம் பிரஸ்மீட் வைத்து தனது தரப்பு நியாயத்தை சொல்லப்போகிறார் என்று தெரிந்ததுமே, தனது விளக்கத்தை அறிக்கையாக பிரஸ்சுக்கு அனுப்பி வைத்துவிட்டார் விஜய் சேதுபதி. அதில், ‘எனக்கு 9 லட்சம் அட்வான்ஸ் கொடுத்த ஸ்டூடியோ 9 சுரேஷ், இப்போது பல கோடிகள் திருப்பி கேட்கிறார். அதுமட்டுமல்ல, சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன. நான் அந்த படத்திலிருந்து விலகுவதாக பல மாதங்களுக்கு முன்பே தெரிவித்துவிட்டேன். அப்படியிருந்தும் இன்று ஒரு நாளிதழில் எனது படத்துடன் வசந்தகுமாரன் பட விளம்பரம் வெளியாகியுள்ளது. இதுபோல் தொடர்ந்து என்னை மிரட்டினால் நான் காவல் துறை மூலமும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.
படத்திலிருந்து விலக நினைத்த விஜய் சேதுபதி, அதை உடனே செய்யாமல் இரண்டு வருடம் சும்மா இருந்தது ஏன்? விஜய்சேதுபதி ஒருவேளை தோல்விப்பட ஹீரோவாக இருந்தால், ‘நீங்க என் படத்தில் நடிச்சே ஆகணும்’ என்று ஸ்டூடியோ 9 சுரேஷ் பிடிவாதம் செய்வாரா? இப்படி இரு தரப்பையும் சந்தேகப்பட வைக்கும் பல கேள்விகள் இருக்கின்றன.
சொல்ல முடியாது. நாளைக்கே இருவரும் ஒருவர் தோளில் இன்னொருவர் கையை போட்டுக் கொண்டு சிரிக்கலாம். சந்தோஷப்படலாம். சுளுக்கும் விழ வைப்பார்கள். சுளுக்கு வந்து வலிக்கிற இடத்தில் தைலத்தையும் தடவுவார்கள். அதுக்கு பேருதான் கோக்கு மாக்கு கோடம்பாக்கம்!