மதன்கார்க்கிக்கு சத்யராஜ் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்

சிபிராஜ் சினிமாவில் நடித்து நாலு வருஷம் இருக்குமா? நாற்பது வருஷம் கூட இருக்கட்டுமே, நமக்கென்ன? என்கிற மனநிலையில்தான் இருக்கிறது நாடு. இருந்தாலும், ‘நல்ல படத்தோடு வந்து உங்க எண்ணத்தை மாத்தல, என் பேரை மாத்திக்குவேன்’ என்கிற ரேஞ்சுக்கு வெறிபிடித்து திரிந்தார் அவர். தினம் ஒரு கதை கேட்டாலும் திருப்தியே வராதாம் அவருக்கு. இந்த நிலையில்தான் அவரை வைத்து ‘நாணயம்’ படத்தை இயக்கிய அதே ஷக்தி மீண்டும் ஒரு கதையை சொன்னார் சிபிக்கு. இவர் ஒரு ஹீரோ. நாய் இன்னொரு ஹீரோ. இந்த வித்தியாசமான கதைக்களம் பிடித்துப் போனதும், ‘அப்புறம்..?’ என்று ஆர்வத்தோடு உட்கார்ந்தார் சிபி. அவருக்கே இன்ப அதிர்ச்சி. இத இத இததான் எதிர்பார்த்தேன் ரேஞ்சுக்கு ஒரு ஆக்ஷன் த்ரில்லரை கூறி அசத்திவிட்டார் ஷக்தி எஸ்.ராஜன்.

சிபி ரெடி. நாய் வேணுமே? தனக்கு தெரிந்த நாய் வளர்க்கும் நண்பர்களிடமெல்லாம் ஆஃபர் வைத்தார் சிபி. ஆயிரக்கணக்கான நாய்கள் இன்டர்வியூ செய்யப்பட்டன. வெறும் லொள் லொள்தான் மிச்சம். ஒரு நாயும் யோக்யமா இல்ல! அந்த நேரத்தில்தான் டைரக்டர் வெங்கட்பிரபு ட்விட்டரில் இந்த நாய் தேடும் படலத்தை ட்விட் பண்ணியிருந்தாராம். அதை வேறொருவர் பார்த்துவிட்டு சிபியை தொடர்பு கொள்ள, பெங்களூருக்கு விரைந்தார்கள். அங்கு மிலிட்டரிக்கு பயிற்சியளிக்குமளவுக்கு திறமையான நாய்களை அதுவும் 100 க்கும் மேற்பட்ட நாய்களை வைத்திருந்தாராம் ஒருவர். அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துவிட்டார்கள். ஷுட்டிங் ஸ்பாட்ல ஆக்ஷன் சீக்குவென்ஸ்ல அது என்னை பல இடங்களில் கடிச்சுருக்கு. பட்… அதுக்கெல்லாம் நான் தயாராதான் இருந்தேன் என்கிறார் சிபி.

அப்புறம் இன்னொரு இன்ட்ரஸ்டிங் தகவல். ஒரு பாடலில் ‘னாய்… னாய்…’ என்றே எல்லா வரிகளும் முடிகிற மாதிரி எழுதியிருந்தாராம் மதன்கார்க்கி. உச்சரிப்பில் அநு நாய் என்றே கொள்ளப்படும். (அத்திக்காய் காய் காய்… ஸ்டைல் பாடல் அது) ஆனால் அந்த வித்தியாசத்தையும் நுட்பத்தையும் கூட சட்டென்று புரிந்து கொள்ள முடியாத ஸ்ட்ரெங்க்த்தில் இருந்திருக்கிறார்கள் சிபியும் ஷக்தியும். மருந்துக்கு கூட ஒரு வார்த்தை பாராட்டவில்லையாம் மதன் கார்க்கியை. ஆனால் சத்யராஜ் அப்படியா? எத்தனை வருட அனுபவம்!

வெளியூரில் ஷுட்டிங்கில் இருந்தாராம். பாடலை கேட்டுவிட்டு அங்கிருந்தே ஒரு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார் மதன்கார்க்கிக்கு. அழகாக எழுதினாய், தமிழை உயர்த்தினாய், பெருமை படுத்தினாய்… என்று னாய் னாய் என்று முடியும்படி ஒரு மெசேஜை தட்டிவிட்டார். அதற்கப்புறம்தான் மதன்கார்க்கிக்கு நிம்மதி!

தமிழை மோப்பம் பிடிப்பதற்கும் ஒரு ‘ஷக்தி’ வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பல கோடி கேட்டு மிரட்றாங்க – விஜய் சேதுபதி அவர்தான் இரண்டு கோடி தர்றதா ஒத்துக்கிட்டாரு – ஸ்டுடியோ 9 சுரேஷ் – பற்றிக் கொண்டு எரியும் பஞ்சாயத்து மேளா!

வளர்ந்தவங்களை வளைக்கிறதுல காட்டுற ஆர்வத்தை, தொலைஞ்சவங்களை தேடுறதுல காட்டுறதில்ல எந்த தயாரிப்பாளரும். இதில் விஜய் சேதுபதி எந்த ரகம்? அவருக்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டு பின்னாலேயே திரிந்து கொண்டிருக்கிற...

Close