கயல் – பிரமிக்க வைக்கும் சுனாமி
இரண்டரை வருடம் ஒரு படத்தை இயக்குவதும், அதற்கும் ஒரு தயாரிப்பாளர் பணத்தை இறைத்துவிட்டு பொறுமையோடு காத்திருப்பதும், ‘வௌங்கிரும்டா…’ டைப்பான அலுப்புதான். ஆனால் பிரபுசாலமன் திரையில் நிகழ்த்திக்காட்டியிருக்கும் அந்த அற்புதத்திற்காக இன்னும் ஐந்து வருடங்களை காவு கொடுக்க சொன்னாலும் கூட தப்பில்லை! மைனா, கும்கி, என்று படத்திற்கு படம் தன் சிறகுகளை விரித்துக் கொண்டே போகும் பிரபுசாலமனின் இந்த கயல், தமிழ்சினிமாவின் மிக மிக முக்கியமான படமாக இருக்கப்போகிறது. நமக்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல் காட்சியும், ஒரு ட்ரெய்லரும் அடேயப்பாவாக்கியது நம்மை! காஷ்மீர் டூ கன்னியாக்குமரி வரை ஒரு ட்ரிப் அடித்த சந்தோஷம் அதில். அவர் காட்டுகிற இயற்கை காட்சிகளும், காதல் காட்சிகளும் எந்த மனுஷனையும் மறுபடியும் புதுப்பிக்கும், சந்தேகமேயில்லை!
வழக்கமாக பிரபுசாலமன் படத்தில் அவருக்கு கேமிரா கண்களாக இருப்பவர் சுகுமார். ஆனால் இந்த படத்தில் வி.மகேந்திரன் என்ற புதியவர்.
பிரபுசாலமன் என்ன சொல்கிறார்? ‘பொதுவா என்னோட படத்தின் கேமிராமேன் முழுக்க முழுக்க படம் முடிகிற வரைக்கும் என்னோடு மட்டுமே இருக்கணும்னு நினைப்பேன் நான். இந்த படம் முடிய இரண்டரை வருடம் ஆகியிருக்கு. அதுவரைக்கும் என்னோட டிராவல் பண்ணியிருக்கார் மகேந்திரன். படத்தில் ஒரு சுனாமி காட்சி வருது. அதை கிராபிக்ஸ்ல பண்ணிக்கலாம்னாலும், முழுக்க முழுக்க அப்படியே செஞ்சுர முடியாது. இருக்கிற யதார்த்தத்தில் இன்னும் கொஞ்சம் கிராபிக்ஸ் சேர்ந்தால்தான் அது சரியா இருக்கும். அதுக்காக பொன்னேரியில் ஒரு பெரிய ஏரியை உருவாக்குனோம். கிட்டதட்ட ஒரு மாசம். படத்தின் ஹீரோ சந்திரனுக்கு அதில் ஊறி ஊறி சேத்துப்புண்ணே வந்துருச்சு. அந்த சுனாமி காட்சி எல்லாரையும் மிரட்டும்ங்கறது நிச்சயம்’ என்றார். ட்ரெய்லரிலும் சிறிதளவு அந்த காட்சிகள் இடம் பெறுகிறது. (பார்ப்பவர்கள் பிரமித்துப் போவது உறுதி)
டால்ஃபி அட்மாஸ் என்ற புதிய ஒலி வடிவத்தை இந்த படத்தில் உருவாக்கியிருக்கிறாராம் பிரபுசாலமன். தலைக்கு மேலே கூட ஸ்ப்பீக்கர்கள் வைத்து மிரள விட்டார்கள். தமிழ்நாட்டின் மாவட்ட தலைநகர தியேட்டர்களில் கயல் படத்திற்காகவே ஸ்பெஷலாக இந்த டால்ஃபி அட்மாஸ்சை உருவாக்கி வருகிறார்களாம்.
படத்தில் பாலிமர் டி.வி ஜேக்கப், தினகரன் தேவராஜ், கலைஞர் டி.வி பெரைரா ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் நடித்திருக்கிறார்கள். இதுவரை தேவராஜ் நடித்த படங்கள் எப்படியோ, இந்த படத்திற்கு பிறகு தமிழ்சினிமாவின் மிக முக்கியமான நடிகராக வருவார் என்பதற்கான அறிகுறி பிரகாசமாக தென்பட்டது. கயல் படத்தின் ஹீரோயின் ஆனந்தியின் கண்களை பார்த்து தலைப்பு வைத்தார்களா, தெரியாது. பட்… ஆனந்தி? கால்ஷீட் தேதிகளை குறிப்பதற்கென்றே ஐந்து வருட டைரிகளை மொத்தமா பைண்டிங் செய்து வைத்துக் கொள்வது உத்தமம்!
கயல் டிசம்பரில் ரிலீஸ். சுனாமி வந்ததே…. அதே தினத்திலா பிரபுசாலமன்?