ஜெ.மரணத்தில் மர்மம்? பிரதமர் மோடிக்கு நடிகை கவுதமி கடிதம்!
மறைந்த முதல்வர் ஜெ. மீது பற்றும் பாசமும் கொண்டிருக்கும் அத்தனை பேர் மனதிலும் மின்னலாய் ஓடிக் கொண்டிருக்கும் எண்ண ஓட்டத்தை, தைரியமாக வெளியே சொல்லியிருக்கிறார் நடிகை கவுதமி. இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியிருக்கும் கடிதத்திலிருக்கும் ஒவ்வொரு வரியும், கவனிக்கத்தக்கவை. இப்படியொரு கடிதம் எழுதிய கவுதமிக்கு, தமிழக அரசியலில் எதிர்ப்பும் ஆதரவும் வரக்கூடும். இருந்தாலும், எதற்கும் துணிந்தவர் ஆகிதான் இப்படியொரு விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார் அவர்.
இன்னொரு துணிச்சல் நாயகியான அவரது கடிதம் அப்படியே இங்கே-
மதிப்பிற்குரிய பிரதமர் நரேந்திர மோடி ஜி,
ஒரு சாதாரண குடிமகளாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். நான் ஒரு இல்லத்தரசி, தாய் மற்றும் வேலை பார்க்கும் பெண். முன்னாள் முதல்வர் செல்வி டாக்டர் ஜெயலலிதாவின் அதிர்ச்சி மரணத்தை நினைத்து கவலைப்படும் கோடானு கோடி நபர்களில் நானும் ஒருத்தி.
இந்திய அரசியலில் சிறந்து விளங்கியவர் ஜெயலலிதா. பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர். அவரது தலைமையில் தமிழகத்தில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உறுதி, மனத்திடம் மக்களை தொடர்ந்து நம்பிக்கை அளிக்கும்.
ஜெயலலிதாவின் மரணம் சோகமானது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக நிலவிய சூழல், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, சிகிச்சை, அவர் தேறி வந்தது, திடீர் என இறந்தது என்று பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் உள்ளது. இந்த விவகாரத்தில் எந்த தகவலும் தெரிவிக்காமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அக்கறையுடன் வந்த தலைவர்கள், பிரபலங்கள் அவரை காண அனுமதிக்கப்படவில்லை. அவரை சந்திக்க விடாமல் தடுத்தது யார். மக்கள் விரும்பும் தலைவி விஷயத்தில் இந்த ரகசியம் ஏன்? யார் அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்தது.
ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து யார் முடிவுகள் எடுத்தது. இந்த கேள்விகளுக்கு எல்லாம் மக்களுக்கு யார் பதில் அளிக்கப்போவது? இது போன்று பல கேள்விகள் தமிழக மக்கள் மனதில் எழுகிறது. அவர்கள் சார்பில் இதை உங்களிடம் தெரிவிக்கிறேன் சார்.
தலைவர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் பற்றி அறிந்துகொள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. இது போன்ற சோக நிகழ்வு பதில் கிடைக்காமல் போகக் கூடாது. ஒரு பெரிய தலைவிக்கே இந்த கதி என்றால் தனது உரிமைகளுக்காக போராடும் சாதாரண குடிமகனின் நிலை என்னவாகும்?
கடிதம் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் எந்த விஷயம் குறித்தும் அறியும் இந்திய குடிமக்களின் உரிமையை நிலைநாட்ட நீங்கள் பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன் சார். குடிமக்களின் உரிமைகளை காக்க துணிந்து நிற்கும் தலைவர் என நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். சக நாட்டு மக்களின் குரலுக்கு செவி சாய்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஆழ்ந்த மரியாதை மற்றும் நம்பிக்கையுடன்
கவுதமி.
https://youtu.be/v8t3KTDgXsQ