கண்ணு முழிச்சிட்டாரு ஜீவன்! கட்டிப்பிடிக்குமா சினிமா?
‘இப்போ சுக்கிர ஓரை நடக்குது. அப்படியே கண்ணை மூடிகிட்டே ஒட்காருங்க. நான் சொல்லும்போது சடக்குன்னு கண்ணு முழிச்சு படபடன்னு கதைய சொல்லிடணும். அதுவும் ஆரம்பிச்சு ஐம்பத்தி எட்டாவது நிமிஷம் பன்னண்டாவது வினாடியில முடிச்சுரணும். அப்புறம் சனி ஓரை வந்துரும்’ அதுக்கப்புறம் கதை கேட்க வேணாமுன்னு அந்த சிவன் சொல்லியிருக்கான்’. இப்படியெல்லாம் கதை சொல்ல வருகிற இயக்குனர்களை பயமுருத்தி, கஷாயம் குடிக்க வைப்பதில் நடிகர் ஜீவனுக்கு நிகர் அவரேதான். எந்நேரமும் ஜோதிடம், கண்ணுறங்குற நேரத்தில் கூட இமை மேல தாயத்து என்று மார்க்கெட்டில் இருக்கும் போதே யாரும் அண்ட முடியாத பயங்கரவாதியாக இருந்தார் ஜீவன்.
திருட்டுப்பயலே படத்தின் வெற்றிக்கு பிறகு, இன்னும் பத்து வருஷத்துக்கு அவரை யாரும் அசைக்க முடியாது என்று சினிமாக்காரர்கள் கூடி நின்று கும்மியடிக்க போனால், கதவை சாத்திக் கொண்டு உருமியடித்துக் கொண்டிருந்தார் அவர். எப்படியோ… ? புதுசு புதுசாக இளைஞர்கள் வந்து புத்திசாலித்தனமாக தங்கள் மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், சினிமா இப்போ ஜோசியத்தை நம்பியில்ல. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டெலகிராம்னு எதையெதையோ நம்பியிருக்கு என்று புரிந்து கொண்டார் ஜீவன்.
பழுத்த நேரத்துல வர்ற வவ்வாலை விட்டா, புழுந்த நேரத்தில் ஆந்தைகூட வராது என்பதை காலம் கடந்து புரிந்து கொண்டாலும், ஒரு கமர்ஷியல் இயக்குனரிடம் சிக்கியிருக்கிறார் ஜீவன். அவர் இவரை கரை சேர்ப்பாரா? அல்லது நீந்தி வர்ற நேரத்தில மூச்சடைக்க வைப்பாரா? என்பதை போக போகதான் உணர முடியும். ஆனால் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜெயிக்கிற குதிரை படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் ஜீவனின் இந்த ஸ்டில்கள், மனுஷன் தப்பிச்சுப்பாரு என்றே எண்ண வைக்கிறது.
மறுபடியும் சாம்பல், விபூதி, தாயத்துன்னு கௌம்புனீங்க…? உடுக்கையை ஊற வச்சு அடிச்சுருவாங்க. பார்த்துங்கங்க ஜீவன்.