ஜித்தன்2 – விமர்சனம்

போன ஜென்மத்துல போண்டாவா பொறந்திருந்தா, இந்த ஜென்மத்துல எண்ணை சட்டியாகவாவது பொறந்துருக்கணும்! அந்த ஜென்ம ப்ராப்தி துளியும் இல்லாமல் வருகிற பார்ட்2 படங்களையெல்லாம் பார்க்கும் போது பரிதாபமே மிஞ்சுகிறது. நல்லா ஓடுன பழைய ஜித்தன் படத்துக்கும், பார்க்குற ஜனங்களையெல்லாம் ‘நல்லா ஓட வச்ச’ இந்த பார்ட் 2 ஜித்தனுக்கும் ஒரு ஜென்ம பிராப்தியும் இல்லை. அது வேற… இது வேற… ஒருவேளை இரண்டிலேயும் ரமேஷ்தான் ஹீரோ என்பதால் இதுவும் பார்ட் 2 ஆகிவிட்டதோ என்னவோ?

உடல் முழுக்க சேறு பூசிக் கொண்டு, ஒரு பிணம் போல கிடக்கும் ஜித்தன் ரமேஷ் உயிர் பெற்று எழுவதுதான் முதல் காட்சி! “கதவ திற… அந்த மகா லட்சுமியே உள்ள வருவா…”, “இனிமே உனக்கு நல்ல காலம்தான்” என்று பேனாவில் மட்டும் ஆசிர்வாதங்களை ஊற்றி ஓப்பனிங் சீன்களை வைத்திருக்கிறார் டைரக்டர் ராகுல். ஆனால் ஒரு காட்சியை கூட கோர்வையாக சொல்லவும் முடியாமல், சொல்ல வந்த கதையை உருப்படியாக ‘கன்வே’ பண்ணவும் முடியாமல், ஜித்தன் ரமேஷுக்கு மறுபடியும் ஒரு பதினாலு வருஷ ஓய்வு கொடுத்து “உட்காருங்க பிரதர்” ஆக்கியிருக்கிறார். கிரேன் வைத்து தூக்கினாலும் எழ முடியாத பள்ளத்திலிருக்கும் இவருக்கு, ‘சூப்பரும் குட்’டும் இனி எப்போது கிட்டுமோ?

ஒரு அழகான பங்களா கிடைத்துவிட்டது. அல்ப சொற்ப சம்பளத்தில் நடிக்க ஆட்களும் கிடைச்சாச்சு. அது போதும் என்று நினைத்து சீன்களை எழுதியிருக்கிறார் டைரக்டர் ராகுல். பேய் வந்து சிலபல டென்ஷன்களை ஏற்படுத்துவதும், அந்த பங்களாவிலிருந்து பயந்தடித்துக் கொண்டு ரமேஷ் வெளியே ஓடிவருவதுமாக முதல் பாதி முடிகிறது. இன்டர்வெல் நேரத்தில், வெள்ளை கவுன், மற்றும் வெல்லக்கட்டி லுக்குடன் வருகிறார் சிருஷ்டி டாங்கே. இவர்தான் அந்த பங்களாவிலிருக்கும் ஆவி. “விபத்தில் என்னுடன் செத்துப்போன லவ்வரை கண்டு பிடிச்சுக் கொடு. பங்களாவ விட்டுட்டு போயிடுறேன்” என்று அவர் டிமாண்ட் வைக்க, பேய்களோடு பேசும் மயில்சாமி உதவியுடன் அந்த காதலனை தேடிக் கிளம்புகிறார் ஜித்தன் ரமேஷ். அவன் கிடைச்சானா, சிருஷ்டி கிளம்பினாரா, இதுதான் இந்த ஜித்தன்2!

வாழ்நாள் முடிவதற்குள் ஒரு வீடு கட்டிவிடணும் என்று ஆசைப்படும் அப்பா. அவருக்கு ஒரு அப்பாவி மகன். பின் அவனே முயன்று வீடு வாங்குவதற்குள் அப்பா போய் சேர்ந்துவிட, அவன் வாங்கும் அந்த வீட்டுக்கு அப்பாவின் பெயரை வைத்து அவர் நினைவுகளை யோசிக்கும் அற்புதமான கவித்துவமான சம்பவங்களுடன்தான் படம் துவங்குகிறது. ஒருவேளை இந்த படத்தின் மூல கர்த்தா என்று சொல்லப்படும் டைரக்டர் வின்சென்ட் செல்வா அதுவரைக்கும்தான் இந்த படத்தில் வேலை பார்த்தாரோ என்னவோ? அதற்கப்புறம்…தாறுமாறு. தக்காளி சோறாக்கி விடுகிறார்கள் நம்மை.

நடுவில் அந்த பங்களாவுக்கு வாடகைக்கு வரும் ஆந்திரா ரவுடி யோகி பாபுவின் காமெடி தியேட்டரை ரிலாக்ஸ் ஆக்குகிறது. யாரு செஞ்ச புண்ணியமோ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டால், அடுத்த இருபதாவது நிமிஷம் மீண்டும் பழைய குருடி… பாக்கு கொட்டைய இடிடி… ஆக்கிவிடுகிறார்கள்.

படத்தின் ஒரு ஆறுதல் யோகி பாபு என்றால், இன்னொரு ஆறுதல் மிச்சேல் என்ற புதியவரின் கேமிரா. அழகும் திகிலுமாக மிரள வைக்கிறது. ஸ்ரீகாந்த் தேவா இலங்கை பாப் இசை பாடல் ஒன்றை சுட்டு போட்ட அந்த ட்யூன் செம. அதற்கப்புறம் அவரும் பேக்கப் பண்ணிக் கொள்கிறார்.

இந்தப்படம் செய்திருக்கும் ஒரே நல்ல காரியம்… தமிழ்சினிமாவில் நிலவி வரும் பேய் பட கொடூரத்தை ஒழித்துக் கட்டியதாகதான் இருக்கும். அந்த வகையில் டைரக்டர் ராகுலுக்கும், ஜித்தன் ரமேஷுக்கும் ஒரு பெரிய வணக்கம்.

கோடம்பாக்கம் ஆயிரம் கதைகளோடும், ஆயிரம் வருங்கால இயக்குனர்களோடும் ஒரு பூமி மாதாவின் பொறுமையோடு சுற்றிக் கொண்டிருக்கிறது. ஜித்தன் ரமேஷ் மாதிரியான ஹீரோக்களின் கண்களில் ஒருவரும் தென்படாமல் போவதால், தியேட்டர்கள் எல்லாம் ஈயாடுகிறது. இந்த சாபத்தையும் பாவத்தையும் போக்குகிற வித்தை தெரிந்த மவராசன்கள் வராவிட்டால், தமிழ்சினிமாவே பேய் வீடாகித் தொலையும். அதில் ஒரு கூக்குரல்தான் இந்த படமும்.

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இன்னுமா உலகம் நம்பள நம்புது? தொடரும் சேது படங்கள்

கண்ணா லட்டு திண்ண ஆசையா... வாலிபராஜா படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் சேது. இப்படங்களைத் தொடர்ந்துப்"ஆளுக்கு பாதி 50-50" என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக...

Close