10 லட்சம் விவகாரம்! சரத் அணியிலிருந்து விஷால் அணிக்கு தாவிய ஜே.கே.ரித்தீஷ்

‘கருப்பு எம்ஜிஆர் ரெண்டு’ என்று வேண்டுமானால் அழைக்கலாம் ஜே.கே.ரித்தீஷை. அரசியலில் நுழைவதற்கு முன்பும் சரி, திமுக வில் எம்.பியாக இருந்த போதும் சரி, சாதாரண நடிகராக அறிமுகமான காலத்திலும் சரி, வந்தவர் போனவருக்கெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்து ‘யார்யா இந்தாளு…?’ என்று கோடம்பாக்கத்தையே திகைக்க வைத்தவர். தற்போது அதிமுக வின் முக்கிய பிரமுகர் ஆகிவிட்டார் ரித்தீஷ். முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்ட பின்பு மீண்டும் படங்களில் நடிப்பது குறித்து பரீசிலித்து வரும் இந்நேரத்தில், அவரால் ஒரு சர்ச்சை.

நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக இவர் பத்து லட்சம் பணம் கொடுத்ததாகவும், அதை நடிகர் சங்கம் கணக்கிலேயே வரவு வைக்கவில்லை என்றும் சமீபத்தில் விஷால் ஒரு குற்றச்சாட்டை கூறியிருந்தார். அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதை தொடர்ந்து இதற்கு பதிலளித்த நடிகர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் கே.என்.காளை, ‘ஜே.கே.ரித்தீஷ் பத்து லட்சம் தர்றதா சொன்னாரு. ஆனால் ஒன்றரை லட்சம்தான் கொடுத்தார் ’ என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து அதிருப்திக்கு ஆளாகியிருந்தார் கே.கே.ரித்தீஷ். விஷாலை சந்திக்க வேண்டும் என்று விரும்பினாராம். இந்த தகவல் காற்று வாக்கில் காதில் வர துடிப்பாகிவிட்டார் விஷால். ரித்தீஷின் நண்பரும், அதிமுக பிரமுகரும் வளரும் நடிகருமான விஜய் கார்த்திக்கிடம், ‘நானும் ரித்தீஷை சந்திக்க விரும்புகிறேன்’ என்றாராம்.

எதற்காகவும் தாமதிக்காத விஜய் கார்த்திக், இன்று ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் இருவரையும் சந்திக்க வைத்துவிட்டார். அதை தொடர்ந்து ‘நடிகர் சங்க தேர்தலில் என் ஆதரவு உங்களுக்குதான்’ என்று கூறிவிட்டாராம் ரித்தீஷ். அதுமட்டுமல்ல, உடனடியாக மதுரையிலிருக்கும் சுமார் 150 நாடக நடிகர்களை சென்னைக்கு வரவழைத்து விஷாலை சந்திக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார்.

நடிகர் சங்க விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ் இப்படியொரு முடிவை எடுக்கும் முன்பாக கட்சி தலைமையிடமும் முன் அனுமதி வாங்கியதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. அது நிஜமா இல்லையா என்பதை அவரே வாய் திறந்து சொன்னால்தான் உண்டு.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Naalu Policesum Nalla Irundha Oorum | (4PNO) Official Trailer

https://youtu.be/4Ty3ndY-s7A

Close