மலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்!
அவரது மரணச் செய்தியை கேட்ட ஒவ்வொரு இதயமும் ஒரு நிமிஷம் நின்று துடித்ததுதான் நிஜம்! சட்டென்று பிடிக்கிற முகம் அல்ல அது. ஆனால் ‘முதலில் உன்னை நீ ரசி… அப்புறம் உலகம் உன்னை ரசிக்கும்’ என்பதை நிகழ்த்திக் காட்டிய மேஜிக்காரன் ஜே.கே.ரித்திஷ்.
‘கானல் நீர்’ படத்தின் மூலம் அறிமுகமான ரித்திஷ், அப்படம் காக்காய் கிளறிய உப்புமா என்று தெரிந்தும் அதையும் ஓட வைக்க செய்த தந்திரங்கள், அதற்கப்புறம் வந்த பவர்ஸ்டார், பப்ளிக் ஸ்டாருக்கெல்லாம் ஒரு கைடாகவே இருந்தது. ஒரு சினிமா ஹீரோ திரையில் மட்டுமே செய்கிற அற்புதங்களை அவர் நிஜத்தில் செய்ய ஆரம்பித்தார். அதுவே அவரை நிஜக் கதாநாயகன் ஆக்கியது.
அவர் போகிற இடமெல்லாம் ஒரு பெரும் கூட்டம் காத்திருந்தது. நின்றால், நடந்தால் ‘தெய்வமே’ என்று கொண்டாடியது ஊர். ஆயிரம் ஐநூறுகளை தினத்தந்தி பேப்பரை வீட்டு வாசலில் வீசிவிட்டு செல்லும் ஒரு பேப்பர் பாய் போல வீசி எறிந்து கொண்டேயிருந்தார் ரித்தீஷ். அவ்வளவையும் கடமையே என்று செய்யாமல், உள்ளன்போடு செய்ததுதான் அவரை மலிவு விலை மக்கள் திலகமாக்கியது!
துணை நடிகர்கள் பலருக்கும் தங்க சுரங்கம் போல கதவுகளை திறந்து வைத்தார். அள்ளி அள்ளி வீசிய அவரது அன்புக்கு முன் அடிமையாகிப் போனார்கள் அவர்கள்.
ஒரு சின்ன சம்பவம். தியாகராய நகரில் ஒரு சக்கர நாற்காலியில் ஒரு ஊனமுற்றவர் சென்று கொண்டிருந்தார். அவரது சைக்கிளின் பின் புறத்தில் ‘என் கடவுள் ஜே.கே.ரித்திஷ்’ என்று எழுதப்பட்டிருந்தது. அவரை மறித்த பத்திரிகையாளர் ஏக்நாத், “என்னங்க இப்படி எழுதியிருக்கீங்க?” என்று கேட்க அதற்கு அவர் சொன்ன பதில்தான் ரித்திஷின் தங்க மனசுக்கு ஒரு சின்ன சாம்பிள்.
“ஒரு நாள் இரவு என் இரண்டு கால்களையும் தரையில் போட்டு இழுத்துக் கொண்டு கைகளால் தவழ்ந்தபடி சென்று கொண்டிருந்தேன். என்னை கடந்து போன பல நூறு கார்களில் ஹாரன் சப்தம் மட்டுமே ஒலித்தது. ஆனால் சட்டென்று நின்ற ஒரு காரிலிருந்து இறங்கினார் அந்த மனுஷன். அவரை இதற்கு முன் பார்த்தது கூட இல்லை நான். அருகில் வந்து அன்போடு விசாரித்தவர், என் முகவரியை வாங்கிக் கொண்டார். மறுநாள் காலை புத்தம் புதிய இந்த சக்கரவண்டியை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். நான் விசாரித்து தெரிந்து கொண்டேன்… அவர்தான் நடிகர் ஜே.கே.ரித்திஷ் என்று! ”
இப்படி சென்னையிலும் ராமநாதபுரத்திலும் ஏராளமான நிஜ கதைகள் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் ஜே.கே.ரித்திஷ் கடவுள்!
“நீங்க ஒரு கன்டெயினரை அப்படியே அடிச்சுட்டு போயிட்டீங்களாம், அந்த பணத்தைதான் தண்ணீராக வாரி இறைக்கிறீர்களாம்..”. நிருபர் ஒருவரின் கேள்விக்கு ரித்திஷ் சொன்ன பதில், “என் தாத்தா சுப.தங்கவேலன் பல வருஷங்களாக ராமநாதபுரம் தொகுதி எம்.பி. 500 கோடிக்கு மேல் எனக்கு சொத்து இருக்கு. சொல்றவங்க சொல்லட்டும்ணே… எனக்கொரு வருத்தமும் இல்ல”
நாய் உருட்டிய தேங்காய் போல கட்டுக் கட்டாக பணத்தை வைத்திருந்து கடைசி வரை அனுபவிக்காமலும், அடுத்தவனுக்கு பத்து பைசா ஈயாமலும் செத்துப்போன பல்லாயிரக்கணக்கானோர் வாழ்ந்த இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிற பூமி இது. இங்குதான் இருப்பதே கொடுப்பதற்கு என்று வாழ்ந்து மறைந்திருக்கிறார் ரித்தீஷ்.
சீன பெருஞ்சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராதாரவி, சரத்குமார் இருவரையும் அசைத்துப் நொறுக்கி நடிகர் விஷாலை சங்கத் தலைவராக்கியது ஜே.கே.ரித்திஷ்தான். அவரை நம்பி ஏராளமான நாடக நடிகர்களின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. அவரது மரணம் பணம் படைத்த நடிகர்களை பதற விட்டிருக்கிறது. அது சாதாரணம். அதைவிட பஞ்சை பராரிகளை கதற விட்டதுதான் உண்மை.
ஒரு கிங் மேக்கராக இருந்த ஜே.கே.ரித்திஷின் மறைவுக்கு சென்னையிலிருந்து ஒரு கிங் கூட போகவில்லை என்பதுதான் பெரும் சோகம். நடிகர் சங்கம் சார்பில் கார்த்தி மலர் வளையம் வைத்திருக்கிறார். விஷாலுக்கு என்ன பொல்லாத வேலையோ?
தம்மடிக்கிற வழக்கம் இல்லை. தண்ணியடிக்கிற பழக்கமும் இல்லை. வந்தவர்களுக்கெல்லாம் விருந்தோம்பிய மனுஷனுக்கு ஏற்கனவே ஒருமுறை பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்ததாம். ஒரு வருஷமாவது முழு ஓய்வு எடுத்திருக்க வேண்டும். ஆனால், அரசியல், நடிகர் சங்கம் என்று பல்வேறு தலைவலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டார் அவர்.
சொல்லப் போனால் ஒட்டுமொத்த திரையுலகமே போய் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அவரது மரண அஞ்சலிக்காக கூடிய கூட்டத்தில் நடிகர் நடிகைகள் எண்ணிக்கை சொற்பம்தான்.
கிங் மேக்கர்கள் ஒருபோதும் கிங்குகளை தேர்வு செய்வதில்லை. காமராஜ் காலத்தில் ஆரம்பித்து சசிகலா காலம் வரைக்கும் கூட அதுதான் யதார்த்தம். அரசியலில் அவர்கள் உதாரணம் என்றால், சினிமாவில் ஒரு உதாரணம் ஜே.கே.ரித்திஷ் !
போய் வா வள்ளலே…!
-ஆர்.எஸ்.அந்தணன்
சமீபத்தில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆழ்த்திய மரண செய்தி ரித்தீஷ் அவர்களது மரணமே. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.